தூய மேரி மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை 14-ஆம் லியோ
மெரினா ராஜ் – வத்திக்கான்
நமது செப வாழ்வை வாழ உதவுகின்ற, அன்னை மரியின் மேல் கொண்ட பக்தியை வளர்க்கின்ற, கடவுளின் தாயாம் அன்னை மரியாவிடம் நம்மை நெருங்கிக் கொண்டு செல்கின்ற அனைவருக்கும் நன்றி என்று கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 25, ஞாயிறு மாலை உரோம் நகர் பாதுகாவலியாம் தூய மேரி மேஜர் பெருங்கோவில் பொறுப்பேற்கும் விதமாக, அன்னை மரியா பெருங்கோவிலின் மேல்மாடத்தின் இருந்து இறைமக்களுக்கு வாழ்த்து கூறியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மேரி மேஜர் பெருங்கோவிலின் பணிப்பொறுப்பேற்கும் விதமாக அங்கு சென்ற திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், சவுலியுஸ் போப்போலி ரொமானி என்ற அன்னை மரியா திருவுருவப் படத்தின் முன் முழந்தாள்படியிட்டு சிறிது நேரம் செபித்தார். அன்னைக்கு மலர்க்கொத்து அர்ப்பணித்த திருத்தந்தை ஆலயத்தில் இருந்த மக்களுக்கு ஆசீர் வழங்கினார். அதன்பின் சிற்றாலயத்தின் அருகில் இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கல்லறை அருகில் சென்று செபித்தார். இறுதியாக பெருங்கோவிலின் மேல் மாடத்தில் நின்று வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு ஆசீர்வழங்கினார்.
உரோம் நகர மக்களின் தேவைகளில் துணை நிற்கும் அன்னை மரியின் மேல் கொண்ட பக்தியைப் புதுப்பிக்கின்ற ஒரு வாய்ப்பாக இந்நிகழ்வைக் கருத்துவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று கூறி தனது வாழ்த்துக்களை மக்களுக்குக் கூறினார்.
கூடியிருந்த மக்கள் அனைவரையும், அவர்களது குடும்பங்களையும், அன்புக்குரியவர்களையும் எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கடவுளில் ஒரே குடும்பமாக, ஒற்றுமையாக, திருஅவையில் இணைந்து நடக்க நம் அனைவருக்கும் உதவும்படி இறைவனின் தாயான அன்னை மரியின் பரிந்துரையை நாடி செபிக்க வலியுறுத்தினார்.
கூடியிருந்த மக்கள் அனைவரையும் அன்னை மரியாவை நோக்கிய செபத்தை ஒருமித்துக் கூற அழைத்த திருத்தந்தை அவர்கள், அருள் நிறைந்த மரியாளே வாழ்க என்ற செபத்திற்குப் பின் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தனது ஆசீரினை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்