திருநற்கருணை ஆராதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர் திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருநற்கருணை ஆராதனை என்பது திருஅவையின் பணி, நம்பிக்கையாளர்களின் வாழ்வு ஆகியவற்றில் மிக முக்கிய பரிமாணத்தைக் கொண்டது என்றும், இதை அதிகமாக வலியுறுத்தியவர் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் தோமினிக் மம்பர்த்தி.
மே 4, ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற, மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான ஒன்பது நாள் செபக்காலத்தின் இறுதி நாள் திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் கர்தினால் தோமினிக் மம்பர்த்தி.
இயேசுவால் அதிகமாக அன்பு செய்யப்பட்ட யோவான், இயேசுவை கடவுளே என்று அழைக்கின்றார், பேதுரு வலையை கடலில் வீசி இயேசுவை சென்றடைய நினைக்கின்றார் என்ற விவிலியப்பகுதியைக் குறித்து எடுத்துரைத்த கர்தினால் மம்பர்த்தி அவர்கள், அன்பு ஒன்று மட்டுமே நற்செய்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்றும் கூறினார்.
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருக்காட்சி பெருவிழாவன்று வழங்கிய மறையுரையின் கருத்துக்களை நினைவுகூர்ந்த கர்தினால் மம்பர்த்தி அவர்கள், ஞானிகள் தங்களின் இதயங்களால் குழந்தை இயேசுவை வணங்கினர், கடவுள் மனிதனாக உருவெடுத்திருக்கின்றார் என்பதை அறிந்துகொண்டு அவர்கள் எருசலேம் நோக்கி வந்தார்கள் என்றும், இத்தகைய மன நிலை கொண்ட இதயத்தோடு அவர்முன் மண்டியிட்டு அர்ப்பணித்து வணங்க அழைக்கப்படுகின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
திருநற்கருணையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்
திருநற்கருணை ஆராதனையின் முக்கியத்துவத்தையும் பழக்கத்தையும் நாம் மறந்துவிட்டோம் என்று அடிக்கடி வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களை நினைவுகூர்ந்து எடுத்துரைத்த கர்தினால் மம்பர்த்தி அவர்கள், வாழ்வளிக்கும் இந்த திருநற்கருணை ஆராதனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை தனது வாழ்வில் கடைபிடித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும் கூறினார்.
மேய்ப்புப்பணி வாழ்க்கையில் தீவிரம், எண்ணற்ற சந்திப்புகள், இயேசு சபை அருள்பணியாளராக திருத்தந்தைக்குள் பதிந்திருந்த இஞ்ஞாசியார் ஆன்மிக ஒழுக்கத்தால் ஏற்பட்ட நீண்ட செபம் போன்ற திருத்தந்தையின் செயல்பாடுகள் காலத்திற்கும் நினைவுகூரத்தக்கன என்றும், காட்சி தியானம் என்பது அன்பின் மற்றொரு பரிமாணம் என்பதை அதிகமாக வலியுறுத்தியவர் அவர் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் மம்பர்த்தி.
கடவுளுடைய அன்பினால் தூண்டப்பட்டு, அவருடைய அருளால் சுமந்து செல்லப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ், தனது பலத்தை முழுமையாகப் பயன்படுத்தி, தனது பணிக்கு எவ்வளவு உண்மையாக இருந்தார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம் என்று கூறிய கர்தினால் மம்பர்த்தி அவர்கள், அனைத்து மனிதகுலத்திற்கும் நற்செய்தியின் மகிழ்ச்சியை, இரக்கமுள்ள தந்தையை, மீட்பரான கிறிஸ்துவை அறிவித்தவர் திருத்தந்தை என்றும் மொழிந்தார்.
ஒருவர் மற்றவர் மேல் கொள்ளும் அன்பானது நாம் வாழும் பூமியிலிருந்து நம்மைப் பிரிக்காமல், கடவுளன்பில் நம்மை இன்னும் ஆழப்படுத்த அந்தக் கடவுளிடமே நம்மை உயர்த்திச் செல்கின்றது என்று கூறிய கர்தினால் மம்பர்த்தி அவர்கள், இவை எல்லாவற்றையும் அன்னை மரியின் துணையுடன் செய்து, அந்த அன்னை மரியின் பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டு இறுதியில் தனது இளைப்பாறுதலையும் அங்குப் பெறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக தொடர்ந்து செபிப்போம் என்றும் கூறி தனது மறையுரையினை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்