இறைவா உமக்கே புகழ் சுற்றுமடலின் பத்தாம் ஆண்டு
மெரினா ராஜ் - வத்திக்கான்
நிலையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பின்தொடர்வதில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும், இறைத்தந்தையால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டு வாழ வேண்டும் என்பதை இறைவா உமக்கே புகழ் என்ற சுற்றுமடல் வலியுறுத்துகின்றது என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 24, சனிக்கிழமை (LaudatoSi) “இறைவா உமக்கே புகழ்” என்னும் தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் படைத்து வெளியிட்ட சுற்றுச்சூழல் குறித்த சுற்றுமடலின் 10-ஆம் ஆண்டை முன்னிட்டு இவ்வாறு தனது கருத்துக்களைத் தன்னுடைய X வலைதளத்தில் முதல் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலானது நாம் வாழ்கின்ற இந்தப் பூமியின் எதிர்காலத்தை நாம் எவ்வாறு உருவாக்குகிறோம் என்பது குறித்த உரையாடலைப் புதுப்பிக்க நம்மை அழைக்கிறது என்றும், நிலையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பின்தொடர்வதில் நாம் ஒன்றுபட்டு, கடவுளால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொதுவான வீட்டைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டு, எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குகிறோம் என்பது குறித்த உரையாடலைப் புதுப்பிக்க அழைக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
2015 -ஆம் ஆண்டு மே மாதம் வெளியான 'இறைவா உமக்கே புகழ்' திருமடலின் வழியாக மாறி வரும் காலநிலைச்சூழல்களால் மனித குலத்திற்கு தொடர்ந்து சவால்கள் விடுத்துவரும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களைக் குறித்து எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நமது பொதுவான இல்லமாகிய இப்பூமி சந்தித்துவரும் பல்வேறு நெருக்கடிகள், உண்மையான மத நம்பிக்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித வாழ்வானது கடவுள், அயலார், உலகம் என்ற மூன்று தொடர்புகள் வழியே இயங்கவேண்டும் என்னும் மூன்று கருத்துக்களை அதிகமாக உள்ளடக்கிய சுற்றுமடலாக இறைவா உமக்கே புகழ் திகழ்கின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்