MAP

கீழை வழிபாட்டுமுறைத் திருஅவையினருக்கான யூபிலி

மே 14, புதன்கிழமை காலை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கீழை வழிபாட்டுமுறை திருஅவையினரைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை 14ஆம் லியோ.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கீழை வழிபாட்டுமுறை திருஅவையினருக்கான யூபிலியானது வத்திக்கானில் மே 12 திங்கள்கிழமை சிறப்பிக்க ஆரம்பிக்கப்பட்டு மே 14 புதன்கிழமையுடன் நிறைவிற்கு வர இருக்கின்றது.

மே 12, திங்கள்கிழமை காலை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் இருக்கக்கூடிய பாடகர் சிற்றாலயத்தில் (Choir Chapel) எத்தியோப்பிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Berhaneyesus Demerew Souraphiel அவர்களால் எத்தியோப்பிய வழிபாட்டு முறை சிறப்பு காலைப்புகழ் வழிபாடு நடைபெற்றது. 

மே 12, திங்கள்கிழமை மாலையில் உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலில் உள்ள பவுலின் சிற்றாலயத்தில் அர்மேனிய வழிபாட்டு முறை சிறப்புத் திருப்பலியானது நடைபெற்றது. அர்மேனியத் திருஅவையின் முதுபெரும்தந்தை சிலிசியாவின் Raphaël Bedros XXI Minassian அவர்களால் வழிநடத்தப்பட்ட இத்திருப்பலியின் நிறைவில் கீழை வழிபாட்டுமுறைத் திருஅவைகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Claudio Gugerotti அவர்கள் தனது நன்றியினையும் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்ந்தார்.

மே 13, செவ்வாய்க்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் கல்தேய முறைப்படி நடந்த செப வழிபாட்டிற்கு கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்க சபையின் முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ (Louis Raphaël Sako) அவர்கள் தலைமையேற்றார்.

அதன் தொடர்ச்சியாக மே 14, புதன்கிழமை காலை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கீழை வழிபாட்டுமுறைத் திருஅவையினரைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை 14ஆம் லியோ.

மே 14 புதனன்று காலை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான மக்கள் திருத்தந்தையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். திருப்பயணிகளைக் கையசைத்து வாழ்த்தியபடி அரங்கத்தின் மேடைப்பகுதியை வந்தடைந்தார் திருத்தந்தை 14ஆம் லியோ. மக்கள் நீண்ட நேரம் கரவொலி எழுப்பி திருத்தந்தையை வரவேற்றனர். சிலுவை அடையாளம் வரைந்து திருத்தந்தை அவர்கள் தனது உரையினை ஆரம்பித்தார்.

திருத்தந்தையின் உரைக் கருத்துக்கள்

“இயேசு உயிர்த்தெழுந்தார். அவர் உண்மையிலேயே உயிர்த்தெழுந்தார்!” பல நாடுகளில் உள்ள கீழை வழிபாட்டு கிறிஸ்தவர்கள் உயிர்ப்பின் காலத்தில் மீண்டும் மீண்டும் சொல்ல சோர்வடையாத இந்த வார்த்தைகளுடன் நான் உங்களை வாழ்த்துகிறேன், ஏனென்றால் அவை நமது நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் மையமாக இருக்கின்றன. உயிர்த்த இயேசு கிறிஸ்துவில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட உங்களை இந்த எதிர்நோக்கின் யூபிலி ஆண்டில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. உங்கள் அனைவரையும் உரோமிற்கு அன்புடன் வரவேற்கின்றேன். எனது தலைமைத்துவப் பணியின் முதல் கூட்டங்களில் ஒன்றினை கீழை வழிபாட்டுமுறை திருஅவையினரான உங்களுக்காக அர்ப்பணிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

