ஆயர்களுக்கான திருப்பீடத்துறையினரைச் சென்று சந்தித்த திருத்தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
2023 ஜனவரி முதல் இவ்வாண்டு மே மாதம் 8ஆம் தேதி தான் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்படும் காலம் வரை ஆயர்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவராக பணியாற்றியுள்ள புதிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், மே 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று அத்திருப்பீடத்துறைக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சென்று அவர்களுக்கு திருப்பலி நிறைவேற்றினார்.
ஏற்கனவே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உரோமுக்கு தெற்கெயுள்ள செனட்சானோ நல்லாலோசனை மரியன்னை திருத்தலத்திற்கும், ஒரு வாரத்திற்கு முன்னர் வத்திக்கானுக்கு அருகிலுள்ள அகுஸ்தீனார் துறவுசபை தலைமை இல்லத்திற்கும் சென்று வந்துள்ள திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், செவ்வாய்க்கிழமையன்று ஆயர்களுக்கான திருப்பீடத்துறைக்குச் சென்று அங்குள்ள சிற்றாலயத்தில் பணியாளர்களுக்கென திருப்பலி நிறைவேற்றினார்.
தான் பணியாற்றிய திருப்பீடத்துறையின் பணியாளர்களோடு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்தைச் செலவிட்ட திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், அன்று மாலையே உரோம் நகரில் உள்ள புனித பவுல் பெருங்கோவில் சென்று புனித பவுலின் கல்லறை முன் செபித்தார்.
இப்புதன் காலையில், அவர் திருத்தந்தையாக பொறுப்பேற்ற பின்னான முதல் புதன் மறைக்கல்வியுரை இடம்பெற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்