MAP

புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் திருத்தந்தை

பெரியதாக சிந்திக்கும் திறன், துணிச்சலான திட்டங்கள், புதிய மற்றும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளுதல் போன்றவற்றில் உரோம் நகர் தன்னை நிலைநிறுத்துகிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நம்மை மாற்றவும், வெல்லவும் எவ்வளவுக்கு அதிகமாக நற்செய்தியை நாம் நம் வாழ்வில் அனுமதிக்கின்றோமோ, அவ்வளவுக்கு அதிகமாக நற்செய்தியை நம்மால் அறிவிக்க முடியும் என்றும், தூயஆவியின் ஆற்றல் நம் உள்ளத்தில் இருந்து நம்மைத் தூய்மைப்படுத்தவும், நம் வார்த்தைகளை எளிமையாக்கவும், நம் விருப்பங்களை நேர்மையாகவும் தெளிவாகவும், நம் செயல்களை தாராளமாகவும் மாற்ற அனுமதிக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

மே 25, ஞாயிறு மாலை அனைத்துலக ஆலயங்களுக்கெல்லாம் தாய் ஆலயமாகத் திகழும் உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவிலின் பொறுப்பேற்கும் திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

நினைவு கூர்தல் என்பது நாம் அனுபவித்த மற்றும் கற்றுக்கொண்டவற்றில் இதயத்தின் கவனத்தைத் திருப்பவும், அதன் அர்த்தத்தை இன்னும் ஆழமாக ஊடுருவி அதன் அழகை ருசிப்பதற்காகத் திரும்புதல் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், சவால்கள், மக்களின் தேவைகள், நற்செய்தி மற்றும் பிறரன்புப் பணிகளுக்கான முயற்சிகள் போன்ற அனைத்திற்காகவும் உரோம் மறைமாவட்டத்திற்கு நன்றி கூறினார்.

திருஅவையின் வரலாற்றுக்குத் தகுதியான ஒரு கடினமான பயணத்தை உரோம் மறைமாவட்டம் மேற்கொண்டு வருகின்றது என்று மொழிந்த திருத்தந்தை அவர்கள், பெரியதாக சிந்திக்கும் திறன், துணிச்சலான திட்டங்கள், புதிய மற்றும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளுதல் போன்றவற்றில் உரோம் நகர் தன்னை நிலைநிறுத்துகிறது என்றும் கூறினார்.

யூபிலி ஆண்டிற்காக மிகத் தொலைவில் இருந்து, நாடுகளில் இருந்து வரும் மக்களை அன்போடு வரவேற்கும் ஒரு பெரிய திறந்த மற்றும் வரவேற்கின்ற வீடாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கையின் சுடராகவும் உரோம் மறைமாவட்டம் திகழ்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

நமது பணிச்செயல்பாடுகளில் நாம் செய்யும் அனைத்து நன்மைகளும் நம்மைப் பற்றியது அல்ல அவை, கிறிஸ்துவின் செயல்கள், அவரன்றி நம்மால் எதுவும் செய்ய முடியாது என்றும், “அவரைப் பற்றி நாம் மகிமை அடைகின்றோம், அவரிடமிருந்தே நமது பணியின் அனைத்து செயல்திறனும் பெறப்படுகிறது” என்ற திருத்தந்தை தூய முதலாம் லியோ அவர்களின் கருத்துக்களை நினைவுகூர்ந்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 மே 2025, 12:32