திருத்தூதர் பேதுருவின் கல்லறை முன் செபித்த திருத்தந்தை 14-ஆம் லியோ
மெரினா ராஜ் - வத்திக்கான்
புனித பேதுருவின் கல்லறையில்
வத்திக்கான் பெருங்கோவிலின் உள்புறம் இருந்து திருவழிபாட்டு முறையானது ஆரம்பானது. கர்தினால்கள் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உள்ள திருத்தூதர் பேதுருவின் கல்லறையைச் சூழ்ந்து வரிசையாக நிற்க, புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் கீழை வழிபாட்டுமுறை திருஅவையின் தந்தையர்களுடன் திருத்தூதர் பேதுருவின் கல்லறைக்குச் சென்றார். தூபம் கொண்டு திருத்தூதர் பேதுருவின் கல்லறையை வணங்கி செபித்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ. திருஅவையின் முதல் திருத்தந்தையான திருத்தூதர் பேதுரு, அவரது மறைசாட்சியான வாழ்வு போன்றவற்றோடு நெருங்கிய தொடர்பை, புதிய திருத்தந்தை அவர்கள் ஏற்படுத்தும் வண்ணம் இந்நிகழ்வானது இடம்பெற்றது.
தனது இரத்தத்தாலும் நம்பிக்கையாலும் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்த திருத்தூதர் பேதுருவின் கல்லறையில் அவரையும் அவரோடு கிறிஸ்துவிற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து மறைசாட்சிகளையும் நினைவுகூர்ந்து புதிய திருத்தந்தை செபித்ததும், கல்லறையின் முன் வைக்கப்பட்டிருந்த புதிய திருத்தந்தைக்கான பால்யம் மற்றும் மீனவர் மோதிரத்தை பீடப்பணியாளர்கள் சுமந்து செல்ல வத்திக்கான் பெருங்கோவில் அடி நிலக் கல்லறையிலிருந்து பவனியானது ஆரம்பமானது.
வத்திக்கான் வளாகத்தில்
உரோமைக் கத்தோலிக்க திருஅவையின் புனித திருத்தந்தையர்கள், மறைசாட்சிகள், புனிதர்கள் ஆகியோரின் பரிந்துரையை நாடி “Laudes Regiæ” என்னும் பாடல் இலத்தீன் மொழியில் பாடப்பட்டது. உயிர்த்த இயேசு சீடர்களுக்குத் தோன்றி, மீன்பிடிக்க வலைகளைப் போடுங்கள் என்று வலியுறுத்தும் நற்செய்தி பகுதியானது ஓவியமாக திரைச்சீலை ஒன்றில் வரையப்பட்டு வத்திக்கான் மேல்மாடத்தில் இருந்து தொங்கவிடப்பட்டிருந்தது. Raffaello Sanzio அவர்களால் உருவாக்கப்பட்ட இவ்வோவியமானது வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் பாதுகாக்கப்படும் ஒன்றாகும். திருப்பலி பீடத்தின் வலப்புறத்தில் உரோமையில் உள்ள Genazzano நல்லாலோசனை அன்னை மரியா திருத்தலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அன்னையின் திருஉருவம் வைக்கப்பட்டிருந்தது. தூபம் கொண்டு திருப்பலிபீடம் அன்னை மரியா திருஉருவம் போன்றவற்றிற்கு ஆராதனை செலுத்தியதும் இலத்தீன் மொழியில் திருப்பலியினைத் துவக்கினார் திருத்தந்தை 14ஆம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்