MAP

Centesimus Annus அமைப்பினருடன் திருத்தந்தை 14-ஆம் லியோ Centesimus Annus அமைப்பினருடன் திருத்தந்தை 14-ஆம் லியோ  (ANSA)

கடவுளின் கண்களால் உலகத்தைப் பார்ப்பது இன்றியமையாதது

அமைதி மற்றும் உரையாடலின் கருவியாகத் திகழும் உடன்பிறந்த உணர்வின் பாலங்களைக் கட்டுவோம் – திருத்தந்தை 14-ஆம் லியோ.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆழமாகக் கற்றல், உரையாடல், ஏழைகளைச் சந்தித்து அவர்களின் குரலுக்கு செவிசாய்த்தல் போன்றவை திருஅவைக்கும் மனித குலத்திற்கும் புதையல் போன்றவை என்றும், விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் ஆகியோரைக் கொண்ட உலகத்தைக் கடவுளின் கண்களால் பார்ப்பது இன்றியமையாதது என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.      

மே 17, சனிக்கிழமை திருப்பீடத்தில் Centesimus Annus என்ற பாப்பிறை ஆதரவு நிறுவனத்தைச் சார்ந்தவர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

மின்னனுப் புரட்சியின் சூழலில், ஆய்ந்து அறியும் கல்வி கற்பிப்பதற்கான முறை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு, வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, வளர்க்கப்பட வேண்டும், சோதனைகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள் நம்மைச் சுற்றிலும் மிகக்குறைந்த உரையாடல்களே உள்ளன, கூச்சலிடும் வார்த்தைகள், போலிச் செய்திகள், பகுத்தறிவற்ற ஆய்வறிக்கைகள் நிறைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்

உரையாடல் மற்றும் சந்திப்புக்களுடன் கூடிய  உறவின் பாலங்களைக் கட்டுவோம், எப்போதும் அமைதியுடன் ஒரே மக்களாக இருக்க ஒன்றிணைவோம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அமைதி மற்றும் உரையாடலின் கருவியாகத் திகழும் உடன்பிறந்த உணர்வின் பாலங்களைக் கட்டுவோம் என்றும் எடுத்துரைத்தார்.

குறிக்கோள் என்பது வேறுபட்ட பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்வதே என்றும், ஒவ்வொரு தலைமுறையும் புதியது, புதிய சவால்களையும், புதிய கனவுகளையும், புதிய கேள்விகளையும் கொண்டது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

உரையாடல் மற்றும் சமூக நட்பு வழியாக சந்திப்பு கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான ஒரு அடிப்படை அம்சம் நமக்கு உள்ளது என்றும், நமது சமகாலத்தவர்களில் பலரின் உணர்வுகளுக்கு, "உரையாடல்" மற்றும் "கோட்பாடு" என்ற வார்த்தைகள்  எதிர்மறையாகவும் பொருந்தாததாகவும் ஒலிக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

"கோட்பாடு" என்பதை திருஅவையின் சமூகக் கோட்பாட்டின் வழியாக நிரூபிப்பது அவசரமானது, அதில் நம்பிக்கைக்குரிய, அர்த்தம் உள்ளது என்றும் அது இல்லாமல் உரையாடல் இல்லை என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கோட்பாடு என்பதற்கு "அறிவியல்", "ஒழுக்கம்" அல்லது "அறிவு" என்பவைகள் கூட ஒத்த பொருள் அளிப்பவையாக இருக்கலாம் என்றும் எடுத்துரைத்தார்.

கோட்பாடு என்பது ஒரு கருத்துக்கு சமமானது அல்ல, மாறாக உண்மையை நோக்கிய ஒரு பொதுவான, ஒன்றிணைந்த மற்றும் பல துறைகளைக் கொண்ட பாதையாகும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 மே 2025, 12:19