MAP

திருத்தந்தையின் முதல் புதன் மறைக்கல்வி உரை - விதைப்பவர் உவமை

மே 21 , புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் விதைப்பவர் உவமை குறித்த கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு தனது முதல் மறைக்கல்வி உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ

மெரினா ராஜ் – வத்திக்கான்

மே 21, புதனன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் விதைப்பவர் உவமை குறித்த கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு தனது முதல் மறைக்கல்வி உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு என்ற தலைப்பில் யூபிலி ஆண்டு 2025 ஐ முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தொடங்கப்பட்ட தொடர் மறைக்கல்வியானது மீண்டும் ஆரம்பமானது. பிப்ரவரி 12 புதன்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பிறப்பும், இடையர்களின் வருகையும் என்ற தலைப்பில் இயேசுவின் வாழ்க்கை குறித்து எடுத்துரைத்தார். அதன்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது மறைக்கல்வி உரைக் கருத்துக்கள் அனைத்தும் எழுத்துப் படிவமாக மக்களுக்கு வழங்கப்பட்டன. ஏறக்குறைய 14 வாரங்களுக்குப் பின் இறைமக்களுக்கு வழங்கப்படும் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரையானது இன்று வத்திக்கான் வளாகத்தில் ஆரம்பானது.

உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த மக்கள் வத்திக்கான் வளாகத்தில் குழுமியிருக்க அவர்கள் நடுவில் திறந்த காரில் வலம் வந்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ. சிறு குழந்தைகளைத் தொட்டு ஆசீரளித்தும், இறைமக்களைக் கையசைத்தும் வாழ்த்தியும் மக்ழிந்தவாறு வத்திக்கான் வளாகத்தின் மேடைப்பகுதியை வந்தடைந்தார் திருத்தந்தை.

சிலுவை அடையாளம் வரைந்து திருத்தந்தை அவர்கள் கூட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். அதன்பின் மத்தேயு நற்செய்தியில் உள்ள விதைப்பவர் உவமை  பகுதியானது இத்தாலியம், அரபு, இஸ்பானியம், சீனம், போர்த்துக்கீசியம், பிரெஞ்சு, போலந்து, ஜெர்மானியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

மத்தேயு 13: 1- 9

விதைப்பவர் உவமை

அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால், கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. ஆனால், இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது முதல் பொது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்கள்

அன்புள்ள சகோதர சகோதரிகளே,

எனது முதல் மறைக்கல்வி உரைக் கூட்டத்திற்கு உங்களை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். யூபிலி ஆண்டை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் “இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு” என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட தொடர் மறைக்கல்வி உரையினை மீண்டும் நாம் தொடங்குவோம். எதிர்நோக்கை மீண்டும் பெற நமக்கு உதவும் இயேசுவின் உவமைகளைப் பற்றி இன்று நாம் சிந்திப்போம். ஏனெனில் உவமைகள் வரலாற்றில் கடவுள் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைக் காட்டுகின்றன. இன்று நான் முக்கியமான ஓர் உவமையைப் பற்றி எடுத்துரைக்க விரும்புகின்றேன். ஏனெனில் இந்த உவமையே அனைத்து உவமைகளுக்கும் ஒரு வகையான அறிமுகமாக அமைகின்றது. அதுவே விதைப்பவர் உவமை. (மத்தேயு 13:1-17). இந்த உவமையின் வழியாக இயேசுவின் தொடர்பு கொள்ளும் முறையை நாம் அடையாளம் காண முடிகின்றது. இக்காலத்தில் நற்செய்தியை அறிவிப்பதற்கு இவ்வுமையானது நமக்கு நிறைய கற்பிக்கிறது.

இயேசு எடுத்துரைக்கும் ஒவ்வொரு உவமையும் அன்றாட வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதையையோ அல்லது அக்கதையிலிருந்து ஏதாவது ஒன்றையோ, அல்லது அக்கதையின் ஆழமான அர்த்தத்திற்கோ செல்ல நமக்கு அழைப்புவிடுக்கின்றது. இந்த உவமையானது நமக்குள் கேள்விகளை எழுப்பி, தோற்ற மாயைகளில் நின்று விட வேண்டாம் என்று நமக்கு வலியுறுத்துகின்றது. இக்கதையில் இவ்வுவமையில் நான் எங்கே இருக்கிறேன்? இந்த உருவகம் என் வாழ்க்கைக்கு என்ன சொல்கிறது? என்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ளலாம். "உவமை" என்ற சொல் “முன்னால் எறிதல்” என்று பொருள்படும் கிரேக்க வினைச்சொல்லான "paraballein" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இந்த உவமையானது என்னைத் தூண்டுகின்ற ஒரு வார்த்தையை எனக்கு முன்னால் வீசுகிறது, என்னை நானே கேள்வி கேட்கத் தூண்டுகிறது என்ற அர்த்தத்தில் அழைக்கப்படுகின்றது. விதைப்பவர் உவமை கடவுளின் வார்த்தையின் பரிமாணத்தையும் அது உருவாக்கும் விளைவுகள் பற்றியும் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

