நம்பிக்கையும் செபமும் உணவிற்கு சுவையூட்டும் உப்பு போன்றவை
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஒவ்வொருவரும் தங்களது அன்றாடப் பணியை அர்ப்பணிப்புடனும் நம்பிக்கையுடனும் செய்வதன் வழியாக திருஅவைக்குத் தங்களது பங்களிப்பை வழங்குகின்றார்கள் என்றும், ஏனெனில் நம்பிக்கையும் செபமும் நாம் உண்ணும் உணவுக்கு சுவையைத் தரும் உப்பு போன்றது என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 24, சனிக்கிழமைக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் வத்திக்கான் நகரப் பணியாளர்கள், உரோமன் கூரியா பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஒற்றுமை மற்றும் அன்பில் நாம் அனைவரும் ஒத்துழைத்து வாழ வேண்டும் எனில், பணிச்சூழல், அன்றாட சூழ்நிலைகளில், நமது செயல்களில் ஒற்றுமை மற்றும் அன்பை வாழ முயற்சிக்க வேண்டும் என்றும், உடன் பணியாளர்களிடம் ஒன்றிப்பைக் கட்டியெழுப்புபவர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்தது போல நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக ஒற்றுமையை உருவாக்குபவர்களாக வாழ வேண்டும் என்றும் தவறான புரிதல்களை பொறுமை மற்றும் மனத்தாழ்மையுடனும் கடந்து, மற்றவர்களின் இடத்தில் நம்மை வைத்து, தவறான எண்ணங்களைத் தவிர்த்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.
உரோமன் கூரியாவில் பணிபுரிவது என்பது, திருத்தந்தை ஆட்சிப்பீடத்தின் நினைவை உயிருடன் வைத்திருப்பதற்கு பங்களிப்பது என்றும், இதன் வழியாக திருத்தந்தையின் பணி சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லப்படும், வத்திக்கான் நகரப் பணிகள் மேம்படும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
திருஅவை, கூரியா மற்றும் திருத்தந்தையின் பணியுடன் தொடர்புடைய எல்லா பணிகளுடன் இணைக்கப்பட்ட ஒரு மறைப்பணி பரிமாணம் வத்திக்கான் நகரப் பணியாளர்களின் பணி என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், கூரியா என்பது ஒரு தலத்திருஅவையின் வரலாற்று நினைவை, அதன் ஆயர்களின் பணியைப் பாதுகாத்து அனுப்பும் நிறுவனம் என்றும் கூறினார்.
நினைவாற்றல் என்பது ஒரு மிக முக்கியமான ஒன்று என்றும், கடந்த காலத்திற்கு நம்மை இட்டுச்செல்வதோடு மட்டுமல்லாமல், நிகழ்காலத்தை வளர்க்கிறது, எதிர்காலத்தை நோக்கிய இலக்கில் நம்மை நிலைநிறுத்துகிறது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நினைவாற்றல் இல்லாவிடில் நமது பாதை வழிதவறுகின்றது, போகும் திசையை நோக்கிய உணர்வை இழக்கச் செய்கிறது என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்