நீங்கள் கடவுளுடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்கள். கீழை வழிபாட்டுமுறைத் திருஅவை தோற்றத்தின் பன்முகத்தன்மை, புகழ்பெற்ற வரலாறு, சமூகங்களில் பலர் அனுபவித்த அல்லது தொடர்ந்து அனுபவித்து வரும் கசப்பான துன்பங்கள் ஆகியவற்றை நான் நினைத்துப் பார்க்கிறேன். "தொடக்ககாலத் திருஅவை தந்தையர்கள், திருச்சங்கங்கள், துறவறம் என திருஅவைக்கான விலைமதிப்பற்ற புதையல்களைப் பெற்றிருக்கும் கீழை வழிபாட்டுமுறை திருஅவையைப் பற்றி சிந்திப்போம், அவை பாதுகாக்கும் தனித்துவமான ஆன்மிக மற்றும் ஞான மரபுகளுக்காகவும், கிறிஸ்தவ வாழ்க்கை, கூட்டொருங்கியக்கம் மற்றும் வழிபாட்டுமுறை பற்றி நமக்குச் சொல்ல வேண்டிய அனைத்திற்காகவும் அவை பாதுகாக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும்” என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நம்பிக்கையை நான் மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.  

"மனித மீட்பின் பணி கிழக்கில் தொடங்கியது" என்று கூறி திருஅவையின் மாண்பிற்காக ஒரு குறிப்பிட்ட ஆவணத்தை அர்ப்பணித்த திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்களையும் நினைவுகூர விரும்புகின்றேன். ஆம்! கீழை வழிபாட்டு திருஅவையின் மரபில் உங்களுக்கு ஓர் குறிப்பிட்ட சிறப்பான தனித்தன்மை உள்ளது. உரோம் நகரில் நீங்கள் பல்வேறு மொழிகளில் சிறப்பிக்கும் வழிபாட்டுமுறைகளில் கடவுளாம் இயேசுவின் மொழியினைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தை 13ஆம் லியோ "கிழக்கத்திய வழிபாட்டு முறையானது, ஒழுக்கத்தின் சட்டபூர்வமான வகை, அது திருஅவையின் மகத்தான மரியாதை மற்றும் நன்மைக்குத் திரும்பக்கூடும்" என்ற இதயப்பூர்வமான கருத்தை எடுத்துரைத்தார். அவரது விருப்பம் எப்போதும் நிலைத்திருக்கும். இன்றைய நமது காலகட்டத்தில் உங்களில் சிலர் உட்பட பல சகோதர சகோதரிகள், போர்கள், துன்புறுத்தல்கள், உறுதியற்ற தன்மை மற்றும் வறுமை காரணமாக தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், தங்கள் தாய்நாட்டை விட்டு வேறு இடத்திற்குச் செல்லும் அவர்கள் தங்கள் தாய்நாட்டை மட்டுமல்லாது, மேற்கத்திய நாடுகளை அடைந்தவுடன், தங்கள் மத அடையாளத்தையும் இழக்க நேரிடும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக, தலைமுறைகள் செல்லச் செல்ல, கிழக்கத்திய திருஅவைகளின் விலைமதிப்பற்ற பாரம்பரியம் இழக்கப்படும் சூழல் உருவாகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், திருத்தந்தை 13ஆம் லியோ, "கிழக்கத்திய வழிபாட்டு முறைகளைப் பாதுகாப்பது என்பது ஒருவர் நினைப்பதையும் விட முக்கியமானது" என்று வலியுறுத்தினார். "இலத்தீன் வழிபாட்டின் எந்தவொரு மறைப்பணியாளரும், துறவியாகவோ அல்லது அருள்பணியாளராகவோ இருந்தாலும், அவரது ஆலோசனை அல்லது உதவியின் வழியாக ஒரு கிழக்கு வழிபாட்டு கத்தோலிக்கரை இலத்தீன் வழிபாட்டிற்கு ஈர்க்கிறார் எனில் அவர் தனது பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று ஆணையிடும் அளவுக்கு கிழக்கத்திய திருஅவையின் மீது அன்பு கொண்டிருந்தார். கிழக்கத்தியக் கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும், குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களில் இந்த அழைப்பை நாம் மகிழ்ச்சியுடன் மீண்டும் வலியுறுத்துவோம். சாத்தியமான மற்றும் பொருத்தமான இடங்களில் கிழக்கத்திய திருஅவையின் பகுதிகளை நிறுவுவதோடு மட்டுமல்லாமல், இலத்தீன் கிறிஸ்தவர்களிடையே அதிக விழிப்புணர்வை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது சம்பந்தமாக, கீழை வழிபாட்டு திருஅவைகளுக்கான திருப்பீடத் துறையினரின் பணிக்கு நான் நன்றி கூறுகிறேன். கீழைத்திருஅவையைச் சார்ந்த கத்தோலிக்கர்கள் தங்கள் வாழ்க்கை மரபுகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் தங்களது உறுதியான ஆதரவை வழங்கக்கூடிய கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வரையறுக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால், அவர்களின் தனித்துவமான சான்றுவாழ்வுடன், அவர்கள் வாழும் சமூகங்களை வளப்படுத்த நம்மால் முடியும்.

