MAP

திருத்தூதர் பேதுரு கல்லறையில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை திருத்தூதர் பேதுரு கல்லறையில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை   (ANSA)

செவிசாய்த்தல் மற்றும் உரையாடலைக் கற்றுக்கொள்வோம்

இயேசு கிறிஸ்துவைப்போல சிறந்த உதாரணம் வேறு யாரும் இல்லை என்றும், ஆயனாக இருக்கும் இயேசு நல்ல அன்னையாகவும் நமக்கு இருக்கின்றார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

"என் ஆடுகள் என் குரலைக் கேட்கின்றன" (யோவான் 10:27) என்ற இயேசுவின் வார்த்தைகள் நாம் அனைவரும் மேலும் மேலும் செவிசாய்த்தல், உரையாடலில் ஈடுபடுதல் போன்றவற்றைக் கற்றுக்கொள்வது முக்கியம் என்பதை வலியுறுத்துகின்றன என்றும், முதலில் கடவுளின் குரலுக்கு செவிசாய்த்தல், அதன் பின் மற்றவர்களின் குரலுக்கு செவிசாய்த்தல் மிக அவசியம் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

மே 11, ஞாயிற்றுக்கிழமை காலை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலின் கீழ்ப்பகுதியில் இருக்கும் திருத்தூதர் பேதுருவின் அடிநிலக்கல்லறையில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் நல்லாயன் ஞாயிறு பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

“வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்ற இயேசுவின் வார்த்தைகளை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இயேசு கிறிஸ்துவைப்போல சிறந்த உதாரணம் வேறு யாரும் இல்லை என்றும், ஆயனாக இருக்கும் இயேசு நல்ல அன்னையாகவும் நமக்கு இருக்கின்றார் என்று எடுத்துரைத்து அன்னையர் தின வாழ்த்துக்களையும் எடுத்துரைத்தார்.

கடவுள் அன்பின் மிக அழகான வெளிப்பாடுகளில் ஒன்று அன்னையர்கள், அவர்கள் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் மீது அளவற்ற அன்பினைப் பொழிபவர்கள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், திருஅவையில் இறையழைத்தல் பெருக சிறப்பாக நாம் உழைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நல்ல ஒரு முன்மாதிரிகையான வாழ்க்கையை அமைப்பதன் வழியாகவும்,  நற்செய்தியின் மகிழ்ச்சியை வாழ்வதன் வழியாகவும், இளைஞர்கள் கடவுளுடையக் குரலை ஏற்கவும், பின்பற்றவும், திருஅவைக்காகப் பணியாற்றுவதற்கான அழைத்தலைப் பெறவும் நாம் நல்ல ஆயனாக செயல்பட வேண்டும் என்றும் விளக்கமளித்தார் திருத்தந்தை.

நற்செய்தியில் இயேசு “அஞ்சாதே” என்று பலமுறை கூறுகிறார். எனவே நமது சான்றுள்ள வாழ்வால், வார்த்தைகளால் துணிவை எடுத்துரைப்பவர்களாக நாம் இருக்கவேண்டும் என்றும், வாழ்வைக் கையளிப்பது, பணியாற்றுவது சில நேரங்களில் பெரிய தியாகங்களைச் செய்வது போன்றவை திருஅவைப் பணியில் வாழ்வது போன்றதாகும் என்றும் கூறினார் திருத்தந்தை.

உறவின் பாலங்களை எவ்வாறு கட்டுவது என்பதை அறிவது, தீர்ப்பளிக்காமல் இருப்பது, செவிசாய்ப்பது, கதவுகளை மூடாமல் இருப்பது என்பது பற்றி அறிய முயலவேண்டும் என்றும், கடவுள் நம்மை எங்கு அழைக்கிறார் என்பதை உரையாடலின் வழியாகக் கண்டறிவது மிக அவசியம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

திருஅவையில் ஒன்றிணைந்து நடப்பதன் வழியாக கடவுளின் அருளை நாம் அடைய முடியும் என்றும், அவருடைய வார்த்தையை நாம் கேட்க முடியும், அதனால் அவருடைய மக்கள் அனைவருக்கும் பணியாற்ற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 மே 2025, 16:03