சுற்றுச்சூழலுக்கு உழைக்கும் பல்கலைக்கழகத்தினருக்கு வாழ்த்து
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato si’ சுற்றுமடலின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி, “நமது பொது இல்லமாகிய பூமியின் அக்கறைக்கான பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு”க்கு காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 14ஆம் லியோ.
பிரேசிலின் ரியோ தெ ஜெனெய்ரோ பாப்பிறை கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் இவ்வமைப்பின் கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ள திருத்தந்தை, இவ்வமைப்பின் அர்ப்பணத்திற்கும், COP30 கூட்டத்திற்கு தயாரிப்பாக இடம்பெற்றுவரும் நடவடிக்கைகளுக்கும் தன் நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளார்.
யூபிலி ஆண்டு என்பது எதிர்நோக்கின் ஆண்டு என்பதை இளையோருக்கு தன் காணொளிச் செய்தியில் நினைவூட்டியுள்ள திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், அனைத்துச் செயல்பாடுகளையும் நம்பிக்கையுடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
பல்கலைக்கழகங்களின் முதல்வர்களுக்கும் ஒரு செய்தியை அதில் வழங்கியுள்ள திருத்தந்தை, சூழலியல் மற்றும் சமூக நீதிக்கான அவர்களின் பணிகள் தொடர பாலங்களைக் கட்டியெழுப்புபவர்களாகச் செயல்பட வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.
கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் கூட்டத்தில் பங்குபெறும் அனைவரின் அர்ப்பணம் மற்றும் பணிக்கு தன் நன்றியையும் வெளியிட்ட திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், பாலங்களைக் கட்டியெழுப்பும் தங்கள் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்துமாறு தன் ஊக்கத்தையும் அளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்