உண்மையில், நற்செய்தியில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தையும் நம் வாழ்க்கை என்னும் நிலத்தில் வீசப்படும் விதை போன்றது. இயேசு தனது பணிவாழ்வில் மக்களுக்கு எடுத்துரைக்கும் கருத்துக்களில் பல முறை விதையை எடுத்துக்காட்டாக வெவ்வேறு அர்த்தங்களுடன் பயன்படுத்துகிறார். மத்தேயு நற்செய்தியின் 13 ஆம் அதிகாரத்தில் இடம்பெறும் விதைப்பவர் உவமை மற்ற சில சிறிய உவமைகளின் தொடரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. கோதுமை மணி மற்றும் களைகள், கடுகு விதை, வயலில் மறைந்திருக்கும் புதையல் என்னும் சில உவமைகள் நிலப்பரப்பில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கின்றன. உவமையில் குறிப்பிடப்படும் மண் என்பது என்ன? அது நம் இதயம். இதயம் மட்டுமல்லாது உலகம், சமூகம், திருஅவை என எல்லா இடங்களிலும் கடவுளின் வார்த்தை பலனளிக்கிறது, வாழ்வின் ஒவ்வொரு எதார்த்தத்தையும் வாழத் தூண்டுகிறது.

விதைப்பவர் உவமையின் தொடக்கத்தில், இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர் (மத்.13:1).  என்று நாம் வாசிக்கக் கேட்கிறோம். ஏனெனில் அவரது வார்த்தை நம்மைக் கவர்கின்றது, ஆர்வத்தைத் தூண்டுகின்றது. பல சூழ்நிலைகளில் வாழும் மக்கள் பலர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டனர். இயேசுவின் வார்த்தையானது பொதுவானது எல்லாருக்குமானது. ஆனால் அவ்வார்த்தைகள் ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு வகையான மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இந்த சூழலானது உவமையின் அர்த்தத்தை நன்கு புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. சாதாரணமான எளிய மனிதரான விதைப்பவர் ஒருவர் விதைக்கச் செல்கிறார், ஆனால் விதை எங்கே விழுகிறது என்பதை அவர் பொருட்படுத்தவில்லை. பாதையில், பாறைகளில், முட்களுக்கு இடையில் என விதைகள் கனிகொடுக்க வாய்ப்பில்லாத இடத்தில் கூட அவர் விதைகளை வீசுகிறார். இந்த அணுகுமுறையானது கேட்பவரை ஆச்சரியப்படுத்துகிறது, அது எப்படி? என அவரை கேள்வி கேட்கத் தூண்டுகிறது.

நாம் நம்வாழ்வில் நடக்கும் விடயங்களைக் கணக்கிடப் பழகிவிட்டோம் - சில சமயங்களில் அது அவசியமானதும் கூட. ஆனால் அன்பில் இது பொருந்தாது!. "வீணாக" விதையை வீசும் விதைப்பவரின் செயலானது, கடவுள் நம்மேல் அன்பை வீசும் செயலுக்கான ஓர் உருவகமாகும். உண்மையில், விதையின் விதியானது பூமி அதை வரவேற்கும் விதத்தையும் அது தன்னைக் கண்டுபிடிக்கும் சூழ்நிலையையும் பொறுத்தது என்பது உண்மைதான், ஆனால் இந்த உவமையில் இயேசு நமக்குச் சொல்வது, கடவுள் தம்முடைய வார்த்தையின் விதையை எல்லா வகையான மண்ணிலும், அதாவது, நம்முடைய வாழ்வின் எல்லா சூழலிலும் வீசுகிறார். ஏனெனில் சில நேரங்களில் நாம் மிகவும் மேலோட்டமாக வாழ்பவர்களாக, திசை திருப்பப்பட்டவர்களாக, உற்சாகம் நிறைந்தவர்களாக, வரவேற்கப்படுபவர்களாக, வாழ்க்கையின் கவலைகளால் சுமையைத் தாங்குபவர்களாக இருக்கிறோம். கடவுள் நம்மில் நம்பிக்கையுடன் இருக்கிறார், உடனடியாகவோ அல்லது பின்னரோ விதை மலரும் என்று நம்புகிறார். நாம் சிறந்த மண்ணாக மாறும் வரை அவர் காத்திருக்கவில்லை, மாறாக எப்போதும் தாராளமாக நமக்குத் தம்முடைய வார்த்தைகளைக் கொடுக்கிறார். ஒருவேளை அவர் நம்மேல் கொண்ட நம்பிக்கையைப் ஏனெனில் இது கடவுளின் தாராள மனப்பான்மை மற்றும் இரக்கம் என்ற பாறையில் நிறுவப்பட்ட நம்பிக்கையைப் பார்ப்பதன் வழியாக, சிறந்த மண்ணாக  நாம் இருக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் தூண்டப்படுகின்றது.

