உலக அமைதிக்கான திருத்தந்தையின் செப விண்ணப்பம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
பணியேற்புத் திருப்பலியின் போது, விண்ணகத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது ஆன்மிக உடனிருப்பை வழங்கியதை தான் உறுதியாக உணர்ந்ததாகவும், புனிதர்களின் உதவியை நாடி செபித்தபோது மே 17, சனிக்கிழமை பிரான்சில் அருளாளராக உயர்த்தப்பட்ட அருள்பணியாளர் Camille Costa de Beauregard அவர்களை நினைவுகூர்ந்ததாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 18, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் பணியேற்புத் திருப்பலியினை வழிநடத்திய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், திருப்பலியின் நிறைவில் கூடியிருந்த இறைமக்கள் மற்றும் அரசுப்பிரநிதிகள் அனைவரையும் வாழ்த்தி நன்றிகூறி பாஸ்கா கால மூவேளை செப உரையினை எடுத்துரைத்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
பணியேற்புத் திருப்பலியில் பங்கேற்ற உரோம் மக்கள், உலகின் பல பகுதிகளிலிருந்து வந்த மக்கள் அனைவரையும் வாழ்த்தி நன்றி தெரிவித்த திருத்தந்தை அவர்கள், ஏராளமான நாடுகளைச் சேர்ந்த அரசுப் பிரதிநிதிகள், தலத்திருஅவைகள், திருஅவை குழுமங்கள் மற்றும் பிற மதங்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்து மகிழந்தார்.
மேலும் (Jubilee of Confraternities) கொன்ப்ரத்தர்னித்தா எனப்படும் உடன்பிறந்த உணர்வு சபையாரின் யூபிலிக்காக ஏறக்குறைய 100 நாடுகளிலிருந்து வந்திருந்த இலட்சக் கணக்கான திருப்பயணிகளை அன்புடன் வரவேற்று நன்றி கூறிய திருத்தந்தை அவர்கள், மிகவும் பிரபலமான பக்தி முயற்சிகளை, அதன் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக அவர்களுக்கு நன்றி என்றும் மொழிந்தார்.
அருளாளர் Camille Costa de Beauregard
பிரான்சின் சாம்பெரியில், மே 17, சனிக்கிழமை அருளாளராக உயர்த்தப்பட்ட அருள்பணியாளர் Camille Costa de Beauregard அவர்கள் 1800-ஆம் ஆண்டின் இறுதி மற்றும் 1900-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் என்றும், சிறந்த மேய்ப்புப்பணிக்கான சான்றாக விளங்கியவர் என்றும் கூறினார் திருத்தந்தை.
உலக நாடுகளுக்கு அமைதி
ஒன்றிப்பின் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும் நாம், போரினால் துன்புறும் நமது சகோதர சகோதரிகளை மறந்து விட முடியாது என்றும், காசாவில், உயிர் பிழைத்த குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் முதியவர்கள் பசி,பட்டினியால் வாடுகின்றனர் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மியான்மாரில் மாறி வரும் சூழலால் இளம் உயிர்கள் கொல்லப்படுகின்றன, உக்ரைன், ஒரு நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான பேச்சுவார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
உலகளாவிய திருஅவையின் மேய்ப்பரான உரோம் ஆயரின் பணியினை நம்பிக்கையின் அடையாளமாக, கடலின் நட்சத்திரமாக, நல்ல ஆலோசகராக இருக்கும் அன்னை மரியாவிடம் ஒப்படைப்போம் என்றும், அமைதியின் கொடை, துன்புறுபவர்களுக்கு ஆதரவு மற்றும் ஆறுதல், உயிர்த்தெழுந்த இறைவனுக்கு சாட்சிகளாக இருக்க நம் அனைவருக்கும் தேவையான அருள் ஆகியவற்றிற்காக அன்னையின் பரிந்துரையை மன்றாடுவோம் என்று தெரிவித்தார்.
இறுதியாக பாஸ்கா கால மூவேளை செபத்தினை எடுத்துரைத்து மக்களுக்கு தனது சிறப்பு ஆசீரினை வழங்கினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்