MAP

வத்திக்கான் வளாகம் வத்திக்கான் வளாகம்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – திருத்தந்தையரின் பணியேற்பு விழா

திருஅவையை வழிநடத்த கர்தினால்கள் அவையில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய திருத்தந்தை, திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் நாளானது பல நூற்றாண்டுகளாக முடிசூட்டு விழா என்றே அழைக்கப்பட்டது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தன்னலமில்லாது தன் உள்ளத்தைத் துறந்து, நிகழ்காலத் தாக்கங்கள் அறிந்து வழிநடத்தும் சூழல் புரிந்து தன்னுடன் இருப்பவர்களை தட்டிக்கொடுப்பவரே நல்ல தலைமைத்துவப் பண்பு உடையவர் என்று ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் புகழப்படுகின்றார். சரியான செயல்களைச் செய்பவர் தலைவர். செயல்களை சரியாகச் செய்பவர் மேலாளர் என்கின்றார் அறிஞர் பீட்டர் டிரக்கர். திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாக வருகின்ற மே 18 ஞாயிற்றுக்கிழமையன்று பணியேற்க இருக்கின்றார் நமது புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ. எனவே இன்றைய நமது வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில் திருத்தந்தையர் முடிசூட்டு விழா என்று அழைக்கப்படும் பணியேற்பு விழா பற்றிய தகவல்களையும் திருத்தந்தையின் சின்னத்தில் இடம்பெற்றிருக்கும் உருவங்கள் மற்றும் விருதுவாக்குக் குறித்துக் காணலாம்.  

திருத்தந்தையரின் முடிசூட்டு (பணியேற்பு) விழா

திருஅவையை வழிநடத்த கர்தினால்கள் அவையில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய திருத்தந்தை, திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் நாளானது பல நூற்றாண்டுகளாக முடிசூட்டு விழா என்றே அழைக்கப்பட்டது. 1143-ஆம் ஆண்டு, அக்டோபர் 3-ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் செலஸ்தீன் அவர்களே முதன் முறையாக முடிசூட்டப்பட்டார். மூன்றடுக்கு கொண்ட இந்த மகுடம் அவருக்குப் பின் வந்த திருத்தந்தையர்களுக்குச் சூட்டப்பட்டது. பல நூறு ஆண்டுகள் திருஅவையில் கடைபிடிக்கப்படும் இந்த முடிசூட்டு விழாவில் நடைபெறும் ஒரு சடங்கு மிகவும் கருத்தாழம் மிக்கதாக அமைந்திருந்தது.

முடிசூட்டும் சடங்கிற்கு முன்னதாக, திருத்தந்தையாகப் பொறுப்பேற்பவர் ஓர் அரியணையில் அமர்ந்திருக்க, அவ்வரியணையை பலர் சுமந்த வண்ணம் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஊர்வலம் வருவர். இந்த ஊர்வலம் மூன்று முறை நிறுத்தப்படும். ஒவ்வொரு நிறுத்தத்தின்போதும் மெல்லிய இறகுகள் போன்ற பொருள்களால் அமைந்த ஒரு பந்தம் தீயிட்டுக் கொளுத்தப்படும். அப்போது, ஊர்வலத்தை முன்னின்று நடத்தியவர் இலத்தீன் மொழியில், "Pater sancte, sic transit gloria mundi" அதாவது, "தூய திருத்தந்தையே இவ்வுலகப் பெருமை இதுபோலக் கடக்கும்" என்று கூறுவார். மும்முறை இவ்விதம் நடந்தபின், ஊர்வலம் திருப்பலி பீடத்தை அடைந்து, அங்கு திருத்தந்தைக்கு மகுடம் அணிவிக்கப்படும்.

திருத்தந்தை புனித  ஆறாம் பவுல் அவர்கள் 1963ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் இந்த மகுடத்தை அணிந்ததே இறுதி முறையாக அமைந்திருந்தது. இவ்விழாவுக்குப்பின் அவர் அதை மீண்டும் அணியவே இல்லை. அவருக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் ஜான்பால், மகுடம் அணியும் சடங்குக்குப் பதிலாக, 'Pallium' எனப்படும் கழுத்துப்பட்டை அணியும் சடங்கை அறிமுகப்படுத்தினார். திருத்தந்தை தலைமைப் பொறுப்பை ஏற்கும் நாள், அண்மைக் காலங்களில், முடிசூட்டு விழா என்பதற்குப் பதிலாக, பணியேற்பு விழா என்றே அழைக்கப்படுகிறது. திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்களுக்குப் பின் வந்த  திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால், 16ஆம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ் அனைவரும் 'Pallium' அணியும் சடங்கையே பின்பற்றினர்.

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் ஆட்சி முத்திரை

கடவுளில் ஒன்றாய் என்று பொருள்படும் “In Illo uno unum” என்ற புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளை தனது ஆயர் பணியின் போது விருதுவாக்காக எடுத்து செயல்பட்டவர் நம் புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ. அம்பினால் துளைக்கப்பட்ட இதயம் மற்றும் மூடிய புத்தகத்தின் உருவமானது “இப்போனா” மறைமாவட்ட ஆயராக இருந்த தூய அகுஸ்தீனை அடையாளப்படுத்துகின்றது. திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் விருதுவாக்கு மற்றும் ஆட்சி முத்திரையானது கடந்த மே 10 சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டன.