விதையானது கனியைத் தரும் விதத்தைச் சொல்வதில், இயேசு தனது வாழ்க்கையைப் பற்றியும் பேசுகிறார். இயேசுவே வார்த்தையாகவும் விதையாகவும் இருக்கின்றார். கனி கொடுக்க விதை மடிய வேண்டும். எனவே, இந்த உவமையானது, கடவுள் நமக்காக விதையை வீணடிக்கவும் தயாராக இருக்கிறார், இயே நம் வாழ்க்கையை மாற்றுவதற்காக  இறக்கவும் தயாராக இருக்கிறார் என்பதை எடுத்துரைக்கின்றது.

வான் கோங் என்ற ஓவியரின் சூரிய மறைவு நேரத்தில் விதைப்பவர் என்னும் அழகான ஓவியம் எனக்கு நினைவிற்கு வருகின்றது. சுட்டெரிக்கும் சூரியனில் விதைப்பவரின் அந்த உருவம் விவசாயியின் உழைப்பைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றது. விதைப்பவரின் முதுகுக்குப் பின்னால் வான் கோங் முற்றிய தானியத்தை சித்தரித்துள்ளார். இந்த உருவமானது எதிர்நோக்கின் உருவமாகக் காட்சியளிக்கின்றது. ஒரு வகையில் விதையானது ஏற்கனவே கனி கொடுத்துள்ளது. எப்படி என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் விதை பலனளித்துள்ளது. இருப்பினும், காட்சியின் மையத்தில் விதைப்பவர் இல்லை, அவர் ஓரமாக நிற்கிறார்; ஒருவேளை அவர் சில நேரங்களில் இல்லாததாகவோ அல்லது தொலைவில் இருப்பதாகவோ தோன்றினாலும், வரலாற்றை நகர்த்துபவர் கடவுள் என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காக முழு ஓவியமும் சூரியனின் உருவம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஏனெனில் பூமியின் நிலப்பகுதிகளை சூடாக்கி விதையை விதைக்க வைப்பது சூரியன்தான்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே, இன்றைய வாழ்க்கையின் எந்த சூழ்நிலையில் கடவுளின் வார்த்தை நம்மை வந்து அடைகிறது? அவருடைய வார்த்தையாகிய இந்த விதையை வரவேற்க எப்போதும் இறைவனிடம் அருளை நாம் கேட்போம். நாம் ஒரு வளமான மண் அல்ல என்பதை உணர்ந்தோமானால், நாம் சோர்வடையாமல், நம்மை ஒரு சிறந்த நிலமாக மாற்றுவதற்கு இன்னும் அதிகமாக உழைக்கும்படி அவரிடம் கேட்போம். அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை நிறைவு செய்ததும் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். ஆங்கில மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை மறைக்கல்வி உரையின் தொகுப்பினை ஆங்கில மொழியில் அவர்களுக்கு எடுத்துரைத்தார். இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், காசா பகுதியில் நிலவும் சூழலை சுட்டிக்காட்டி அமைதி நிலவ வேண்டி தனது விண்ணப்பத்தை மீண்டும் எடுத்துரைத்தார். லோம்பார்தோ திருப்பீட குருத்துவக் கல்லூரி அருள்பணியாளர்களையும், கிறிஸ்துவின் படையாளர்களையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், தங்கள் வாழ்க்கையை இயேசுவின் மீதும் உறுதியான பாறையாகிய அவருடைய வார்த்தையின் மீதும் அடிப்படையாகக் கொண்டு, துணிவுள்ள அறிவிப்பாளர்களாக இருக்க வேண்டுமென்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.  

திருஅவைக் குழுமங்கள், நற்செய்தியை உண்மையாகப் பின்பற்றவும், குடும்பத்திலும் மற்ற எல்லா சூழலிலும் உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்கவும் வாழ்த்தினார். இளைஞர்கள், நோயாளிகள் மற்றும் புதுமணத் தம்பதிகள் ஆகியோரை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், ஒவ்வொருவரும் எப்போதும் மகிழ்ச்சியுடன் கடவுளுக்கு பணியாற்றவும் தங்களாது அண்டை வீட்டாரை நற்செய்தி மனப்பான்மையுடன் அன்பு செய்யவும் கேடுக்கொண்டார். இறுதியாக,  கடந்த (ஏப்ரல் 2̀1, திங்கள்கிழமை) சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு விண்ணகத் தந்தையின் வீட்டிற்குத் திரும்பிய அன்பான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்ந்து தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

இறுதியாக விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து கூடியிருந்த மக்களுக்கு தன் ஆசீரினை வழங்கினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 மே 2025, 09:00

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >