MAP

கர்தினால்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை கர்தினால்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை  (ANSA)

மறைந்த திருத்தந்தையின் மதிப்புமிகு பாரம்பரியத்தில் நடைபோடுவோம்

தான் 14ஆம் லியோ என்ற பெயரை எடுத்துக்கொண்டதன் காரணத்தை உரைத்த திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், திருத்தந்தை 13ஆம் லியோவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுமடல் ‘ரேரும் நொவாரும்’ பற்றியும் கருத்துக்களை முன்வைத்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மே மாதம் 10ஆம் தேதி சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் கர்தினால்கள் அவையைச் சந்தித்து திருஅவையை ஏற்று நடத்தும் பணியில் அவர்களின் செபங்களையும் ஒத்துழைப்பையும் வேண்டினார் திருத்தந்தை 14ஆம் லியோ.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இழந்து நின்றவேளையில் நம்முடைய ஒன்றிணைந்த பொறுப்புணர்வை அது நினைவூட்டுவதாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், இந்த புதியப் பணியை தான் ஏற்றுக் கொண்டதில் இறைவனின் உதவியையும், கர்தினால்களின் நெருக்கத்தையும், இறைவனில் நம்பிக்கைக் கொண்ட அனைத்து விசுவாசிகளின் ஜெபத்தையும் நற்பணிகளையும் சார்ந்து இருப்பதாக எடுத்துரைத்தார்.

கர்தினால் அவையின் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே, திருஅவையின் கருவூலத் தலைவர் கர்தினால் கெவின் ஜோசப் பாரெல் ஆகியோருக்கு நன்றியை வெளியிட்டதுடன், இந்த கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் உடல் நலம் காரணமாக கலந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கும் சகோதர கர்தினால்களுக்காக ஏனைய கர்தினால்களுடன் செபத்தில் ஒன்றிணைவதாகவும் தெரிவித்தார் புதிய திருத்தந்தை.

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிஅர்ப்பணம், எளிமை, அனைத்தையும் கடவுளின் பாதங்களில் பணித்தல் போன்றவைகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அத்திருத்தந்தையின் இந்த மதிப்புமிகு பாரம்பரியத்தில் நம் பயணத்தை தொடர்ந்து நடத்துவோம் எனவும் கூறினார்.

இரண்டாம் வத்திக்கன் சங்கத்தின் பாதையில் நடைபோட்டுவரும் திருஅவையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘எவாஞ்சலி கௌதியும்’ என்ற அப்போஸ்தலிக்க ஏடு வலியுறுத்தும் கருத்துக்களான, நற்செய்தி அறிவிப்பில் கிறிஸ்துவின் முதன்மை இடத்திற்கு திரும்புதல், கிறிஸ்தவ சமூகம் முழுமையின் மறைப்பணி மனந்திரும்பல், ஒன்றிணைந்து நடைபோடலில் வளர்ச்சி,  விசுவாசத்தை புரிந்துகொள்ளுதலில் கவனம், குறிப்பாக திருஅவைக் கொண்டாங்களுக்கு புறம்பேயான பரவலான விசுவாச நடவடிக்கைகளை புரிந்துகொள்ளல், ஏழையர் மீது அக்கறை, இன்றைய நம் உலகுடன் உரையாடலை மேற்கொள்தல் போன்றவைகள் குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14ஆம் லியோ.

இத்தகைய ஒரு பாதையில் நடைபோடும் நோக்கத்துடனேயே தான் 14ஆம் லியோ என்ற பெயரை எடுத்துக்கொண்டதாக உரைத்த திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், திருத்தந்தை 13ஆம் லியோவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுமடல் ‘ரேரும் நொவாரும்’ என்பது பற்றியும் தன் கருத்துக்களை முன்வைத்தார்.

முதல் தொழில்புரட்சி காலத்தில் சமூகக் கேள்விகளை முன்வைத்த இந்த சுற்றுமடல், தற்போதும் இடம்பெற்றுவரும் தொழில் புரட்சியில், அதாவது, மனித மாண்பு, நீதி மற்றும் வேலையை பாதுகாக்கும் புதிய சவால்கள் இடம்பெற்றுவரும் AI என்னும் செயற்கை நுண்ணறிவு வளர்ந்துவரும் இக்காலக்கட்டத்தில் அதிகம் அதிகமாக பொருந்துவதாக உள்ளது என்றார் புதிய திருத்தந்தை.

இறை ஒத்துழைப்புடன், அனைத்து மனிதகுலத்தின் ஒருவர் ஒருவருக்கான ஒத்துழைப்புடன், அன்பு மற்றும் விசுவாசத்தின் சுடரை உலகம் முழுவதும் பரவ விடுவோம் என திருத்தந்தை புனித ஆறாம் பால் அவர்கள் தான் திருத்தந்தையாக பொறுப்பேற்றபோது கூறிய வார்த்தைகளை எடுத்துரைத்து கர்தினால்களுக்கான தன் உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 மே 2025, 13:40