MAP

திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதுவர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதுவர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை  (@Vatican Media)

நீதி, உண்மை, எதிர்நோக்கின் அடிப்படையில் அமைதி எழுப்பப்பட

திருத்தந்தை பதினான்காம் லியோ : மேய்ப்புப்பணி அக்கறையைக் கொண்டுள்ள திருஅவை இந்த தூதரக முகவர்கள் சமூகத்தில் சலுகைகளைத் தேடவில்லை, மாறாக, பாலங்களைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகளைத் தேடுகின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தான் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப்பின் இவ்வெள்ளியன்று திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதுவர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், அமைதி, நீதி மற்றும் எதிர்நோக்கின் பாதையை பின்பற்றுமாறு அழைப்பு விடுத்தார்.

மனிதகுலமனைத்திற்கும் சேவையாற்ற வேண்டிய திருஅவையின் அர்ப்பணத்தை மீண்டும் எடுத்துரைத்த திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், தூதரக முகவர்களை உள்ளடக்கிய சமூகம் என்பது, வாழ்வின் இன்ப துன்பங்களை மக்களோடு பகிர்வது மட்டுமல்ல, மனித மற்றும் ஆன்மீக மதிப்பீடுகளில் தன் அடித்தளத்தைக் கொண்டுள்ளது என்றார்.

மேய்ப்புப்பணி அக்கறையைக் கொண்டுள்ள திருஅவை இந்த தூதரக முகவர்கள் சமூகத்தில் சலுகைகளைத் தேடவில்லை, மாறாக, பாலங்களைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகளைத் தேடுகின்றது என்றார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கான அர்ப்பணங்கள், இயற்கையை பாதுகாப்பதில் கவனம், செயற்கை நுண்ணறிவு போன்றவைகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணித் தொடர்ச்சியாக தொடர்ந்து தூண்டுதல்களைப் பெற்றுவருவதாக அறிவித்த திருத்த்தந்தை 14ஆம் லியோ அவர்கள், உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் திருஅவை தன் உறவை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திருஅவையின் அரசியல் தூதரகப் பணிகளில் அமைதி, நீதி மற்றும் உண்மை ஆகிய மூன்றும் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, அமைதி என்பது போர் அற்ற நிலை என்பதல்ல, மாறாக மனித மனங்களின் தாழ்ச்சியிலும், கவனமான உரையாடலிலும், தற்பெருமை மற்றும் பழிவாங்கலை மறுதலித்தலிலுமிருந்து பிறக்கிறது என்றார்.

கருவில் வளரும் குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் மாண்புடன் நடத்தப்படல், நோயாளிகள், வேலைவாய்ப்பற்றோர், குடிமக்கள், புலம்பெயர்ந்தோர் என அனைவரும் அவர்களுக்கேயுரிய மாண்புடன் நடத்தப்படல் என்பதில் நீதி அடங்கியுள்ளது என்ற திருத்தந்தை, இன்றைய உலகில், குறிப்பாக வலைத்தளங்களில் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டுவரும்போது உண்மையை பிறரன்போடு எடுத்துரைக்க வேண்டியது திருஅவையின் கடமையாகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த நம்பிக்கையின் யூபிலி காலம் மனந்திரும்பல், புதுப்பித்தல், மோதல்களைக் கைவிடல் போன்றவைகளுக்கான காலம் என்பதையும் தன் உரையின் இறுதியில் நினைவூட்டினார் திருத்தந்தை 14ஆம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 மே 2025, 14:56