MAP

உரோம் நகர மேயருக்கு நன்றி – திருத்தந்தை 14-ஆம் லியோ

உரோம் நகர் அதன் வரலாறு மற்றும் கலை பாரம்பரியத்தின் செழுமைக்கு இணையற்றதாக விளங்குகின்றது

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறைமக்களின் நம்பிக்கையையும், சமூகத்தின் பொது நன்மையையும் மனதில் கொண்டு உரோம் நகர மக்களுக்காக உழைக்கும் மேயர் அவர்களுக்கு நன்றி என்றும், கிறிஸ்தவராகவும், ஆயராகவும் உங்களோடு இருக்கின்றேன் என்று எடுத்துரைத்த வேளையில் உங்களுக்காக உங்களுடன் ஓர் உரோமையராக இருக்கின்றேன் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

மே 25, ஞாயிறு மாலை உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு முன்பாக உரோமில் உள்ள scalinata del Campidoglio என்னுமிடத்தில் உரோம் மேயர் Roberto Gualtieri அவர்களின் வரவேற்புக்கு நன்றி கூறி தனது கருத்துக்களை எடுத்துரைத்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

இரண்டாயிரம் ஆண்டுகளாக திருஅவையானது உரோமில் அதன் அப்போஸ்தலிக்க வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது என்றும், கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து, பிறரன்புப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

இளைஞர்களின் கல்வி, துன்பப்படுபவர்களுக்கு உதவி, கடைநிலையிலிருப்பவர்களுக்கான அர்ப்பணிப்பு, கலைகளை வளர்த்தல் ஆகியவை மனித மாண்பிற்கான அக்கறையின் வெளிப்பாடுகள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், சிறியவர்கள், பலவீனமானவர்கள் மற்றும் ஏழைகள் மீது அக்கறை கொண்டு எல்லா நேரங்களிலும் நாம் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த அக்கறையானது யூபிலி ஆண்டில், உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரும் திருப்பயணிகள் மேலும் வெளிப்படுத்தப்படுகின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், உரோம் நகர நிர்வாகத்தாரால் செய்யப்படும் இப்பணிக்காகத் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

உரோம் நகர் அதன் வரலாறு மற்றும் கலை பாரம்பரியத்தின் செழுமைக்கு இணையற்றதாக விளங்குகின்றது என்று குறிப்பிட்ட திருத்தந்தை அவர்கள், மனிதகுலம் மற்றும் நாகரிகத்தின் மதிப்புகளுக்காக உரோம் நகர் எப்போதும் தனித்து நிற்கும் என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 மே 2025, 12:44