MAP

திருத்தந்தையின் இலச்சனை திருத்தந்தையின் இலச்சனை 

அன்னை மரியா மற்றும் அகுஸ்தீனாரை பிரதிபலிக்கும் இலச்சினை

புனித அகுஸ்தீனார், ’நாம் கிறிஸ்தவர்களாக பெருமெண்ணிக்கையில் இருந்தாலும் ஒரே கிறிஸ்துவில் நாம் அனைவரும் ஒன்றே’ எனக்கூறிய வார்த்தைகளைப் பிரதிபலிப்பதாக திருத்தந்தையின் விருதுவாக்கு உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புதிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் எடுத்துள்ள இலச்சினை அன்னை மரியா மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் புனித அகுஸ்தீனாரிடமிருந்து அவர் பெற்றுள்ள தூண்டுதல்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என திருப்பீட தகவல் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.

வழக்கமாக திருத்தந்தையர்களின் ‘Coat of Arms’ எனப்படும் இலச்சினை அனைத்திலும் காணப்படுவதுபோல் திருத்தந்தையர் அணியும் ஆயருக்குரிய மகுடம் போன்ற தொப்பியும், இரு திறவுகோல்கள் ஒன்றுக்கொன்று குறுக்காக வைக்கப்பட்டிருப்பதுடன்,  மேல்பகுதியின் இடதுபுறத்தில் இளநீல பின்னணியுடன் லீலி மலர் அடையாளம் வெள்ளி நிறத்திலும், கீழே வலது புறத்தில் இளமஞ்சள் நிறத்தின் பிண்னணியில் ஒரு சிகப்பு நிற புத்தகத்தின் மீது ஓர் அம்பால் துளைக்கப்பட்ட சிகப்பு இதயம் அதன் மேல் முனையில் சுடரைத் தாங்கியதாக உள்ளது.

அந்த இலச்சினையின் அடிப்பகுதியில் திருத்தந்தை 14ஆம் லியோவின் “ஒருவராக இருப்பவரில் நாமனைவரும் ஒன்றாய்” என்ற விருதுவாக்கு எழுதப்பட்டுள்ளது.

புனித அகுஸ்தீனார் 127ஆம் திருப்பாடல் குறித்த தன் மறையுரையில்,’நாம் கிறிஸ்தவர்களாக பெருமெண்ணிக்கையில் இருந்தாலும் ஒரே கிறிஸ்துவில் நாம் அனைவரும் ஒன்றே’ எனக்கூறிய வார்த்தைகளைப் பிரதிபலிப்பதாக திருத்தந்தையின் விருதுவாக்கு உள்ளது.

இளநீல வண்ணமும் லில்லி மலரும் அன்னை மரியை அடையாளப்படுத்தி நிற்கின்றன எனவும், அம்பு துளைத்த இதயம் அகுஸ்தினார் சபையின் அடையாளமாக இருப்பதாகவும் திருப்பீட தகவல் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மே 2025, 15:56