MAP

தூய ஜான் மரிய வியான்னி தூய ஜான் மரிய வியான்னி  

இயேசுவை நிபந்தனையின்றி அன்பு செய்த புனிதர்கள்

மூன்று புனிதர்களும் புனிதர் பட்டம் பெற்றதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது என்பது பிரான்ஸ் நாட்டில் நீண்ட நூற்றாண்டுகளாக செயல்பட்டு வரும் நற்செய்தி அறிவிப்பு மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கைக்காக நன்றி செலுத்துவதற்கான ஓர் அழைப்பாகும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

புனிதர்கள் ஜான் யூதஸ், ஜான் மரிய வியான்னி, குழந்தை இயேசுவின் தெரசா ஆகியோர் புனிதர்களாக உயர்த்தப்பட்ட நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் அகில உலக திருஅவைக்கு புனிதர்களாக அவர்களைக் கொடுத்த பிரான்ஸ் தலத்திருஅவைக்கு நன்றி தெரிவித்து செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

புனிதர்கள் மூவரும் இயேசுவை எளிமையான, வலுவான மற்றும் உண்மையான வழியில் நிபந்தனையின்றி அன்பு செய்தார்கள், அன்றாட வாழ்வில் குறிப்பிட்ட வகையில்  கடவுளது நன்மையையும் மென்மையையும் அனுபவித்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், தங்களது மறைப்பணி பேரார்வத்தால் போற்றத்தக்க வகையில் சான்று பகர்ந்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

“ஒருபோதும் வறண்டு போகாத, ஒருபோதும் மறைந்து போகாத, அன்பு செய்ய விரும்புவோருக்கு எப்போதும் புதிதாகத் தன்னை வழங்கும் ஒரு நதி இயேசுவின் அன்பு.  கிறிஸ்துவின் காயங்களிலிருந்து அது தொடர்ந்து பாய்கிறது, அவரது அன்பு மட்டுமே ஒரு புதிய மனிதகுலத்தை சாத்தியமாக்கும்” என்ற இயேசுவின் திருஇருதயத்தைப் பற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

நமது தலைவரும் கடவுளுமான இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை இறைமக்களுக்குத் தொடர்ந்து எடுத்துரைத்தவர்கள் புனிதர்கள் என்று மொழிந்துள்ள திருத்தந்தை அவர்கள், இயேசு மற்றும் அன்னை மரியின் திருஇருதய திருவிழாவை முதன் முதலில் சிறப்பித்தவர் புனித ஜான் யூதஸ் என்றும், அருள்பணித்துவ பேரார்வம் திருஇருதயத்தின் அன்பு என்று தன் வாழ்வால் மொழிந்தவர் புனித ஜான் மரிய வியான்னி என்றும் கூறியுள்ளார்.

புனித குழந்தை இயேசுவின் தெரசா, நமது உலகத்திற்குத் தேவையான சிறந்த அறிவியல் அன்பில் சிறந்தவராக விளங்கினார் என்றும், தனது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும், தன்னிச்சையாகவும் புத்துணர்ச்சியுடனும் இயேசுவின் பெயரை உச்சரித்து எளிய வழியில் அவரை அடைவதற்கான சிறிய வழியை உருவாக்கினார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்த மூன்று புனிதர்களும் புனிதர் பட்டம் பெற்றதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது என்பது பிரான்ஸ் நாட்டில் நீண்ட நூற்றாண்டுகளாக செயல்பட்டு வரும் நற்செய்தி அறிவிப்பு மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கைக்காக நன்றி செலுத்துவதற்கான ஓர் அழைப்பாகும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், மீண்டும் நமது உள்ளங்களில் நம்பிக்கையை எழுப்பி புதிய மறைப்பணி பேரார்வத்தைத் தூண்டுவதற்கான வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

புனிதர்கள் தாமாகத் தோன்றுவதில்லை, மாறாக, கடவுளின் அருளால், வாழும் கிறிஸ்தவ சமூகங்களுக்குள் எழுகிறார்கள் என்றும், அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்தி, இயேசுவின் அன்பையும் அவரைப் பின்பற்றும் விருப்பத்தையும் தங்கள் இதயங்களில் கொண்டு பிறரும் வாழத் தூண்டுகின்றார்கள் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 மே 2025, 15:14