எதிர்நோக்கின் அடையாளங்களாக இருக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருமுழுக்கு அருளடையாளம் பெற்ற நாம் ஒவ்வொருவரும் இன்றைய உலகில் எதிர்நோக்கின் அடையாளமாக இருக்கக் கடவுளால் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்வது மிக முக்கியமானது என்றும், நமக்கு ஆற்றல் தரும் நம்பிக்கையானது, கிறிஸ்துவின் ஒளியை நமது வாழ்வில் காணவும், நம்பிக்கை நமது வாழ்விற்கு எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 26, திங்கள் மாலை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் கர்தினால் Peter Kodwo Appiah Turkson அவர்கள் தலைமையில் “ஆப்ரிக்காவில் அமைதிக்கான எதிர்நோக்கு” என்னும் கருப்பொருளில் ஆப்ரிக்க நாட்டு அரசுத்தூதர்கள் மற்றும் யூபிலி ஆண்டு திருப்பயணிகள் பங்கேற்ற திருப்பலியானது நடைபெற்றது. இத்திருப்பலியின் நிறைவில் எதிர்பாராதவிதமாக வத்திக்கான் பெருங்கோவில் வந்து திருப்பயணிகளை வாழ்த்தி கூறியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
எதிர்நோக்கைக் காணவும், எதிர்நோக்கின அடையாளங்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்கவும், இந்த யூபிலி ஆண்டானது நமக்கு ஊக்கமூட்டுகின்றது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஞாயிற்றுக்கிழமைகள், திருப்பயணங்களின்போது மட்டுமன்று, ஒவ்வொரு நாளும் இயேசு தரும் எதிர்நோக்கால் நாம் நிரப்பப்பட்டு, அனைவரும் உடன்பிறந்த சகோதர சகோதரிகளாக கடவுளைப் புகழ ஒன்றிணைந்து நடப்போம் என்றும் கூறினார்.
நம்மிடம் உள்ள அனைத்தும், நாம் எல்லாருமே கடவுளின் கொடை என்பதை உணர்ந்து வாழ வேண்டும் என்றும், கடவுளின் அக்கொடையினை பிறருக்கான பணிக்காக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
பெருங்கோவிலில் இருந்த திருப்பயணிகள் அனைவரையும் சந்தித்து ஆங்கிலத்தில் வாழ்த்துக் கூறிய திருத்தந்தை அவர்கள், உங்கள் வாழ்க்கையை, உங்கள் நம்பிக்கையை இயேசு கிறிஸ்துவில் வாழ்வதற்கு நன்றி என்றும் அவர்களிடத்தில் கூறினார்.
கர்தினால்கள், பேராயர்கள், பேரருள்தந்தையர்கள் என அனைவரோடும் இணைந்து திருப்பலியினை சிறப்பித்த அம்மக்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், தங்களது சிறந்த சான்றுள்ள வாழ்வால் ஆப்ரிக்க கண்டமானது உலக மக்களுக்கு சான்றளிக்கின்றது என்றும் கூறினார்
கடவுளாகிய இயேசுவே நன்றி, உமது பெயர் போற்றப்படுவதாக, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அவர்களுக்கு சிறுசெபத்துடன் கூடிய ஆசீரினை அம்மக்களுக்கு வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்