MAP

புதிய திருத்தந்தையின் முதல் ஊர்பி எத் ஓர்பி செய்தி புதிய திருத்தந்தையின் முதல் ஊர்பி எத் ஓர்பி செய்தி  (ANSA)

புதிய திருத்தந்தையின் முதல் ஊர்பி எத் ஓர்பி செய்தி

மே 8, உரோம் உள்ளூர் நேரம் மாலை 7.30 மணியளவில் வத்திக்கான் மேல்மாடத்தில் மக்கள் முன் தோன்றிய புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் ஊருக்கும் உலகிற்குமான ஊர்பி எத் ஓர்பி சிறப்பு உரையையும் ஆசீரையும் மக்களுக்கு வழங்கினார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்! என்று இத்தாலிய மொழியில் கூறி தனது முதல் வாழ்த்துரையையும் ஆசீர் உரையையும் மக்களுக்கு வழங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மே 8, உரோம் உள்ளூர் நேரம் மாலை 7.30 மணியளவில் வத்திக்கான் மேல்மாடத்தில் மக்கள் முன் தோன்றிய புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் ஊருக்கும் உலகிற்குமான ஊர்பி எத் ஓர்பி சிறப்பு உரையையும் ஆசீரையும் மக்களுக்கு வழங்கினார். ஏறக்குறைய வத்திக்கான வளாகத்தில் இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடியிருக்க அவர்கள் முன் தோன்றிய திருத்தந்தை அவர்கள் அமைதி பற்றிய கருத்துக்களை அதிகமாக வலியுறுத்தினார்.

புதிய திருத்தந்தையின் வாழ்த்துரை

உங்களுக்கு அமைதி உரித்தாகுக!

அன்பான சகோதர சகோதரிகளே, கடவுளின் மந்தையாம் மக்களுக்காகத் தனது உயிரைக் கொடுத்த நல்லாயனாம் உயிர்த்த இயேசு கிறிஸ்து கூறிய முதல் வார்த்தைகள் இவை. இந்த அமைதியின் வாழ்த்து உங்கள் இதயங்களில் நுழைந்து, உங்கள் குடும்பங்களுக்கும், உலகின் எல்லா திசைகளில் இருக்கும் மக்கள் எல்லாருக்கும், பூமியெங்கும் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்!

இது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அமைதி, ஆயுதங்களைக் களையும் அமைதி, தாழ்ச்சி மற்றும் விடாமுயற்சியுள்ள அமைதி. நம் அனைவரையும் அளவின்றி அன்பு செய்யும் கடவுளிடமிருந்து இந்த அமைதி வருகிறது. தனது மெலிதான மற்றும் உறுதியான குரலால் உரோம் நகர மக்களுக்கு ஆசீர் அளித்த மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் குரல் இன்றும் நமது காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கின்றது.

உரோம் நகரையும் உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவரையும் ஆசீர்வதித்து முழு உலகத்திற்கும் தனது ஆசீரை, உயிர்ப்பு ஞாயிறன்று காலை வழங்கினார் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ். அதே ஆசீரை நானும் இன்று உங்களுக்குக் கூறுகின்றேன். “கடவுள் நம்மை அன்பு செய்கின்றார், நம் அனைவரையும் அன்பு செய்கின்றார். தீமை வெற்றிபெறாது! நாம் அனைவரும் கடவுளின் கைகளில் இருக்கிறோம். எனவே, பயமின்றி, கடவுளுடன் ஒருவருக்கொருவர் கரம் கோர்த்து முன்னேறுவோம். நாம் கிறிஸ்துவின் சீடர்கள். கிறிஸ்து நமக்கு முன் செல்கிறார். உலகத்திற்கு அவருடைய ஒளி தேவை. மனிதகுலம் கடவுளையும் அவரது அன்பையும்  அடைய உதவும் பாலமாக மனித குலத்திற்கு அவருடைய ஒளி தேவை. உரையாடல், சந்திப்பு வழியாக பாலங்களை கட்டவும், எப்போதும் அமைதியுடன் ஒரே மக்களாக இருக்க நம்மை ஒன்றிணைக்கவும், ஒருவருக்கொருவர் உதவுவோம்”. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி!

திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலாக என்னைத் தேர்ந்தெடுத்த கர்தினால்கள் அனைவருக்கும் நன்றி. அனைவருடன் இணைந்து நடக்கவும், எப்போதும் அமைதி மற்றும் நீதியைத் தேடும் கூட்டொருங்கியக்கத் திருஅவையாகவும், எப்போதும் இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவராகவும், பயமின்றி நற்செய்தியை அறிவிக்கவும், மறைப்பணியாற்றவும் என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக நன்றி கூறுகின்றேன்.

"உங்களுடன் நான் ஒரு கிறிஸ்தவன், உங்களுக்காக ஓர் ஆயர்” என்று கூறும் அகுஸ்தினாரின் சபையைச் சார்ந்தவன் அவரது மகன். இத்தகைய மனநிலையோடு நம்மால் கடவுள் நமக்காகத் தயாரித்த அந்த உரிமைச்சொத்தை நோக்கி ஒன்றாக இணைந்து நடக்க முடியும்.

உரோம் திருஅவையை சிறப்பாக வாழ்த்துகின்றேன். மறைப்பணியாற்றும் திருஅவையாக, பாலங்களை உருவாக்கும் திருஅவையாக, திறந்த கரங்களுடன் இருக்கும் இந்த வத்திக்கான் வளாகத்தைப் போல எப்போதும் திறந்திருக்கும் உரையாடலை எவ்வாறு உருவாக்குவது என்பதை நாம் ஒன்றாக இணைந்துத் தேட வேண்டும். நமது பணி, உடனிருப்பு, உரையாடல் மற்றும் அன்பு தேவைப்படும் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

பெருவின் சிக்லாயோவின் என் அன்பான மறைமாவட்ட மக்களுக்கு வாழ்த்து. இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள திருஅவையாக, நம்பிக்கையுள்ள மக்கள் தங்கள் ஆயருடன் இணைந்து தங்கள் நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டதற்காக நன்றி.

உரோம், இத்தாலி, உலகம் முழுவதிலுமிருந்து வரும் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வாழ்த்து. நாம் அனைவரும் கூட்டொருங்கியக்கத் திருஅவையாக, ஒன்றிணைந்து நடக்கும் திருஅவையாக, எப்போதும் அமைதி மற்றும் நீதியைத் தேடுகின்ற, துன்பப்படுபவர்களுக்கு எப்போதும் நெருக்கமாக இருக்க முயலுகின்ற ஒரு திருஅவையாக இருக்க விரும்புவோம்.

இன்று பொம்பே அன்னை மரியின் விழா நாள். நமது அன்னை மரியா எப்போதும் நம்முடன் நடக்கவும், நெருக்கமாக இருக்கவும், தனது பரிந்துரை மற்றும் அன்பினால் நமக்கு உதவவும் விரும்புகிறார்.

எனவே நான் உங்கள் அனைவரோடும் சேர்ந்து செபிக்க விரும்புகிறேன். இந்த புதிய பணிக்காக, முழு திருஅவைக்காக, உலக அமைதிக்காக நாம் ஒன்றாக இணைந்து செபிப்போம், மேலும் இந்த சிறப்பு அருளுக்காக நமது தாயான அன்னை மரியாவை நோக்கி செபிப்போம்.

என்று கூறி தனது உரையினை நிறைவு செய்த திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் அருள்மிகப்பெற்ற மரியே வாழ்க என்ற செபத்தை இறைமக்கள் கூட்டத்தோடு இணைந்து செபித்தார். அதன்பின் ஊருக்கும் உலகிற்குமான நிறைபலன் தரக்கூடிய ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீரினை வழங்கினார் புதிய திருத்தந்தை 14ஆம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 மே 2025, 11:54