MAP

மீனவர் மோதிரத்தைத் திருத்தந்தைக்கு அணிவிக்கும் கர்தினால் தாக்லே மீனவர் மோதிரத்தைத் திருத்தந்தைக்கு அணிவிக்கும் கர்தினால் தாக்லே 

பால்யம் மற்றும் மீனவர் மோதிரம் வழங்கும் சடங்கு

திருஅவையின் தலைவராக, தியாகமுள்ள வாழ்வு வாழ்ந்த திருத்தூதர் தூய பேதுரு மற்றும் கிறிஸ்துவிற்காகவும் கிறிஸ்தவத்திற்காகவும் தங்களது இன்னுயிரை தியாகம் செய்த மக்கள் ஆகியோர் இரத்தம் சிந்திய இடத்தில் புதிய திருத்தந்தை பணியேற்கும் வழிபாட்டுச் சடங்கானது நடைபெற்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இறைவார்த்தை வழிபாடு

திருப்பலியில் வானவர் கீதமானது பாடப்பட்டதைத் தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடானது ஆரம்பமானது. முதல் வாசகமானது திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து இஸ்பானிய மொழியில் வாசிக்கப்பட்டது. திருப்பாடல் எண் 117 பதிலுரைப்பாடலாக சிஸ்டைன் சிற்றாலயக் குழுவினரால் பாடப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் வாசகமானது திருத்தூதர் பேதுரு எழுதிய திருமுகத்திலிருந்து மூப்பர்களுக்கும் மக்களுக்கும் அறிவுரை என்ற பகுதியானது ஆங்கில மொழியில் வாசிக்கப்பட்டது. உரோமைத் திருஅவைக்கும் பேதுரு மற்றும் அவரது வழித்தோன்றல்களின் பணிக்கும் இடையிலான தொடர்பு இவ்வாசகத்தின் வழியாக வலியுறுத்தப்பட்டது. அல்லேலுயா வாழ்த்தொலியைத் தொடர்ந்து யோவான் நற்செய்தியில் இடம்பெறும் இயேசுவும் பேதுருவும் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் இலத்தீன் மொழியிலும் அதனைத் தொடர்ந்து கிரேக்க மொழியிலும் வாசித்தளிக்கப்பட்டன.    

இறைவார்த்தை வழிபாட்டைத் தொடர்ந்து திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனது பணியினை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் விதமாக பணியேற்பு சடங்கானது ஆரம்பமானது. கத்தோலிக்க திருஅவையின் தலைவராக தந்தைக்குரிய அன்போடு அதனை வழிநடத்துதல் என்ற பெயரில் "பெட்ரினோ" என்னும் இச்சடங்கானது  திருஅவையில் புதிய திருத்தந்தை பணியேற்பு விழாவன்று நடைபெற்று வருகின்றது.

இவ்வழிபாட்டுச் சடங்கின்போது, தலைமைத்துவத்தின் அடையாளமாக புதிய திருத்தந்தைக்கு பால்யம் மற்றும் மீனவர் மோதிரம் எனப்படும் முத்திரை மோதிரம் வழங்கப்பட்டது. என் ஆடுகளைப் பேணி வளர் என்று இயேசுவால் கட்டளையிடப்பட்ட திருத்தூதர் பேதுருவின் வாரிசாக அவர் இருக்க வேண்டும் என்ற கடமையை இப்பால்யமும் மோதிரமும் நினைவூட்டுகின்றன. திருஅவையின் தலைவராக, தியாகமுள்ள வாழ்வு வாழ்ந்த திருத்தூதர் தூய பேதுரு மற்றும் கிறிஸ்துவிற்காகவும் கிறிஸ்தவத்திற்காகவும் தங்களது இன்னுயிரை தியாகம் செய்த மக்கள் ஆகியோர் இரத்தம் சிந்திய இடத்தில் புதிய திருத்தந்தை பணியேற்கும் வழிபாட்டுச் சடங்கானது நடைபெற்றது.

பணியேற்பு சடங்கு

இறைவார்த்தை வழிபாட்டைத் தொடர்ந்து கர்தினால் ஆயர், கர்தினால் திருத்தொண்டர், கர்தினால் அருள்பணியாளர் என வெவ்வேறு கண்டங்களைச் சார்ந்த மூவர் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் அருகில் சென்றனர். மூவரில் முதலாமவர் திருத்தந்தையின் தலைமைத்துவம் மேய்ப்பராக திருஅவையை வழிநடத்தும் தன்மை ஆகியவற்றை எடுத்துரைத்து பால்யத்தினை வழங்கினார்.

