திருஅவையின் 267 - ஆவது திருத்தந்தை பதினான்காம் லியோ
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருஅவையை வழிநடத்தும் 267-ஆவது திருத்தந்தையாக அகுஸ்தீன் சபையைச் சார்ந்த கர்தினால் Robert Francis, O.S.A. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Robert Francis Prevost என்னும் இயற்பெயர் கொண்ட கர்தினால் அவர்களை திருஅவையின் திருத்தந்தையாக கர்தினால் தோமினிக் மம்பர்த்தி அவர்கள் மே 8, வியாழன் மாலை 7.30 மணியளவில் வத்திக்கான் வளாகத்தின் மேல் மாடத்தில் இருந்து அறிவித்தார்.
வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக, மேல் மாடத்தில் தோன்றிய கர்தினால் தோமினிக் மம்பர்த்தி அவர்கள், Annuntio vobis gaudium magnum: habemus Papam!, “நான் உங்களுக்கு ஒரு பெரிய மகிழ்வான செய்தியை அறிவிக்கிறேன்: நாம் ஒரு திருத்தந்தையைப் பெற்றுவிட்டோம்” என்று கூறினார்.
திருஅவையை வழிநடத்தும் 267வது திருத்தந்தையாக அகுஸ்தீன் சபையைச் சார்ந்த கர்தினால் Robert Francis, O.S.A. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிகாகோவைச் சார்ந்த இவர், பதினான்காம் லியோ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
1955 - ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அமெரிக்காவின் சிகாகோவில் (Illinois) பிறந்தவர் புதிய திருத்தந்தை 14ஆம் லியோ. அகுஸ்தினார் துறவு சபையில் இணைந்த இவர் 2001 முதல் 2013 வரை அத்துறவு சபையின் அதிபராக பணியாற்றியுள்ளார்.
2014-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவரை கல்லோ மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், 2023, ஜனவரி 30, அன்று, ஆயர்களுக்கான திருப்பீடத்துறையின் புதிய தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமித்தார். அதே ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி கர்தினாலாக உயர்த்தப்பட்டார். புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள (ஏறக்குறைய 70) 69 வயதுடைய கர்தினால் இராபர்ட் பிரான்சிஸ் ப்ரவோஸ்ட் அவர்கள், அகுஸ்தீன் சபையைச் சார்ந்த முதல் திருத்தந்தை.
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பின் திருஅவை பொறுப்பேற்கும் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த இரண்டாவது திருத்தந்தையாவார் இவர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வடக்குப் பகுதியில் பிறந்து தெற்கில் பணியாற்றிய பெருமைக்குரியவர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கல்லோ மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், திருப்பீட ஆயர்பேரவைக்கான தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்