திருஅவைக்கு நீங்கள் தேவை. கீழை வழிபாட்டு திருஅவையினர் திருஅவைக்கு வழங்கக்கூடிய பங்களிப்பு மகத்தானது! மனிதனை முழுமையாக உள்ளடக்கிய வழிபாட்டு முறைகள், மீட்பின் அழகைப் பாடுகின்ற மற்றும் கடவுளின் மாட்சிமை நமது மனித பலவீனத்தை எவ்வாறு தழுவுகிறது என்பதைப் பற்றிய வியப்பு உணர்வைத் தூண்டுகின்ற வழிபாட்டு முறைகள் நமக்குத் தேவை. வழிபாட்டு முறைகளில் உயிருடன் இருக்கும் மறைபொருள் உணர்வை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. குறிப்பாக கிறிஸ்தவ மேற்கத்திய நாடுகளில் கடவுளின் முதன்மையான உணர்வு, மறைபொருளியலின் முக்கியத்துவம், கிழக்கத்திய ஆன்மிகத்தின் பொதுவான மதிப்புகள், நிலையான பரிந்துரை, தவம், நோன்பு இருத்தல், ஒருவரின் தனிப்பட்ட மற்றும் முழு மனிதகுலத்தின் பாவங்களுக்காக மனம் வருந்துதல் ஆகியவற்றை மீண்டும் கண்டறிந்து வாழ்வது மிக முக்கியமானது!

கீழைவழிபாட்டு தலத்திருஅவை ஆன்மிக மரபுகள், பழமையானவை, ஆனால் எப்போதும் புதியவை, குணமளிக்கும் ஆற்றல் கொண்டவை. கீழை வழிபாட்டுமுறை தந்தையான புனித ஐசக் கூறுவது போல, "உயிர்த்தெழுதலின் ஆற்றலை நம்பாமல் இருப்பது மிகப்பெரிய பாவம்" என்பதை நினைவில் கொண்டு செயல்படுவோம்.

