MAP

உலக மீட்பர் திருவுருவ சுரூபத்தைச் சுற்றி இறைமக்கள் உலக மீட்பர் திருவுருவ சுரூபத்தைச் சுற்றி இறைமக்கள்   (©ADN Celam)

இலத்தீன் அமெரிக்கா & கரீபியன் ஆயர் பேரவைக்குத் திருத்தந்தை செய்தி

ரியோ டி ஜெனிரோ மாநாட்டின் 70வது ஆண்டு நிறைவு மற்றும் CELAM உருவாக்கம் குறித்த திருத்தந்தை பதினான்காம் லியோவின் வாழ்த்துச் செய்தி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இலத்தீன் அமெரிக்கத் தலத்திருஅவைக்கு நிகழ்காலம் ஏற்படுத்தும் சவால்களை ஒன்றிணைந்து தெளிந்து தேர்ந்து புனித நூல்கள், பாரம்பரியம் மற்றும் திருஅவை ஆசிரியத்தின் அளவுகோல்களின்படி தீர்வுகளை வழங்கும் உணர்வுப்பூர்வமான மற்றும் பயனுள்ள ஒன்றிப்பில், மேய்ப்புப் பணிக்கான முயற்சிகளைத் தேடுவதற்காக, கூட்டு மனப்பான்மையுடன் கூடிய இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆயர்கள் அனைவரையும் நான் மனதார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையின் முதல் கூடுதலின் 70-ஆம் ஆண்டு நிறைவையும், அதன் உருவாக்கத்தையும் நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் வகையில் கூடியுள்ள, CELAM எனப்படும் இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் ஆயர் பேரவையின் 40-வது ஆயர் பேரவைக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்த மகிழ்ச்சியான ஆண்டு நிறைவைக் கொண்டாடியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதில் தானும் அவர்களுடன் இணைவதாகவும், இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் ஆயர் பேரவை, அந்த அன்பான கண்டத்தில் பயணம் செய்யும் கடவுளின் புனிதமான மற்றும் உண்மையுள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவித்தல் மற்றும் மேய்ப்புப் பராமரிப்புப் பணியில் ஒன்றிப்பின் அடையாளமாகவும், தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் சேவைக்கான ஒரு புள்ளியாகவும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது என்றும் மொழிந்துள்ளார் திருத்தந்தை.

தற்போதைய வரலாற்றுச் சூழலில், கண்டம் மற்றும் உலகளாவிய அளவில் தொடர்ச்சியான நெருக்கடிகளால் ஏராளமான ஆண்களும் பெண்களும் துன்பத்தையும் வறுமையையும் அனுபவிக்கின்றனர் என்று எடுத்துக்காட்டியுள்ள அவர், நம்மிடையே இருக்கும் உயிர்த்த ஆண்டவர், திருஅவையைப் பாதுகாத்து வழிநடத்துகிறார் என்றும், நமக்குக் கொடுக்கப்பட்ட தூய ஆவியாரால் நம் இதயங்களில் ஊற்றப்பட்ட (உரோ 5:5) அன்பின் வழியாக அதை எதிர்நோக்கில் மீண்டும் தூண்டுகிறார் என்பதை நாம் அவசரமாக நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல சகோதரர் சகோதரிகளைச் சந்திக்கச் செல்வதற்கும், கிறிஸ்து இயேசுவில் மீட்பின் செய்தியை அவர்களுக்கு அறிவிப்பதற்கும், அவருடனான தனிப்பட்ட சந்திப்பிலிருந்து வரும் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் திருஅவையைப் பலப்படுத்துமாறு நாம் அவரை வேண்டுவோம் என்றும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

இறுதியாக, கடவுளால் உலகளாவியத் திருஅவைக்கு மேய்ப்பராக நியமிக்கப்பட்டுள்ள தனக்காக இறைவேண்டல் செய்யுமாறு வேண்டியுள்ள திருத்தந்தை, குவாதலூப்பே அன்னையின் பாதுகாப்பையும் அருளையும் வேண்டியும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கியும் இந்த வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 மே 2025, 14:42