திருத்தந்தை : மனிதாபிமான உதவிகளை காசாவுக்குள் அனுமதியுங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மோதல் இடம்பெறும் காசா பகுதியில் நிவாரணப் பொருட்கள் தடைச் செய்யப்படுவதால் பெருமளவில் துயர்களை குழந்தைகளும், முதியோரும் நோயாளிகளும் அனுபவிக்கின்றனர் என கவலையை வெளியிட்ட திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் மற்றும் மனிதாபிமான உதவிகள் காசாவுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் காசா மக்களுக்கான இவ்வழைப்பை விடுத்த திருத்தந்தை, காசா பகுதி மக்களின் நிலை மிகுந்த கவலையையும் வேதனையையும் தருவதாக உள்ளது என்றார்.
பன்னாட்டு உதவி நிறுவனங்களின் கூற்றுப்படி, காசாவில் மனிதாபிமான நெருக்கடி மிகத் தீவிர நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
காசா பகுதியில் பசிச்சாவுகள் ஏற்படும் ஆபத்து இருப்பதை ஐ.நா. நிறுவனமும் குறிப்பிட்டு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்து ஆயுத மோதல்களால் பல ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ள நிலையில் மே 20, செவ்வாயன்று இடம்பெற்ற இஸ்ராயேல் விமானத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட எண்ணற்ற பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர்.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டிகள் காசாவுக்குள் நுழைய இஸ்ராயேல் அனுமதித்துள்ளதை குறைகூறும் பன்னாட்டு அமைப்புக்கள், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் மற்றும், உதவிகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படவேண்டும் என மீண்டும் அழைப்பு விடுத்துள்ளன.
இஸ்ராயேல் குண்டுவீச்சு தாக்குதல்களால் மக்களின் உறைவிடங்கள் பெருமளவில் சேதமாக்கப்பட்டு வருவது குறித்து ஐ.நா. நிறுவனமும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்