இந்த மரபுச் சின்னத்தில் குறுக்காக இரண்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு கேடயம் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலிருக்கும் பகுதி நீல நிறத்திலும் அதில் மூன்று இதழ்கள் கொண்ட வெள்ளை நிற லில்லி மலரும் வரையப்பட்டுள்ளது. கீழிருக்கும் பகுதியானது அலர் மஞ்சல் நிறத்தில் தூய அகுஸ்தீனை அடையாளப்படுத்தும் வண்ணம் மூடிய புத்தகம் அதன் மேல் அம்பினால் துளைக்கப்பட்ட இதயத்தினைக் கொண்டுள்ளது. தூய அகுஸ்தீனின் மனமாற்றத்தை அடையாளப்படுத்தும் இச்சின்னங்களானது "நீங்கள் உங்கள் வார்த்தையால் என் இதயத்தைத் துளைத்தீர்கள்" என்ற அவரின் வார்த்தைகளை அடையாளப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. இக்கேடயத்தின் கீழே தூய அகுஸ்தீனின்  தனது வாழ்வில் ஒரு மறையுரையின்போது கூறிய வார்த்தைகளான “In Illo uno unum” கடவுளில் ஒன்றாய் என்பதும் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வார்த்தைகளையே நமது புதிய திருத்தந்தை 14-ஆ லியோ அவர்கள் தனது ஆயர் பனியின்போது விருதுவாக்காகக் கொண்டிருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவர்களாகிய நாம் பலராக இருந்தாலும், ஒரே கிறிஸ்துவில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்த தூய அகுஸ்தீன் கூறிய வார்த்தைகளே இவை. 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம்  வத்திக்கான் வானொலி செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலின்போது கூட ஒன்றிப்பு, பங்கேற்பு, பணி என்னும் மூன்றும் கூட்டொருங்கியக்கத் திருஅவையின் மிக முக்கியமான பணி என்று எடுத்துரைத்தவர் திருத்தந்தை 14ஆம் லியொ.

யோவான் நற்செய்தியில் உயிர்த்த இயேசு சீமோன் பேதுருவிடம் என்னை அன்பு செய்கின்றாயா என்று மூன்று முறை கேட்டு அதன்பின், என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர், என் ஆடுகளை மேய், என் ஆடுகளைப் பேணி வளர், என்று கூறி திருஅவையை வழிநடத்தும் பொறுப்பினை வழங்கியதை நினைவுகூரும் வண்ணம்  திருத்தந்தையர் முடிசூட்டும் நிகழ்வானது நடைபெற்று வருகின்றது. உரோம் நகரின் ஆயராகவும், கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி,  மறைசாட்சியாக தனது உயிரைக் கையளித்த திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலாகவும் பொறுப்பேற்கும் நிகழ்வானது வத்திக்கான் வளாகத்தில் நடைபெற உள்ளது. பணியேற்பு சடங்கு வழிபாடானது நடைபெற்று வாக்குறுதிகள் வழியாக திருஅவையை வழிநடத்தும் பொறுப்பினை ஏற்க இருக்கின்றார் புதிய திருத்தந்தை. திருப்பலியில் இடம்பெறும் வாசகங்கள் திருஅவையின் மூலைக்கல்லான கிறிஸ்துவையும் அத்திருஅவையின் அடித்தளமாக இருக்கும் திருத்த்தூதர் பேதுருவையும் அடையாளப்படுத்தும் வண்ணம் எடுத்துரைக்கப்படுகின்றன. கிறிஸ்துவிற்காகத் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த திருத்தூதர் பேதுருவின் தூய்மையான இரத்தம் சிந்தப்பட்ட வத்திக்கானில் திருஅவையை வழிநடத்த இருக்கும் புதிய திருத்தந்தை பொறுப்பேற்கின்ற அல்லது பணியேற்கின்ற சடங்கு நிகழ்வது உணர்ச்சிப் பெருக்கை உள்ளத்தில் ஊட்டும். திருத்தூதர் பேதுருவை மட்டுமன்றி கிறிஸ்துவுக்காகவும் கிறிஸ்தவம் இம்மண்ணில் வளர்ந்து செழிக்க நிலைத்து நிற்க மறைசாட்சிகளாக மரித்த அனைவரையும் நினைவுகூர அழைக்கின்றது.    

வத்திக்கான் மேல் மாடத்தில் உயிர்த்த இயேசு சீடர்களுக்குத் தோன்றி அதிகமான மீன்களைப் பிடிக்க வலையைப் போடச் சொன்ன பகுதியானது அதாவது இயேசு பேதுரு மற்றும் சீடர்களுடன் உரையாடுவது போன்ற நிகழ்வானது திரைச்சீலைகளில் வரையப்பட்டு தொங்கவிடப்பட உள்ளது.

உலகெங்கிலும் உள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் திருஅவையை வழிநடத்த இருக்கும் 267-ஆவது திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் பணியேற்பு விழாவில் பங்கேற்க ஆவலுடன் வத்திக்கானை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். புதிய திருத்தந்தையின் பணி சிறக்க நாம் தொடர்ந்து செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 மே 2025, 15:57