திருப்பீட வாழ்வுக் கழகத்திற்குப் புதிய தலைவர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் திருப்பீட வாழ்வுக் கழகத்தின் வேந்தராகப் பணியாற்றி வரும் பேரருள்திரு ரென்சோ பெகோராரோ அவர்களை மே 27, இச்செவ்வாய்க்கிழமையன்று, அதன் தலைவராக நியமித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
உயிரியல் நெறிமுறை நிபுணரும் மருத்துவருமான பேரருள்திரு பெகோராரோ அவர்கள், இறையியல் மற்றும் உயிரியல் அறநெறிமுறைகளில் துறைகளின் பின்னணியைக் கொண்டுள்ளார் என்று அதுகுறித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பேரருள்திரு ரென்சோ பெகோராரோ அவர்களின் கல்வி மற்றும் திறன்மிகு அனுபவத்தில் அறநெறிமுறைகளைக் கற்பித்தல், விரிவாக வெளியிடுதல் மற்றும் பல்வேறு உயிரியல் அறநெறிமுறை நிறுவனங்களை வழிநடத்துதல் ஆகியவை அடங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் திருப்பீட வாழ்வுக் கழகம் மற்றும் இரண்டாம் ஜான் பால் இறையியல் நிறுவனம் இரண்டிலும் சிறப்பாகப் பணியாற்றிய பேராயர் வின்சென்சோ பாலியா அவர்களுக்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டார் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
1959-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4-ஆம் தேதியன்று, வடக்கு இத்தாலிய நகரமான பாதுவாவில் பிறந்த பேரருள்திரு ரென்சோ பெகோராரோ அவர்கள், தனது குருத்துவப் படிப்பிற்குப் பிறகு, 1989-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 11-ஆம் தேதியன்று அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
1985-ஆம் ஆண்டு பாதுவா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் பட்டம் பெற்றார், மேலும் 1990-ஆம் ஆண்டு, உரோமையில் உள்ள பாப்பிறை பல்கலைக்கழகத்தில் ஒழுக்க இறையியலில் உரிமப் பட்டம் (Licentiate) பெற்றார்.
மேலும் பேரருள்திரு பெகோராரோ அவர்கள், திருஇருதயக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறநெறிமுறைகளில் முதுகலை பட்டயச் சான்றிதழையும் (Diploma) பெற்றுள்ளார்.
இவர் பாதுவாவில் உள்ள லான்சா நிறுவனத்தின் பொதுச் செயலாளராகவும், திரிவெனெத்தோவின் இறையியல் துறையின் உயிரியல் அறநெறிமுறைகள் பிரிவின் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்