உக்ரைன் மக்களுக்கு உண்மை, நீதி, நீடித்த அமைதிக்கான வேண்டுகோள்
சுஜிதா சுடர்விழி FMM
"அன்பான உக்ரைன் மக்களின் துன்பத்தை நான் என் இதயத்தில் சுமக்கிறேன்" என்று பாஸ்கா கால நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் எடுத்துரைத்த திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், "உண்மையான, நீதியான மற்றும் நீடித்த அமைதியை விரைவில் அடைய ஒவ்வொரு முயற்சியும் எடுக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியதோடு உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் உரையாடினார்.
திருத்தந்தை தன்னுடன் தொலைபேசியில் உரையாடல் நடத்தியது குறித்து தன் X தளத்தில் பதிவிட்ட, உக்ரைன் அதிபர் வலோடிமிர் ஜெலென்ஸ்கி அவர்கள், திருத்தந்தை அந்நாட்டிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
"நமது நாட்டிற்கு ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்கான அவசியம் மற்றும் கைதிகளை விடுவிப்பதற்கான தேவை பற்றிய திருத்தந்தையின் வார்த்தைகளை நாம் ஆழமாக மதிக்கின்றோம்," என்று கூறிய உக்ரைன் அதிபர், மேலும் "இரஷ்யாவால் நாடு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான உக்ரேனிய குழந்தைகள்" பற்றியும் இரு தலைவர்களும் விவாதித்தோம், என்றார்.
எடுத்துச் செல்லப்பட்ட குழந்தைகளைத் திரும்ப பெறுவதில் வத்திக்கானின் உதவியை உக்ரைன் நம்புகிறது என்றும் அதிபர் குறிப்பிட்டார்.
மேலும், இன்று முதல் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முழுமையான மற்றும் விதிமுறையற்ற போர் நிறுத்த ஒப்பந்தம் இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் திருத்தந்தையிடம் தெரிவித்தார்.
"நேரடி பேச்சுவார்த்தைகள் உட்பட, எந்த வடிவத்திலும் பேச்சுவார்த்தைகளுக்கு உக்ரைன் தயாராக உள்ளது” என்றும், “இரஷ்யாவிலிருந்து இதேபோன்ற நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறது" என்றும் அவர் கூறினார்.
உக்ரைனுக்கு ஒரு திருத்தூதுப்பயணத்தை மேற்கொள்ள திருத்தந்தை பதினான்காம் லியோவை அழைத்துள்ளதாக குறிப்பிட்ட அதிபர் செலென்ஸ்கி, அத்தகைய வருகை "அனைத்து விசுவாசிகளுக்கும், மக்கள் அனைவருக்கும் உண்மையான நம்பிக்கையைத் தரும்" என்றும் கூறினார்.
"நாங்கள் தொடர்பில் இருக்கவும், எதிர்காலத்தில் ஒரு நேரடி சந்திப்பைத் திட்டமிடவும் ஒப்புக்கொண்டுள்ளோம் " என்றும் அவர் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்