MAP

திருத்தூதர் பேதுரு ஒரு மேய்ப்பராக மக்களுடன் இருந்தார்

பேதுருவின் வழித்தோன்றல்களாக வருபவரை கடவுள் தான் தேர்ந்தெடுக்கின்றார், அவரே உடன் இருக்கின்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருத்தூதர் பேதுருவின் வாரிசாக வழித்தோன்றலாக இருக்கும் திருத்தந்தையர்கள், ஒரு மேய்ப்பராக மக்களுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்றும், இயேசுவின் வார்த்தைகளை அருள்அடையாளங்களைக் கண்டு அவர்மேல் நம்பிக்கை கொண்ட பேதுரு போல அவருடைய ஆற்றலை எல்லா சூழல்களிலும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நேர்காணல் ஒன்றில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ESNE (“El Sembrador, Nueva Evangelización”) எனப்படும் இஸ்பானிய வானொலி மற்றும் தொலைக்காட்டி நிகழ்வுக்காக அதன் நிறுவனர் Noel Díaz அவர்கள் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை (2021) வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து உரையாடிய நேர்காணலானது அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

நற்செய்தியில் இடம்பெறும் இயேசுவுக்கும் அவரது சீடருக்கும் இடையிலான உரையாடல்களிலிருந்து ஒரு சில பகுதிகளைத் தியானித்து திருத்தந்தையர்கள் உலகத்தின் நடுவில் ஒரு தாழ்ச்சியுள்ள ஊழியராக இருக்கவேண்டும் என்பது பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் மீது முழு நம்பிக்கை, பலவீனமானவர், நாம் அனைவரும் பாவிகள் என்ற விழிப்புணர்வு, அனைவருக்கும் பணியாற்றுவதற்கான புதிய அழைப்பு, சமகால மறைசாட்சிகள் பற்றிய அவரது எண்ணம், புலம்பெயர்ந்தோர் மீதான அவரது அக்கறை ஆகியவை குறித்த கருத்துக்களை இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதர் பேதுரு தன்னுடைய பலவீனத்திலும் கடவுளின் அருள் செயல்படுகின்றது என்பதை அதிகமாக உணர்ந்தவர் என்றும், எனது மந்தையைப் பேணி வளர் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கிணங்க அவரால் அருள்பொழிவு செய்யப்பட்டு அப்பணியினை முழுமனதுடன் செய்தார் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பேதுருவின் வழித்தோன்றல்களாக வருபவரை கடவுள் தான் தேர்ந்தெடுக்கின்றார், அவரே உடன் இருக்கின்றார், எனவே எனது பணிக்காலத்தில் அவர் என்னுடன் இருக்கின்றார் என்மீது அக்கறை கொண்டு என்னை வழிநடத்துகின்றார் என்றும் பகிர்ந்துள்ள திருத்தந்தை அவர்கள், சீமோனே உன் பெயர் பாறை இந்த பாறையின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன் என்ற இயேசு, அதன்படி அவரை அழைத்து திருஅவையை வழிநடத்தும் திடனை அளித்தார், அவர் வழி வருபவர்களுக்கும் தொடர்ந்து அத்திடனை அளித்து வருகின்றார் என்றும் கூறியுள்ளார்.

இயேசுவை மெசியா என்று அறிக்கையிட்டது, மூன்று முறை மறுதலித்தது, நான் உம்மை அன்பு செய்கின்றேன் என்று உமக்கத் தெரியுமே என்று இயேசுவுக்கு கூறியது, தான் பாவி தன்னை விட்டு போய்விடும் என்று எடுத்துரைத்தது, என பேதுருவும் இயேசுவும் மேற்கொண்ட உரையாடல்களில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ள திருத்தந்தை அவர்கள், மறைசாட்சிகளின் சான்றுள்ள வாழ்வு, புலம்பெயர்ந்தோர் பற்றியும் எடுத்துரைத்து தனது ஆசீரை வழங்கி நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 மே 2025, 11:36