MAP

மூன்று இறையடியார்கள் (230525) மூன்று இறையடியார்கள் (230525) 

திருஅவையில் மூன்று புதிய வணக்கத்துக்குரியவர்கள்!

கொலம்பிய அருள்சகோதரி அக்னீஸ் அரங்கோ வெலாஸ்குவெஸ், இந்திய ஆயர் மேத்யூ மாகில், ஸ்பெயின் ஆயர் அலெஸாண்ட்ரோ லபாகா உகார்த்தே ஆகிய இறை ஊழியர்களை வணக்கத்துக்குரியவர் நிலைக்கு உயர்த்தும் ஆணைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஈக்குவதோரில் இரண்டு மறைப்பணியாளர்கள் மற்றும் ஓர் இந்திய ஆயர் என மூன்று இறை ஊழியர்களை வணக்கத்துக்குரியவர் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மே 22, இவ்வியாழனன்று, புனிதர்பட்ட படிநிலைகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்கள் திருத்தந்தையை சந்தித்து இது குறித்த விவரங்களை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இம்மூவருக்கும் புனிதர்பட்ட நிலைகளுக்கான படிநிலைகளைத் தொடர அங்கீகாரம் வழங்கியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இம்மூவரில், இருவர் விசுவாசத்திற்காக மறைச்சாட்சிகளாக தங்கள் இன்னுயிரைக் கையளித்தவர்கள். அதாவது, பூர்வகுடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் போது ஈக்குவதோர் மழைக்காடுகளில் நிகழ்ந்த வன்முறையின்போது கொல்லப்பட்டவர்கள் இவர்கள்.

ஆயர் மேத்யூ மாகில்

அன்னை மரியா வினவுதல் சபையின்  நிறுவனரும் இந்தியருமான ஆயர் மேத்யூ மாகில்  என்பவர் 1851-ஆம் ஆண்டு மஞ்சூரில் ஒரு நல்ல கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். 1865- ஆம் ஆண்டு அருள்பணியாளராகத் திருப்பொழிவு பெற்ற இவர், 1889-ஆம் ஆண்டு கோட்டயத்தின் முதன்மை குருவாக நியமிக்கப்படும் வரை பங்குத் தந்தையாகப் பணியாற்றினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பெண் குழந்தைகளின் கல்வியை முதன்மை நோக்கமாகக் கொண்ட ஒரு துறவற சபையை நிறுவினார். அவரது மேய்ப்புப் பணி துடிப்புமிக்கதாகவும், ஆற்றல் வாய்ந்ததாகவும் இருந்தது. இறுதியில் 1896-இல் சங்கனாச்சேரியின் திருத்தந்தையின் பதிலாளாக அவர் நியமிக்கப்பட்டார்.

மறைக்கல்வி உருவாக்கம், பள்ளிக் கல்வி, துறவற சபைகள் மற்றும் அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் அவ்வேளையில் சமூகத்தின் பெரும்பகுதியைப் பாதித்த வறுமைக்கு எதிரானப் போராட்டத்தைத் தீவிரமாக ஊக்குவித்தார். மேலும் துறவு வாழ்வுக்கான இறையழைத்தல்களையும் ஊக்குவித்தார் ஆயர் மேத்யூ. மேலும் 'கடவுளே எனது நம்பிக்கை' என்ற தனது விருதுவாக்கை இறுதிவரை கடைபிடித்தார் ஆயர் மேத்யூ

திருத்தூதர் புனித தோமை கிறிஸ்தவர் (வடகத்தியர்) மற்றும் மெசபத்தோமிய (தெற்கத்தியர்) கிறிஸ்தவரிடையே ஏற்பட்ட கருத்து மோதல்களின்போது இந்த இரு சமூத்தினரிடையே அமைதியை ஏற்படுத்த முனைந்தார் ஆயர் மேத்யூ. அவரது முயற்சிகள் 1911-ஆம் ஆண்டு சங்கனாச்சேரி மறைமாவட்டத்தை இரண்டு தனித்துவமான மறைமாவட்டங்களாக, அதாவது, ஒன்று "தெற்கத்தியர்களுக்கு"  மற்றொன்று "வடக்கத்தியர்களுக்கு" என்று ஏற்படுத்தும் ஒரு நல்ல சூழலை உருவாக்கியது.

திருத்தந்தை பத்தாம் பயஸ் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, "தெற்கத்தியர்களுக்காக" கோட்டயம் மறைமாவட்டத்தை உருவாக்கி, அதன் தலைமையை இந்த முயற்சியின் சிற்பியான ஆயர்  மாத்யூவிடம் ஒப்படைத்தார். இறுதியில் ஒரு குறுகிய கால நோயால் தாக்கப்பட்டு, ஜனவரி 1914-ஆம் ஆண்டு இறைபதம் அடைந்தார். தான் இறக்கும் வரை இந்தப் பணிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.

