ஜிரோ தி இத்தாலியா மிதிவண்டி ஓட்டிகளை வரவேற்கும் திருத்தந்தை!
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
ஜூன் 01, ஞாயிறன்று, பிற்பகல் 3:30 மணிக்கு ஜிரோ தி இத்தாலியா மிதிவண்டி ஓட்டிகள் வத்திக்கான் வழியாகப் பயணிக்கும் போது, அவர்களைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வரவேற்கிறார் என்று கூறியுள்ளார் கர்தினால் ஜோஸ் தொலென்தினோ தெ மென்தோன்கா
மிதிவண்டி ஓட்டிகள் வத்திக்கான் நகர் வழியாகச் செல்வதற்குத் திருப்பீடக் கலாச்சார மற்றும் கல்வித்துறையின் தலைவர் கர்தினால் மென்தோன்கா அவர்கள் முன்வைத்த திட்டத்தை வரவேற்ற மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக் கொண்டதை நினைவுகூரும் விதமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வு, ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் இடம்பெறவுள்ள "விளையாட்டு யூபிலியின் ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு, அக்டோபர் 28 அன்று, Athletica Vaticana-வுக்கு அனைத்துலக மிதிவண்டி அமைப்பு (UCI) உறுப்பினராக அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் முயற்சியாகவே ஜிரோ தி இத்தாலியா வத்திக்கான் வழியாகச் செல்லும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று கேபிடோலின் என்னும் மலைப்பகுதியில் திருப்பீடக் கலாச்சாரம் மற்றும் கல்வித் துறைச் செயலர் ஆயர் பால் திக்கே அவர்களால் இம்முன்மொழிவு வெளியிடப்பட்டது.
கரகல்லாவிலிருந்து தொடங்கும் இந்த இறுதி கட்டப் பயணம், போட்டியாக இல்லாமல் சிறிய சுற்றுலாவாக அமையவுள்ளதுடன், மிதிவண்டி ஓட்டிகள் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் தெரு வழியாக, Petriano நுழைவாயில் மூலம் வத்திக்கானுக்குள் நுழைவார்கள்.
மிதிவண்டி ஓட்டிகள் புனித பேதுரு பெருங்கோவில் மற்றும் திருப்பொருள் அறைங்கள் வழியாக வத்திக்கான் தோட்டம் நோக்கிச் செல்வார்கள். மேலும் அபிசினியன்களின் புனித ஸ்தேவான் கோவில், வத்திக்கான் இரயில் நிலையம் மற்றும் ஆளுநர் மாளிகையை மிதிவண்டி ஓட்டிகள் கடந்து செல்வார்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்