MAP

வெண்புகை வெண்புகை   (AFP or licensors)

267 -ஆவது புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார்

சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைப்போக்கியிலிருந்து வெண்புகை வெளிவந்து, திருஅவையை வழிநடத்தும் 267-ஆவது திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துரைத்தது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மே 8 வியாழன் உரோம் உள்ளூர் நேரம் மாலை  6.08 மணியளவில் இந்திய இலங்கை நேரம் இரவு 9.38 மணியளவில் (இரண்டாம் நாள்) நான்காம் வாக்குப்பதிவிற்கான முடிவுகளை தெரிவிக்கும் வண்ணம் சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைப்போக்கியிலிருந்து வெண்புகை வெளிவந்து, திருஅவையை வழிநடத்தும் 267-ஆவது திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துரைத்தது.

மேலும் அடுத்த 3 நிமிடங்களில் 5 நிமிடங்களில் என தொடர்ந்து மீண்டும் வெண்புகை வெளியேறி திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துரைத்தது. மக்கள் அனைவரும் கரவொலி எழுப்ப, பெருங்கோவிலின் மணிகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தன.

வாக்குப்பதிவு தொடங்கிய முதல் நாள் முதல் இன்று வரை ஒவ்வொருமுறையும் புகை வெளிவரும் நேரத்தை எதிர்பார்த்து மக்கள் வத்திக்கான் வளாகத்தில் காத்திருந்தனர். மே 7 புதன் மாலை 45,000 பேரும் மே 8, வியாழன் காலை 15,000 பேரும் மாலையில் இலட்சக் கணக்கான மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். உலகளாவிய கத்தோலிக்க திருஅவையின் தலைவரை இந்த உலக மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக எண்ணற்ற செய்தித்தொடர்பாளர்கள் புகைப்படம் மற்றும் காணொளி வாயிலாக தங்களது நாடுகளிலும் கண்டங்களிலும் வசிக்கும் மக்களுக்கு வத்திக்கானில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்து ஒளிபரப்பி வந்தனர்.

வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் செப மனநிலையோடும் புதிய திருத்தந்தை யார் என அறியும் ஆவலிலும் சிஸ்டைன் சிற்றாலயப் புகைபோக்கியைப் பார்த்த வண்ணம் காத்திருந்த காட்சி மிக அழகானதொரு காட்சியாக இருந்தது. 

உரோம் உள்ளூர் நேரம் மாலை 6.08 க்கு வெண்புகை வெளிவர ஆரம்பித்ததும் மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கரங்களைத் தட்டி தங்களது மகிழ்வினை வெளிப்படுத்தினர். புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரம் மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வெண்ணிறப் புகையை வரவேற்றனர். வத்திக்கானைச் சுற்றி அமைந்திருந்த பல்வேறு சாலைகளும் போக்குவரத்திற்கு நிறுத்தப்பட, மக்கள் பல திசைகளிலிருந்தும் பெருங்கோவில் வளாகத்தை நோக்கி ஓடிச் சென்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 மே 2025, 18:12