திருத்தந்தை 14ம் லியோ :மகிழ்ச்சிநிறை விசுவாசத்திற்கு நாம் சான்று
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
விசுவாசம் குறைவுபடும்போது, வாழ்வு தன் அர்த்தத்தை இழக்கின்றது என்ற திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், கிறிஸ்துவில் நம் மகிழ்ச்சிநிறை விசுவாசத்திற்கு நாம் சான்றுகளாக இருக்க வேண்டும் என இவ்வெள்ளி காலை திருப்பலியில் எடுத்துரைத்தார்.
தன்னை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்த கர்தினால்கள் அவையுடன், தான் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதே சிஸ்டைன் சிற்றாலயத்தில் மே 9 காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், சிலுவை சுமக்க என்னைத் தேர்ந்தெடுத்துள்ள நீங்கள் அனைவரும் என் மறைப்பணியில் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.
நீரே கிறிஸ்து. உயிருள்ள கடவுளின் மகன், என இயேசுவின் கெள்விக்குப் பதிலளித்த புனித பேதுருவின் வார்த்தைகளை மையமாக வைத்து தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை, மக்கள் என்னை யாரென்று சொல்கிறாரகள் என்ற இயேசுவின் கேள்வி இன்று நாம் வாழும் உலகிலும் மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாக உள்ளது என்றார்.
இன்றைய உலகில் பலவேளைகளில் கிறிஸ்தவ விசுவாசம் என்பது, மடத்தனமானதாக, பலவீனர்கள் மற்றும் அறிவற்றவர்களுக்கு உரியதாக நோக்கப்படுகிறது என்ற திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், தொழில்நுட்பம், பணம், வெற்றி, அதிகாரம் மற்றும் உலக சுகங்களில் தன் பாதுகாப்பைத் தேடுவதே இதற்கான காரணம் என்பதை சுட்டிக்காட்டினார்.
வாழ்வின் அர்த்தத்தை இழப்பது, கருணையைக் கைவிடுவது, மனித மாண்பை மீறுவது, குடும்பத்தில் உருவாகும் நெருக்கடிகள் உட்பட நம் சமூகத்தை துன்புறுத்தும் அனைத்துக் காயங்களோடும் நெருங்கிய தொடர்புடையது விசுவாசக் குறைபாடு என மேலும் எடுத்துரைத்தார் புதிய திருத்தந்தை 14ஆம் லியோ.
இத்தகைய ஒரு உலகத்தில் வாழும் நாம் மகிழ்வின் நற்செய்தியை எடுத்துரைப்பதிலும், மனமாற்றத்தின் பயணத்திலும் இணைந்து நடைபோட வேண்டும் என அழைப்பு விடுத்து தன் மறையுரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்