இயேசுவில் இணைந்த வாழ்க்கை வாழ்ந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்வும், திருத்தூதுப்பணியும் திருஅவைக்கு மிகுந்த பலனைத் தந்தது, தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றது என்றும், அவரது வாழ்வு திராட்சைக் கொடியுடன் இணைந்த ஒரு கிளை போல, இயேசுவின் வாழ்க்கையுடன் இணைந்த ஒரு வாழ்க்கையாக இருந்தது என்றும் கூறினார் கர்தினால் Roland Makrickas.
மே 21, புதன்கிழமை மாலை உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலில், மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 30-ஆம் நாள் நினைவுத் திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலின் தலைமைப் பணியாளரும் லித்துவேனிய நாட்டைச் சார்ந்தவருமான கர்தினால் Roland Makrickas.
இறைமக்களுக்கான பணியில், ஓர் அருள்பணியாளராக, இயேசு சபை துறவியாக, ஆயராக, திருத்தந்தையாக, தனது வாழ்வை நிறைவாக வாழ்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மற்றும் உலக மக்களின் அன்பான அரவணைப்பினைப்பெற்று அன்னை மரியா பெருங்கோவிலில் இளைப்பாறுதல் பெறுகின்றார் என்றும் கூறினார் கர்தினால் மக்ரிக்காஸ்.
பன்னிரண்டு ஆண்டுகளாக, முழு திருஅவையை வெவ்வேறு வழிகளில், தனது பொருளுள்ள செயல்பாடுகள், ஞானமுள்ள வார்த்தைகள் மற்றும் ஒளி நிறைந்த புன்னகை வழியாக வழிநடத்தி கடவுளின் நெருக்கம், மென்மை மற்றும் இரக்கத்தை நாம் அனுபவிக்க உதவினார் என்றும் தெரிவித்தார் கர்தினால் மக்ரிக்காஸ்.
நான் திராட்சைக்கொடி நீங்கள் அதன் கிளைகள் என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது என்று இன்றைய நற்செய்தியின் வாயிலாக இயேசு கூறும் வார்த்தைகளை நினைவில் கொண்டு வாழ வலியுறுத்திய கர்தினால் Makrickas அவர்கள், கிறிஸ்துவுடன் ஒன்றித்து திருஅவைக்கும் மனித குலத்திற்கும் பல நன்மைகளை வழங்கிய புனிதர்களின் வாழ்வு இதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றும் கூறினார்.
இயேசுவோடு ஆழமான ஒன்றுபட்ட வாழ்க்கை என்பது அவருடைய திருவுளத்தை நாம் நிறைவேற்ற முடியும் என்பதற்கான உறுதி, நமது ஆன்மா மற்றும் முழு உலகத்திற்குமான சிறந்த நன்மை என்றும், சில நேரங்களில் கடவுள் இல்லாமல் நம்மால் பலவற்றை செய்ய முடியும் என்ற மாயையில் சோதனையில் நாம் வாழ்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Makrickas.
இறைவார்த்தையானது கிளைகள் திராட்சைக் கொடியுடன் இணைக்கப்பட்டுள்ளது போல, கடவுளுடனான நமது உறவைப் புரிந்துகொள்ளவும் வாழவும் உதவுகிறது என்றும், நாம் அனைவரும் கடவுளும் தூய ஆவியும் பராமரிக்கும் அவருடைய ஒரே திராட்சைத் தோட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார் கர்தினால் Makrickas.
இயேசுவை நம்பி ஒருவரையொருவர் அன்பு செய்து கடவுளில் நிலைத்திருக்க வேண்டும் என்பது அவருடைய கட்டளையை வாழ்வதாகும் என்று தெளிவுபடுத்திய கர்தினால் Makrickas அவர்கள், அவரோடு ஒன்றித்து இருக்கும் நாம் நம் வாழ்வில் நிறைய பலன்களைத் தர முடியும் என்றும் கூறினார்.
எளிமையான மற்றும் தாழ்ச்சியான பணி கடவுளின் பார்வையில் மிகவும் மதிப்புமிக்கது என்று வலியுறுத்திய கர்தினால் Makrickas அவர்கள், கடவுளது திட்டத்தை ஏற்காமல் சொந்த மனிதத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் போதெல்லாம் நாம் வெறுமையான கைகளுடன் கைவிடப்படுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்