MAP

அமைதி அரங்கின் இயக்கங்கள் & சங்கங்களின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை அமைதி அரங்கின் இயக்கங்கள் & சங்கங்களின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை   (ANSA)

அமைதியையும் நம்பிக்கையையும் உருவாக்குங்கள்!

அகிம்சை என்பது, ஒரு வழிமுறையாகவும் பாணியாகவும் நமது முடிவுகள், உறவுகள் மற்றும் நமது செயல்களை வேறுபடுத்திக் காட்ட கூடியதாகவும் இருக்க வேண்டும் : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உடன்பிறந்த உறவு மீட்டெடுக்கப்பட வேண்டும், அன்புகூரப்பட வேண்டும், அனுபவிக்கப்பட வேண்டும், அறிவிக்கப்பட வேண்டும், சான்றாக்கப்பட வேண்டும் என்றும், இது உண்மையில் சாத்தியம் என்ற நம்பிக்கையுடன், தூய ஆவியாரின் வழியாக நம் இதயங்களில் ஊற்றப்பட்ட கடவுளின் அன்பிற்கு நன்றி கூறுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மே 30, வெள்ளிக்கிழமை, இத்தாலியின் வெரோனாவிலுள்ள "அமைதி அரங்கின்" இயக்கங்கள் மற்றும் சங்கங்களைச் சேர்ந்தவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அமைதி மற்றும் நம்பிக்கையை உருவாக்குபவர்களாக அவர்கள் திகழ்கிறார்கள் என்றும் எடுத்துக்காட்டினார்.

அமைதிக்கான பாதை, மற்றவர்கள் மீது அக்கறை கொள்வதில் பயிற்சி பெற்ற இதயங்களையும் மனங்களையும் கோருகிறது, மேலும் இன்றைய உலகில் பொது நன்மையை உணரும் திறன் கொண்டது, ஏனென்றால் அமைதிக்கான பாதை அனைவரையும் உள்ளடக்கியது மற்றும் அனைத்து உயிரினங்களுக்கிடையில் சரியான உறவுகளை வளர்ப்பதற்கு வழிவகுக்கிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை,

அமைதி அனைவருக்கும் சொந்தமானது

அமைதி என்பது ஒரு பிரிக்க முடியாத நன்மை, அது அனைவருக்கும் சொந்தமானது என்றும், மக்களின் மனச்சான்றுகளில், பொது நன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள உறுதியான மற்றும் விடாமுயற்சியுடன் கூடிய உறுதிப்பாடு இருந்தால் மட்டுமே, அமைதியை  உண்மையிலேயே அடையவும், வாழ்க்கையின் எதார்த்தமாகவும், ஒருங்கிணைந்த வளர்ச்சியாகவும் அனுபவிக்கவும் முடியும் என்றும், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் மொழிந்ததையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மேலும் நம்முடைய பரபரப்பான இன்றைய உலகில், இந்தச் செயல்முறை நிகழ்வதற்குத் தேவையான பொறுமையை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார் திருத்தந்தை,

இடங்கள், சமூகங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் தொடங்கி, அவைகள் நமக்குச் சொல்ல வேண்டியதைக் கேட்பதன் வழியாக, உண்மையான அமைதி அடித்தளத்திலிருந்து வடிவம் பெறுகிறது என்பதை வரலாறும் நடைமுறை அனுபவமும் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளன என்றும், இந்த வழியில், கருத்து வேறுபாடுகள் மற்றும் அவை ஏற்படுத்தும் முரண்பாடுகள் ஒதுக்கி வைக்கப்படாமல், ஒப்புக்கொள்ளப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்டு, சமாளிக்கப்படும்போது அமைதி சாத்தியமாகும் என்பதை நாம் உணருகிறோம் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

சான்று வாழ்க்கை வாழ வேண்டும்

உலகிலும் நமது சமூகங்களிலும் வன்முறை நிலவுகிறது என்றும், போர்கள், பயங்கரவாதம், மனித வர்த்தகம் மற்றும் பரவலான ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில், நமது குழந்தைகளும் இளைஞர்களும் வாழ்க்கை கலாச்சாரம், உரையாடல் மற்றும் ஒருவருக்கொருவர்மீதான மரியாதையை அனுபவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, எல்லாவற்றிற்கும் மேலாக, வித்தியாசமான மற்றும் வன்முறையற்ற வாழ்க்கை முறையைக் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் சான்று வாழ்வு அவைகளுக்குத் தேவை என்பதையும் அடிக்கோடிட்டுக்காட்டினார்.

நற்செய்தியும் மறைப்படிப்பினைகளும்

அகிம்சை என்பது, ஒரு வழிமுறையாகவும் பாணியாகவும் நமது முடிவுகள், உறவுகள் மற்றும் நமது செயல்களை வேறுபடுத்திக் காட்ட கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று விண்ணப்பித்த திருத்தந்தை, இந்த முயற்சியில் கிறிஸ்தவர்களுக்கு நற்செய்தியும் திருஅவையின் சமூக மறைப்படிப்பினையும் நிலையான ஆதரவின் ஆதாரமாக உள்ளன என்றும் எடுத்துரைத்தார்.

அமைதியின் கலாச்சாரத்தை வளர்ப்பது என்பது நம்பிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கையற்றவர்கள் என அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்ட பணி என்பதால், அவர்கள் அனைவருக்கும் நற்செய்தியும் திருஅவையின் சமூக மறைப்படிப்பினையும் ஒரு திசைகாட்டியாகவும் செயல்பட முடியும் என்பதால், அவர்கள் அதை ஆலோசனை மற்றும் நடைமுறை வழியாக, நபரின் மாண்பு மற்றும் பொது நன்மையால் ஈர்க்கப்பட்டு முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இறுதியாக, அவர்கள் அனைவரும் மிகவும் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை, அவர்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 மே 2025, 14:44