அலெஜான்ட்ரோ லபாகா உகார்த்தே

1920-இல் பிறந்த அலெஜான்ட்ரோ லபாகா உகார்த்தே அவர்கள், வடக்கு ஸ்பெயினில் உள்ள பெய்சாமாவைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே, அவர் ஒரு மறைப்பணியாளராக  வேண்டும் என்ற அழைப்பை உணர்ந்தவர். 1945-ஆண்டு அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட பிறகு, அவர் 1937-ஆம் ஆண்டு கப்புச்சின் சபையில் சகோதரர் மனுவேல் என்ற பெயரில் சேர்ந்தார். பின்னர் அவர் அச்சபையால் சீனாவிற்கு மறைப்பணியாளராக அனுப்பி வைக்கப்பட்டார்.

ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவரும் பிற மறைப்பணியாளர்களும் மாவோயிஸ்ட் ஆட்சியால் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர் ஈக்குவதோருக்குச் சென்றார், அங்கு அவர் ஒரு பங்குப் பணியாளராகப் பணியாற்றினார், மேலும் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்று, ஹூவோரானி மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார்.

1984-ஆம் ஆண்டில், ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட அருள்பணியாளர் மனுவல் அவர்கள், தொடர்ந்து பூர்வகுடி மக்களிடையே தனது பணியைத் தொடர்ந்தார். மேலும் தக்கேறி இனக்குழுவுடன் தொடர்பையும் ஏற்படுத்திக்கொண்டார். அது கடுமையான பதற்றம் நிறைந்த காலமாக இருந்தது. அப்போது எண்ணெய் நிறுவனங்கள் கருப்புத் தங்கத்தைத் தேடி காடுகளை அழித்து, வேட்டையாடுபவர்களைப் போல இப்பகுதி வழியாக ஊடுருவிச் சென்றன.

இடைநிலையாளராகவும், சமரசம் செய்பவராகவும் பெயர் பெற்ற ஆயர் மனுவேலுக்கு, தக்கேறி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே முன்னுரிமையாக மாறியது. இந்தப் பணியின் போதுதான் அவர் அருள்சகோதரி இனேஸைச் சந்தித்தார்.

அருள்சகோதரி இனெஸ் அரங்கோ வெலாஸ்குவெஸ்

பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த அருள் சகோதரி இனெஸ் அரங்கோ வெலாஸ்குவெஸ், 1977-ஆம் ஆண்டு, ஈக்குவதோரின் அகுவாரிகோவிற்கு திருக்குடும்பத்தின் கப்புச்சின் மூன்றாம் அவை சகோதரிகளின் முதல் மறைப்போதகப் பயணத்தில் பங்கேற்றார். அப்போது அவருக்கு வயது 40. கொலம்பியாவை பூர்வீகமாகக் கொண்ட அவர், 1937-ஆம் ஆண்டு மெடலினில் பிறந்து 1955-ஆம் ஆண்டு அச்சபையில் சேர்ந்தார், அங்குத் தனது தொடக்கநிலை பயிற்சியை முடித்தார்.

தனது இறுதி அர்ப்பணத்திற்குப் பிறகு, கற்பிப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அருள்சகோதரி  இனெஸ் அவர்கள், பல்வேறு சமூங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பணியாற்றிய வேளை, அத்துறவு  சபையைச் சேர்ந்த இல்லம் ஒன்றின் தலைமைச் சகோதரியாக நியமனம் பெற்றார்.

மேலும் ஆயர் மனுவேல் உட்பட மற்றவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஹூவோரானி மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதில் சகோதரி இனெஸ் அவர்கள் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டார். அப்போது எண்ணெய் மற்றும் மரம் வெட்டும் நிறுவனங்களுக்கு இலக்காகி இருந்த தக்கேறி  மக்கள்  எதிர்கொள்ளும் மோசமான சூழ்நிலையை அவர் ஆழமாக உணர்ந்தார்.

இந்நிலையில், சகோதரி இனேஸ் அவர்களும் ஆயர் மனுவேலுடன் இணைந்து அம்மக்களுக்காகப் பணியாற்றினார். வெளியாட்கள் எவரும் அம்மக்களை எளிதாக அணுகிவிடமுடியாது என்ற நிலையில், ஜூலை 21, 1987 அன்று காலை ஹெலிகாப்டரில் இருவரும் நியமிக்கப்பட்ட சந்திப்பு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அடுத்த நாள், அவர்களை அழைத்துச் செல்ல மற்றொரு ஹெலிகாப்டர் அங்கு வந்தபோது அவர்களின் உடல்கள் ஈட்டிகள் மற்றும் அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தன.

இவர்களின் கொடிய மரணங்கள் வலிமைவாய்ந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின என்பதுடன், இன்றுவரைத் தொடரும் புனிதத்திற்கான நீடித்த நற்பெயருக்கு பங்களித்துள்ளன என்பதும் மறுப்பதற்கில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 மே 2025, 14:19