வெண்புகை முதல் “நாம் ஒரு திருத்தந்தையைப் பெற்றுள்ளோம்” என்பது வரை
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஏற்றுக்கொள்ளும் சடங்கு
திருத்தந்தையாக இருக்க உங்களுக்கு சம்மதமா?
கான்கிளேவ் அவையின் விதிமுறைகள் மற்றும் Universi Dominici Gregis என்ற அப்போஸ்தலிக்க சட்ட அமைப்பின் விதிமுறைகளின்படி மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்றவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடிய 133 கர்தினால்களில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளுக்குக் கூடுதலாக ஒரு வாக்குகளைப் பெற்றவர், புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுகின்றார். கர்தினால்கள் அனைவரும் புதிய திருத்தந்தைக்குக் கரவொலி எழுப்பி தங்களது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். கர்தினால் ஆயர்களில் வயதில் மூத்தவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் முன் சென்று, “கர்தினால்கள் அவை, திருத்தந்தையாக உங்களைத் தேர்ந்தெடுத்ததை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா”? என்று கேட்க, அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கின்றார். சம்மதம் தெரிவித்த உடன், “நீங்கள் என்ன பெயரில் அழைக்கப்பட இருக்கின்றீர்கள்” என்று கேட்க, அவர் தான் தேர்ந்தெடுத்து இருக்கும் பெயரைக் கூறி அப்பெயரில் தான் அழைக்கப்பட விரும்புவதாக எடுத்துரைப்பார்.
திருத்தந்தையர் புதிய பெயரைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம்
திருத்தந்தையர் தங்கள் சொந்த பெயரையே திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற பின்னரும் தொடரும் பழக்கமானது 6ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை இருந்து வந்தது. அதாவது, 533-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தையின் பெயர் பிறமதக் கடவுளின் பெயரான மெர்க்குரி என்று இருந்ததால், இவர்தான் முதன் முதலில் திருத்தந்தையராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் புதிய ஒரு பெயரையும் தேர்ந்தெடுக்கும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தார். இவர் எடுத்துக்கொண்ட பெயர் இரண்டாம் யோவான் என்பதாகும் அன்றிலிருந்து இன்று வரை, புதிய பெயரைத் திருத்தந்தையர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர். அவ்வகையில் திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாகத் தேர்த்தெடுக்கப்பட்ட திருத்தந்தை அவர்கள் தான் தேர்வு செய்த பெயரைக் கூறி தனது ஒப்புதலை அளிக்கின்றார். திருப்பீட வழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கான தலைவர், திருப்பீட நீதித்துறை உறுப்பினர் மற்றும் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் ஒப்புதல் பெறப்பட்டதற்கான ஆவணத்தை தயார் செய்கின்றார்.
பின்னர் வாக்குச்சீட்டுகள் அனைத்தும் நெருப்பிலிடப்பட்டு, சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைபோக்கியிலிருந்து வரும் வெண்ணிறப் புகை வாயிலாக திருஅவையை வழிநடத்தும், திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலாக 267-ஆவது திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டதை உலக மக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.
கான்கிளேவ் அவை நிறைவிற்கு வருகின்றது
புதிய திருத்தந்தை தான் தேர்வு செய்யப்பட்டதற்கு தனது ஒப்புதலை அளித்தவுடன் கான்கிளேவ் அவையானது நிறைவிற்கு வருகின்றது.
"கண்ணீர் அறை"
ஏற்றுக்கொள்ளும் சடங்கு முடிந்ததும், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குச்சீட்டுகள் எரிக்கப்பட்டு வெண்புகை வழியாக புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதிப்படுத்தப்படுகின்றது. அதன் பின் புதிய திருத்தந்தை சிஸ்டைன் சிற்றாலயத்திற்கு அருகில் இருக்கும் அவுலா தெல் பியாந்தோ அதாவது "கண்ணீர் அறை" என்று அழைக்கப்படும் அறைக்குள் நுழைகின்றார். திருஅவையை வழிநடத்தும் புதிய பணிக்காகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றிய விழிப்புணர்வைப் பெறும் அறையாகவும், திருத்தந்தைக்குரிய ஆடைகளைப் பெறும் அறையாகவும் இக்கண்ணீர் அறை கருதப்படுகின்றது. திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கான தலைவர் பேராயர் ரவெல்லி அவர்களால் வழிநடத்தப்படும் புதிய திருத்தந்தை இவ்வறைக்குள் நுழைந்து திருத்தந்தைக்குரிய ஆடைகளில் வெளியே வருகின்றார். எவ்வாறு இந்த யூபிலி ஆண்டில் புனிதக் கதவின் வழியாக நாம் நுழைந்து இறைவனின் அருளையும் நிறைபலனையும் பெற்று கடவுளின் பிள்ளைகளாக மாறுகின்றோமோ அதுபோல கர்தினாலாக அறைக்குள் நுழைந்து திருத்தந்தையாக மாற்றம் பெற்று வெளிவருகின்றார். இந்த மாற்றத்தின் அறையாக கண்ணீர் அறை இருக்கின்றது.
