MAP

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ  

கடந்த கால காயங்களைக் குணப்படுத்த துணிவும் அன்பும் தேவை!

கடந்த கால காயங்களை குணப்படுத்துவதற்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் துணிவும் அன்பும் தேவை : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இயேசுவின் அமைதியைப் பெற்று, தூய ஆவியாரின் அருள்வரங்களுக்குத் திறந்த மனதுடன் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்வதன் வழியாக, இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் வாழ்க்கையின் தீவிரமான நவீனத்தில் தங்களை மூழ்கடிக்க முடியும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

வடக்கு சுவிட்சர்லாந்திலுள்ள சூரிச் நகரில் செயல்பட்டு வரும் அனபாப்டிஸ்ட் இயக்கத்தின் 500-ஆம் ஆண்டு நினைவுவிழாக் கொண்டாட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு மே 19, வியாழக்கிழமை இன்று அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! (யோவா 20:19) என்று இயேசு கூறிய அதே வார்த்தைகளால் அவர்களை வாழ்த்துவதாகவும் உரைத்துள்ளார்.

உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றியதைப் பிரதிபலிக்கும் வகையில் தனது கருத்துக்களை வழங்கியுள்ள திருத்தந்தை,  அனபாப்டிஸ்ட் பாரம்பரியத்திலும் காணப்படும் முக்கிய மதிப்பீடுகளான அமைதி, புதுப்பித்தல் மற்றும் தூய ஆவியானவருக்குத் திறந்த மனம் கொண்டிருத்தல் உள்ளிட்ட கருப்பொருள்களை குறிப்பிட்டுக்காட்டியுள்ளார்.

'அன்பு செய்வதற்கான வலிமை' என்ற கருப்பொருளை இப்பெருவிழாக் கொண்டாட்டத்திற்கு அவர்கள் தேர்வு செய்துள்ளதை அவர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, கத்தோலிக்கர்களும் மென்னோனைட்டுகளும் அன்பு, ஒன்றிப்பு, சேவை மற்றும் அவர்களின் பகிரப்பட்ட, சில நேரங்களில் வேதனையான வரலாற்றைப் பற்றிய நேர்மையான பிரதிபலிப்பைத் தழுவுவதற்கான அழைப்பாகக் கருதப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவால்கள் இருந்தபோதிலும், கிறிஸ்தவர்களிடையே ஒற்றுமை அவசியம் என்பதை தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, குறிப்பாக மோதல்கள் நிறைந்த உலகில். இத்தகைய ஒற்றுமை கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதை வலுப்படுத்துகிறது மற்றும் மிகவும் அமைதியான மற்றும் அன்பான சமுதாயத்திற்குப் பங்களிக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

நமது உடன்பிறந்த உறவு இன்னும் ஆழமாக வேரூன்றி வளரும் என்ற நம்பிக்கையில் எனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் உங்களுக்கு வழங்குகிறேன் என்று கூறி தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 மே 2025, 14:38