பன்முகத்தன்மையை அன்பு செய்யக் கற்றுக்கொடுத்தவர் திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
மனிதனின் பன்முகத்தன்மையையும், செழுமையையும் அன்பு செய்யக் கற்றுக் கொடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று அவருக்காகவும் அவரது மன்றாட்டுக்களுக்காகவும் செபிக்க நாம் ஒன்றாகக் கூடி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைவார் என்று தான் நம்புவதாக எடுத்துரைத்தார் கர்தினால் Claudio Gugerotti.
இறைபதம் அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான ஒன்பது நாள் செபக்காலத்தின் ஏழாம் நாள் திருப்பலியை மே 3, சனிக்கிழமை மாலை புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றியபோது இவ்வாறு கூறினார் கீழை வழிபாட்டுத் திருஅவைகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Claudio Gugerotti.
வன்முறையான வாழ்க்கையால் ஏற்படும் கூக்குரலை ஏற்றுக்கொள்ளவும், இறைத்தந்தையிடம் அதனை அர்ப்பணிக்கவும், நம்மை பலவீனப்படுத்தி அழிக்கின்ற, எல்லையற்ற வழிகளில் ஏற்படுத்துகின்ற துன்பத்தைத் திட்டவட்டமாகக் குறைக்கவும் திருத்தந்தை பிரான்சிஸ் நமக்குக் கற்றுக் கொடுத்தார் என்று நினைவுகூர்ந்தார் கர்தினால் Claudio Gugerotti.
படைப்பு மனித குல பயணத்திற்கு ஒரு துணையாகவும், ஒன்றிப்பாகவும் இருக்கின்றது என்றும், மனிதகுலமும் படைப்பும் மாண்போடு நடத்தப்படுவதாக, குணப்படுத்தப்பட்டதாக இருக்க விரும்புகின்றது என்றும் கூறினார் கர்தினால் Gugerotti.
போற்றிப் புகழப்பட வேண்டிய படைப்பின் அழுகுரல் மற்றும் மனித குலத்தின் கூக்குரலை நாம் நம்மைச் சுற்றிலும் கேட்கின்றோம் என்றும், பூமியின் அழுகுரலானது, வெறுப்பால் மூழ்கடிக்கப்பட்ட மனித குலத்தை சுட்டிக்காட்டுகின்றது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Gugerotti
அதிஅ அளவில் பங்கேற்ற கீழை வழிபாட்டு முறை கத்தோலிக்க திருஅவையினரால் சிறப்பிக்கப்பட்ட இத்திருப்பலியில் “செழுமையான நம்பிக்கை மற்றும் அனுபவத்தால் நாம் சான்று பகர வேண்டும், என்று வலியுறுத்திய கர்தினால் Gugerotti அவர்கள், புனித பூமியில் வாழும் பலர் தங்களது சொந்த நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழலில் இருக்கின்றார்கள் எனவே அவர்களுக்காக செபிப்போம் என்றும் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்பியது போல, புலம்பெயர்ந்தோரை நாம் வரவேற்று, உதவிகள் செய்து நமது நிலத்தில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், இதுவே கத்தோலிக்க திருவையின் உள்ளார்ந்த பகுதிகளில் ஒன்று என்றும் சுட்டிக்காட்டினார் கர்தினால் Gugerotti
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்