அங்கே, திருவழிபாட்டு கொண்டாட்டங்களுக்கான தலைவரின் உதவியுடன், முன்னதாக மூன்று அளவுகளில் தயாரிக்கப்பட்டு தயாராக இருக்கும் மூன்று திருத்தந்தையர் ஆடைகளில் தனக்கு பொருத்தமானதை புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கின்றார்.
நன்றிப்பாடல்
சிஸ்டைன் சிற்றாலயத்திற்குத் திரும்பியதும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை ஆலயத்தின் நடுவில் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்திருப்பார். அனைத்து கர்தினால் ஆயர்கள், கர்தினால் அருள்பணியாளர்கள், கர்தினால் திருத்தொண்டர்கள் என அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக வந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருத்தந்தையின் முன் வருவர். திருத்தந்தையின் கரங்களை முத்தி செய்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவிப்பர். ஒரு சுருக்கமான நிகழ்வுக்குப் பின் கர்தினால் அருள்பணியாளர்களில் முதன்மையானவர் நற்செய்தியிலிருந்து ஒரு பகுதியைப் படிக்கிறார், அது “நீ பேதுரு, இந்தப் பாறையில் நான் என் திருச்சபையை கட்டுவேன்” அல்லது “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்ற நற்செய்திப்பகுதியை வாசிப்பார். இறுதியாக கர்தினால் திருத்தொண்டர்களில் முதன்மையானவர் பேதுருவின் வழித்தோன்றலாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தைக்காக ஒரு சிறப்பு செபத்தினை ஏறெடுக்கின்றார். பின்னர் அனைவரும் ஒன்றாக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தைக்காக “Te Deum” என்ற நன்றிப் பாடலைப் பாடுகிறார்கள்.
பவுலின் சிற்றாலயத்தில் புதிய திருத்தந்தையின் செபம்
புதிய திருத்தந்தை சிஸ்டைன் சிற்றாலயத்திலிருந்து வெளிவந்து பவுலின் சிற்றாலயத்தில் திருநற்கருணை முன்பாக சிறிது நேரம் செபிக்கின்றார்.
மேல்மாடத்தில் மக்கள் முன்
பின்னர் கர்தினால் தோமினிக் மம்பர்த்தி அவர்கள், வத்திக்கான் வளாகத்தின் மேல் மாடத்தில் தோன்றி , Annuntio vobis gaudium magnum: habemus Papam!, “நான் உங்களுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியை அறிவிக்கிறேன்: நாம் ஒரு புதிய திருத்தந்தையைப் பெற்றுவிட்டோம்” என்று கூறுகின்றார். மக்கள் ஆரவாரத்துடன் புதிய திருத்தந்தையை கரங்கள் தட்டி வரவேற்கின்றனர். திருஅவையை வழிநடத்தும் 267ஆவது திருத்தந்தை முதன்முறையாக மக்கள் முன் தோன்றி தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றார். நாம் ஒரு திருத்தந்தையைப் பெற்றுள்ளோம் என்று கூறி கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரவோஸ்ட் திருத்தந்தை 14-ஆம் லியோ என்ற பெயரில் திருத்தந்தையாக அழைக்கப்பட இருக்கின்றார் என்று கூறி, புதிய திருத்தந்தையின் பெயரை மக்களுக்கு அறிவிக்கிறார். அதன்பின்னர் புதிய திருத்தந்தை மக்களுக்கு முன் தோன்றி தனது முதல் உரையினையும், ஊருக்கும் உலகிற்குமான ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீரையும் வழங்குகின்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்