வன்முறையின் படுகுழியில் கூட நம்பிக்கையின் பாடலை உங்களை விட சிறப்பாக யாரால் பாட முடியும்? திருத்தந்தை பிரான்சிஸ் உங்களை "மறைசாட்சிகளின் ஆலயங்கள்" என்று குறிப்பிடும் அளவுக்கு போரின் கொடூரங்களை மிக நெருக்கமாக அனுபவித்த உங்களை விட சிறப்பாக வேறு யார் இருக்க முடியும்? புனித பூமியிலிருந்து உக்ரைன் வரை, லெபனான் முதல் சிரியா வரை, மத்திய கிழக்கிலிருந்து தீக்ரே மற்றும் கௌகாஸ் வரை, எவ்வளவு வன்முறையை நாம் காண்கிறோம்! இந்த பயங்கரத்தினால், பல உயிர்கள் கொல்லப்படுகின்றன. இளையோர் பலர் தங்களது உயிரைத் தியாகம் செய்கின்றனர்.  எனவே வன்முறைக்கு எதிரான ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். அது திருத்தந்தையின் வேண்டுகோளோ விண்ணப்பமோ அல்ல மாறாக கிறிஸ்துவின் வேண்டுகோள். "உங்களுக்கு அமைதி உண்டாகுக!", “நான் உங்களுக்கு அமைதியை விட்டுச் செல்கிறேன்; என்னுடைய அமைதியையே நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுப்பதுபோல நான் அதை உங்களுக்குக் கொடுக்கவில்லை” (யோவான் 14:27). என்ற இயேசு கிறிஸ்துவின் அமைதியைக் கொண்டவர்களாக வாழ்வோம். அமைதி என்பது மோதலுக்குப் பிறகு கல்லறைகளில் நிலவுகின்ற அமைதி அல்ல; ஒடுக்குமுறையின் பலனால் விளைவதும் அல்ல, மாறாக அனைவருக்கும் பொருத்தமான ஒரு கொடை நம் வாழ்வை மீண்டும் இயங்க வைக்கின்ற புதிய வாழ்க்கையைத் தரும் ஒரு பரிசு. நல்லிணக்கம், மன்னிப்பு மற்றும் துணிவு ஆகியவை நமது வாழ்வின் பக்கங்களில் இடம்பெற இந்த அமைதிக்காக நாம் ஜெபிப்போம்.

அமைதி நிலவ நான் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன். எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் மீண்டும் நம்பிக்கையைக் கண்டறிந்து, தகுதியான மாண்பினை, அமைதியின் கண்ணியத்தை மீட்டெடுக்க, எதிரிகளை நேருக்கு நேர் ஒன்றிணைக்க, ஒருவருக்கொருவர் உரையாடுவதற்கு திருப்பீடம் எப்போதும் தயாராக உள்ளது. நமது உலக மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். எனவே உலக தலைவர்களிடம் நான் முழு மனதுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்: நாம் சந்திப்போம், உரையாடுவோம், பேச்சுவார்த்தை நடத்துவோம்! போர் ஒருபோதும் தவிர்க்க முடியாதது அல்ல. ஆயுதங்களை அமைதிப்படுத்த நம்மால் முடியும். ஏனென்றால் போர்கள் பிரச்சினைகளைத் தீர்க்காது, மாறாக அவற்றை அதிகரிக்கவே செய்கின்றன. அமைதியை உருவாக்குபவர்கள், வரலாற்றை உருவாக்குபவர்கள். அவர்கள் துன்பத்தின் விதைகளை விதைப்பவர்கள் அல்ல. நமது அண்டை வீட்டில் வாழும் சகோதர சகோதரிகள் நமது எதிரிகள் அல்ல, மாறாக சக மனிதர்கள்; வெறுக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் அல்ல.

ஆயுதங்கள் அமைதியாகட்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்வதில் திருஅவை ஒருபோதும் சோர்வடையாது. அமைதி, செபம், மற்றும் தற்கையளிப்பு வழியாக அமைதியின் விதைகளை விதைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

நீதியின் சூரியனாகிய இயேசு உதித்த கிழக்கத்திய சகோதரர் சகோதரிகளே, "நமது உலகில் ஒளியாக" இருப்பதற்கு உங்களுக்கு நன்றி. அன்பு, நம்பிக்கை மற்றும் தொண்டுப்பணிகளில் தொடர்ந்து சிறந்து விளங்குங்கள். உங்கள் தலத்திருஅவைகள் பிறருக்கு முன்மாதிரிகையாக இருக்கட்டும். இறைமக்களுக்கு தாழ்ச்சியான முழுமையான அர்ப்பணிப்பின் அடையாளங்களாக இருங்கள்.

நான் உங்களது பணிக்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன், மேலும் உங்களுக்கு என் ஆசீரை மனதார வழங்குவதன் வாயிலாக திருஅவைக்காக, எனது பணிக்காக செபிக்கும்படி உங்களது ஆற்றலுள்ள செபத்தினை வேண்டுகின்றேன். அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது உரையினை நிறைவு செய்ததும் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தனது ஆசீரினை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மே 2025, 13:47