உலக தகவல் தொடர்புத் துறையினருடன் திருத்தந்தை 14-ஆம் லியோ
மெரினா ராஜ் - வத்திக்கான்
தகவல் தொடர்பு என்பது தகவல்களைப் பரப்புவது மட்டுமல்லாது, உரையாடல் மற்றும் கலாச்சாரத்தை உருவாக்கும் இடங்களாகவும், மனித மற்றும் மின்னனு சூழல்களின் கலாச்சாரமாக மாறுவதாகவும் இருக்கவேண்டும் என்றும், அளப்பரிய ஆற்றல் கொண்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை மனித குல நன்மை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 12, திங்கள்கிழமை காலை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் உலக சமூகத்தொடர்புத் துறையினரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு முதல் கர்தினால்கள் அவை, திருத்தந்தை தேர்தலுக்கான கான்கிளேவ் அவை என திருஅவையின் மிக முக்கியமான அருளின் காலகட்டத்தில் தங்களது பணியினைச் சிறப்பாக செய்த அவர்களுக்குத் தனது நன்றியினை எடுத்துரைத்தார்.
அமைதியை ஏற்படுத்துபவர்கள் பேறுபெற்றோர் என்று இயேசு மலைப்பொழிவில் எடுத்துரைத்த வார்த்தைகள் நம் ஒவ்வொருவரையும் ஒரு வித்தியாசமான தகவல்தொடர்பைக் கொண்டுவருவதற்கான உறுதிப்பாட்டிற்கு அழைக்கிறது என்றும் அமைதியின் வழியில் வாழ நம் அனைவருக்கும் சவால் விடுக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
அமைதி நம் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்குகிறது, நாம் மற்றவர்களைப் பார்க்கும் விதம், மற்றவர்களது குரலுக்கு செவிசாய்த்தல் என நாம் தொடர்பு கொள்ளும் விதம் மிக முக்கியமானது என்றும், நமது வார்த்தைகள் மற்றும் உருவங்களால் போர் வேண்டாம் என்றும், போரை நிராகரிப்பவர்கள் நாம் என்பதை எடுத்துரைப்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்