அகுஸ்தீனிய சபையின் தலைமையகத்திற்கு திடீரெனச் சென்ற திருத்தந்தை
சுஜிதா சுடர்விழி FMM – வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ, மே 13 அன்று, உரோமில் உள்ள அகுஸ்தினிய சபையின் தலைமையகத்திற்கு திடீர் பயணம் மெற்கொண்டு, அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தனது சபை சகோதரர்களுடன் முதன்முறையாக உரையாடினார்.
2001 முதல் 2013 வரை அகுஸ்தினிய துறவு சபையின் அதிபராக பனிரெண்டு ஆண்டுகள் பணியாற்றிய திருத்தந்தை லியோ அவர்கள், தனது துறவுசபை சகோதரர்களுடன் திருப்பலி கொண்டாடி, மதிய உணவை பகிர்ந்து கொண்டார்.
இந்த அவரது வருகை, அகுஸ்தினார் சபையின் ஆன்மீகத் தத்துவமான ‘ஓர் இதயமும், ஒரே உள்ளமும் கடவுளில்’ என்ற கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.
வத்திக்கான் நகரத்திலிருந்து தன்னுடைய கறுப்பு ஊர்தியில் புனித பேதுரு சதுக்கத்தின் மிக அருகிலுள்ள குறுகிய பாதையில் தன் பயணத்தை மேற்கொண்டு, தமது சபை சகோதரர்களை அகுஸ்தினிய தலைமை இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்திக்கச் சென்றார்.
புனித அகுஸ்தீனின் ஒழுங்கு விதிகளை பின்பற்றுகிறவர்களுக்கு, ‘ஒன்றிணைந்த வாழ்வும், பகிர்தலும் முக்கியத்துவம்’ பெறுகின்றன, என்ற கருத்தை அவர்களிடம் சுட்டிக்காட்டிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், “நீங்கள் ஒரே மனதுடன், ஒரே உள்ளத்துடன் கடவுளை நோக்கிச் செல்லும் வகையில், இந்த இல்லத்தில் இசைவுடன் வாழ்வதே, நீங்கள் ஒன்றாக சேர்ந்துள்ளதன் முக்கியக் காரணமாகும்”, என்பதையும் எடுத்துரைத்தார்.
மாலை 3 மணிக்கு கல்மழையுடன் கூடிய எதிர்பாராத இடியுடன் வந்த மழையையும் பொருட்படுத்தாமல், நூற்றுக்கணக்கானோர் அகுஸ்தீனியன் தலைமை இல்லத்தின் வாசலுக்கு வந்து திருத்தந்தையை காண காத்திருக்க, அவரும் காத்திருந்தவர்களைச் சந்தித்து அன்புடன் வாழ்த்து கூறினார்.
வத்திக்கான் செய்திகளுடன் உரையாடிய அகிஸ்தீனிய துறவு சபையின் தலைவர் அருள்பணி அலெஸாந்த்ரோ மோரல் அவர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருப்பலிக்கு தலைமை தாங்கி அதன்பின் நண்பகல் விருந்திலும் பங்கேற்றார், என்றார்.
இதனை “முன்னறிவிப்பற்ற, மற்றும் அன்பு நிறைந்த தனிப்பட்ட சந்திப்பு” என்றும் விளக்கிய சபைத்தலைவர், திருத்தந்தை அந்த இல்லத்திற்கு ஒரு புதியவர் இல்லை என்றும், “அவர் அனைவரையும் அறிந்தவரும், அனைவரும் அவரை நன்கறிந்தவருமாக இருக்கிறோம்; அதனால் இந்த சந்திப்பு இன்னும் அர்த்தமுள்ளதாயிற்று” என மேலும் கூறினார்.
திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் திருஅவையின் தலைமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அகுஸ்தினார் சபையை சந்தித்த முதல் பயணம் மதிய உணவுடன் முடிவடையவில்லை எனவும், பின்னர் அங்கிருந்த பணியாளர்கள், சமையலறை ஊழியர்கள் என பலரும் அவரை சந்திக்க வந்ததாகவும், அனைவரும் இந்தச் சிறப்பு சந்திப்பால் மகிழ்ச்சியடைந்தனர் எனவும் அருள்பணி மோரல் கூறினார்.
“அகுஸ்தீனார் கூறுவது போல, நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் அன்புடன், ஒற்றுமையுடன் வாழ்தல் அவசியம் என்று திருத்தந்தை தமது சகோதரர்களுக்கு புனித அகுஸ்தீனின் வார்த்தைகளால் ஊக்கமளித்தார் எனவும் கூறினார் சபைத்தலைவர் மோரல்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்