திருத்தந்தையின் மார்பணிச் சிலுவையில் புனித பெரிய லியோவின் அருளிக்கம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மே 8, வியாழனன்று, திருத்தந்தையின் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளன்று, புதிய திருத்தந்தை பதினான்காம் லியோ, புனித பேதுரு வட்டம் (Circolo San Pietro) எனப்படும், தன்னார்வலர் அமைப்பால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு வெள்ளி மார்பணிச் சிலுவையைப் பெற்றுக்கொண்டார் என்று செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.
மேலும் இந்த மார்பணிச் சிலுவையில் அவரது புகழ்பெற்ற முன்னையவர், ஹிப்போவின் புனித அகுஸ்தினார் மற்றும் அகஸ்தீனிய ஆயர்கள் வில்லனோவாவின் புனித தாமஸ் மற்றும் அருளாளர் அன்செல்மோ போலன்கோவின் அருளிக்கங்களும் (relics) அதில் பதிக்கப்பட்டுள்ளன என்றும் அதில் குறிப்பட்டுள்ளது.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு இப்படிப்பட்டதொரு சிறப்பு மார்பணிச் சிலுவையைப் உருவாக்க வேண்டும் என்பது, அகுஸ்தினார் சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் புருனோ சில்வெஸ்ட்ரினி OSA, அவர்களின் எண்ணத்தில் உதித்தது என்றும் அச்செய்திக் குறிப்பில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
திருத்தந்தை புனித பெரிய லியோ அவர்களின் பாதுகாவல் மற்றும் வழிகாட்டுதலில் அவர் ஒப்படைக்க வேண்டும் என்ற தனது அகஸ்தீனிய சபைத் தோழரின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு, அருள்பணியாளர் சில்வெஸ்ட்ரினி, பாரம்பரிய இடைக்கால நுட்பங்களைப் பயன்படுத்தி ஏற்கனவே ஐந்து அருளிக்கங்களை உருவாக்கிய நிபுணர் அந்தோனியோ கோத்தோனே அவர்களைத் தொடர்பு கொண்டு மார்பணிச் சிலுவையை உருவாக்கியதாகவும் அச்செய்திக் குறிப்பு உரைக்கின்றது.
கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதியன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கர்தினாலாகப் பதவியேற்ற நாளில், அவருக்கு அகஸ்தீனிய சபை தலைமையகத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மார்பணிச் சிலுவையில் இந்த அருளிக்கங்களை உருவாக்கினார் கோத்தோனே என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீர் பூசப்பட்ட சிவப்புப் பட்டில், தங்க முலாம் பூசப்பட்ட காகித சரிகைச் சித்திரவேலை கொண்ட ஒரு புதிய சிறிய சிலுவையை, மிகத் துல்லியத்துடனும், தீவிர அர்ப்பணிப்புடனும், நிபுணர் கோத்தோனே அவர்கள் உருவாக்க இரண்டு மணிநேரம் மட்டுமே ஆனது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித பேதுரு வட்டம் (Circolo San Pietro) எனப்படும், தன்னார்வலர் அமைப்பு, 1869 -ஆம் ஆண்டு உரோமையில் ஓர் இளைஞர் குழுவால் நிறுவப்பட்டது, திருத்தந்தையான அருளாளர் ஒன்பதாம் பயஸ் அவர்கள் ஏழைகளுக்கு உணவு வழங்கும் ஆரம்ப தொண்டு கடமையை அவர்களிடம் ஒப்படைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்