MAP

உங்களோடு கிறிஸ்தவராக, உங்களுக்கு ஆயராக – திருத்தந்தை 14-ஆம் லியோ

யூபிலி ஆண்டில் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் நமது நம்பிக்கையை வாழ்வின் எல்லா கடினமான சூழலிலும் வாழ வலியுறுத்தப்படுகின்றோம்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கிறிஸ்தவர்களாகிய நாம் எப்போதும் உயிருள்ள சான்றுகளாகத் திகழ வேண்டுமெனக் கடவுள் அழைக்கின்றார் என்றும், நம்பிக்கையை வாழ்வது என்பது வாழும் இயேசு கிறிஸ்துவை நமது உள்ளங்களில் உணர்வது, அவர் எப்போதும் நம் வாழ்க்கைப் பயணத்தில் நம்முடன் இருப்பதை அறிந்துகொள்வது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

மே 25, ஞாயிறு மாலை உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் நிறைவேற்றியத் திருப்பலிக்குப் பின் பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்கள் முன்பாக மேல்மாடத்தில் தோன்றியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

“உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று தனது உரையினைத் துவக்கி, கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், இந்த யூபிலி ஆண்டில் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் நமது நம்பிக்கையை வாழ்வின் எல்லா கடினமான சூழலிலும் வாழ வலியுறுத்தப்படுகின்றோம் என்றும் கூறினார்.     

இவ்வுலகமானது போர், வன்முறை, வறுமை போன்றவற்றால் அளவுக்கு அதிகமான வன்முறையை அனுபவித்து வருகின்றது என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், எதிர்நோக்கைத் தேடி, நம்பிக்கையுடன் வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் நம்மையே சான்றாக வழங்கி இந்த உலகத்திற்கு எதிர்நோக்கை வழங்குபவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

உங்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அனைவரும் ஒன்றிணைந்து நடப்போம், “உங்களோடு கிறிஸ்தவராகவும், உங்களுக்கு ஆயராகவும் நான் இருக்கிறேன்” என்ற புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து தனது ஆசீரினை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 மே 2025, 12:37