பால்யம்

பால்யம் என்பது ஆட்டுக்குட்டியின் கம்பளியால் செய்யப்பட்டது. இது நால்லாயனை அடையாளப்படுத்துகின்றது இப்பால்யமானது, தொலைந்து போன ஆடுகளைத் தேடிக் கண்டடைந்து தனது தோள்களில் சுமந்து செல்லும் நல்லாயனைப்போல திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை இருப்பார் என்பதை அடையாளப்படுத்தும் வண்ணம் புதிய திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது. உயிர்த்த இயேசு மூன்று முறை தனது சீடரான பேதுருவிடம் என்னை அன்பு செய்கின்றாயா என்று கேட்டு என் ஆடுகளைப் பேணிவளர் என்று கூறியதை நினைவுகூரும் வண்ணமாக இப்பால்யம் எனப்படும் கழுத்துப்பட்டையினை திருத்தந்தைக்கு வழங்கினார் கர்தினால் ஆயர்.

திருத்தந்தையின் திருப்பலி ஆடைக்கு மேலாக கழுத்தில் தொங்கவிடப்பட்டு தோள்களில் தொங்கும் இந்த கழுத்துப்பட்டையானது முன்னும் பின்னும் தொங்கும் பகுதிகளைக் கொண்டது. இப்பகுதிகளை முன் பின் இரண்டு கருப்பு சிலுவைகள், தோள்பட்டையைச் சுற்றிலும் 4 கருப்பு சிலுவைகள் என மொத்தம் ஆறு கருப்பு சிலுவைகள் அலங்கரிக்கின்றன. மேலும் இயேசுவை சிலுவையில் அறைய உதவிய மூன்று ஆணிகளும் இக்கழுத்துப்பட்டையில் இணைக்கப்பட்டுள்ளன.

கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் திருத்தந்தைக்காக ஒரு சிறப்பு செபத்தினை எடுத்துரைத்து இறைவனின் பிரசன்னமும் உடனிருப்பும் அவரோடு இருக்க வேண்டி செபித்தார். ஆன்மாக்களின் மேய்ப்பரும் ஆயருமான கிறிஸ்துவை நோக்கிய மன்றாட்டினை எடுத்துரைத்து வாழும் கடவுளின் மகன் என்று திருத்தூதர் பேதுருவால் அழைக்கப்பட்ட கிறிஸ்துவின் உதவியை நாடி செபித்த கர்தினால் தாக்லே அவர்கள் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களுக்கு மீனவர் மோதிரத்தை அணிவித்தார்.

மீனவர் மோதிரம்

நம்பிக்கையை அடையாளப்படுத்தும் விதமாக புதிய திருத்தந்தைக்கு வழங்கப்பட்ட இந்த மீனவர் மோதிரமானது, மீனவரான பேதுரு இயேசுவின் அழைப்பை ஏற்று வலைகளை வீசி அதிகப்படியான மீன்களைப் பெற்றார் என்பதை அடையாளப்படுத்தும் விதமாகவும், தனது சகோதரர்களும் சீடர்களுமான பிறரை நம்பிக்கையில் உறுதிப்படுத்து என்று பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்ட பணியின் அடையாளமாகவும் வழங்கப்பட்டது. இம்மீனவர் மோதிரத்தின் மேற்பகுதியில் திருத்தூதர் பேதுருவின் உருவமும் பின்புறம் திருத்தந்தையின் இலச்சினையும் மோதிரத்தின் வளைவுப் பகுதியில் 14-ஆம் லியோ என்று இலத்தீன் மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

கீழ்ப்படிதல் சடங்கு

இறுதியாக கர்தினால் திருத்தொண்டர் திருத்தந்தையிடம் நற்செய்தி புத்தகத்தை வழங்க திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள்,  புதிய திருத்தந்தை நற்செய்தி புத்தகம் கொண்டு மக்கள் கூட்டத்திற்கு ஆசீர் வழங்க கிரேக்க மொழியில் "Ad multos annos!” பாடலானது பாடப்பட்டது. மக்கள் கரவொலி எழுப்பி தங்களது மகிழ்வினை தெரிவித்தனர். கிறிஸ்துவின் சீடர்களை ஒன்றிப்பிலும், ஒற்றுமையிலும் பாதுகாப்பதில் புதிய திருத்தந்தைக்கு வலிமையும் மென்மையும் கிடைக்கப்பெற தூய ஆவியின் அருளை நாடும் செபத்துடன் இவ்வழிபாட்டு முறை நிறைவிற்கு வந்தது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த அனைத்து மக்களின் பிரதிநிதியாக பன்னிரண்டு பேர் திருத்தந்தையைச் சந்தித்து வாழ்த்தினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 மே 2025, 14:54