முன்மாதிரிகையான வாழ்வு வாழ்ந்த அருளாளர் ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா
மெரினா ராஜ் – வத்திக்கான்
மே 24, சனிக்கிழமை போலந்தின் போஸ்னா மறைமாவட்டத்தில் அருளாளராக உயர்த்தப்பட்ட அருள்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா ஸ்ட்ரீச் அவர்கள், ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்காக ஆற்றிய பணிக்காக 1938 -ஆம் ஆண்டில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார் என்றும், அவரது முன்மாதிரிகையான வாழ்வு, அருள்பணியாளர்கள் தங்களது உடன் சகோதரர்களுக்காக நற்செய்தியை தாராளமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 25, ஞாயிறு வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த இறைமக்களுக்கு வழங்கிய பாஸ்கா கால மூவேளை செப உரைக்குப் பின் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், மே 24 அன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் சகாய அன்னை திருவிழாவை நினைவுகூர்ந்து சீனத் தலத்திருஅவை மற்றும் அகில உலக திருஅவைக்காக அன்னை மரியிடம் செபம் எடுத்துரைக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.
கிறிஸ்தவர்களின் சகாய அன்னைக்கான திருவழிபாட்டு நாளானது திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களால் நிறுவப்பட்டது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், சீனத் தலத்திருஅவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்நாளில் சீனம் மட்டுமல்லாது உலகில் உள்ள எல்லா தலத்திருஅவைகள் மற்றும் திருத்தலங்களில் எடுத்துரைக்கப்பட்ட செபங்கள், சீன கத்தோலிக்கர்கள் மீதான அக்கறை மற்றும் அன்பின் அடையாளமாக இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
சீன கத்தோலிக்கர்கள் மீதான அக்கறை, அன்பு, உலகளாவிய திருஅவையுடனான ஒற்றுமை போன்றவற்றின் அடையாளமாக கடவுளிடம் செபங்கள் எழுப்பப்பட்டன என்றும், தூய அன்னை மரியின் பரிந்துரை, சோதனை வேளைகளிலும் எப்போதும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்க, நற்செய்தியின் வலுவான மற்றும் மகிழ்ச்சியான சாட்சிகளாக இருக்க நமக்கு அருளைப் பெற்றுத் தரட்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
போரினால் துன்புறும் அனைத்து மக்களையும் நினைவுகூர்ந்து செபிக்க வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், உரையாடல், அமைதிக்கான உண்மையான தேடல் போன்றவற்றைக் கண்டறிய முயல்பவர்களுக்கு துணிவும் விடாமுயற்சியும் கிடைக்கப்பெற வேண்டிக்கொள்வோம் என்றும் கூறினார்.
நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட “இறைவா உமக்கே புகழ்” என்ற சுற்றுமடலினை பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார் என்று கூறிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், இச்சுற்றுமடலானது மிகச்சிறப்பான விதத்தில் மக்களிடையே பரவி, சுற்றுச்சூழல் தொடர்பான எண்ணற்ற முயற்சிகளை ஊக்குவிக்கிறது, பூமி மற்றும் ஏழைகளின் அழுகுரலைக் கேட்க நம் அனைவருக்கும் கற்றுக்கொடுக்கிறது என்றும் கூறினார்.
லௌதாதோ சி இயக்கத்தையும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை, உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் அனைவரையும் வாழ்த்தி ஊக்கமூட்டிய திருத்தந்தை அவர்கள், இத்தாலி, வலென்சியா, போலந்து, என உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் மற்றும் உறுதிப்பூசுதல் அருளடையாளம் பெற இருக்கும் ஜெனோவா பகுதி இளையோர் என கூடியிருந்த அனைவரையும் வாழ்த்தினார்.
இறுதியாக பாஸ்கா கால மூவேளை செபத்தினை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தனது ஆசீரினை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்