திருத்தந்தை தேர்விற்கான முதல் வாக்குப்பதிவு ஆரம்பமாகியது
மெரினா ராஜ் – வத்திக்கான்
மே 7. புதன்கிழமை உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 3. 45 மணியளவில் சிஸ்டைன் சிற்றாலயத்திற்கு அருகில் இருந்த பவுலின் சிற்றாலயத்தில் கர்தினால்கள் அனைவரும் கூடியிருந்தனர். கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் சிறு செபத்துடன் இச்செப வழிபாட்டினை இலத்தீன் மொழியில் ஆரம்பித்து வைக்க, புனிதர்கள் மன்றாட்டு மாலையானது பாடப்பட்டது.
திருச்சிலுவை, மெழுகுதிரிகள் ஏந்திய பீடப்பணியாளர்கள் மற்றும் திருவழிபாட்டு உதவியாளர்களைத் தொடர்ந்து வயது வாரியாக கர்தினால்கள் பவனியாக சிஸ்டைன் சிற்றாலயம் சென்றனர். இறுதியாக இத்திருவழிபாட்டு நிகழ்விற்குத் தலைமை தாங்கும் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் பவனியினை நிறைவு செய்தார். சிஸ்டைன் சிற்றாலயத்தில் நடைபெற்ற செபவழிபாட்டில் தூய ஆவியாரின் துணையை நாடும் விதமாக தூய ஆவியாரின் பாடல் பாடப்பட்டது.
அதன்பின் புதிய திருத்தந்தையின் தேர்வில் கலந்துகொள்ளும் கர்தினால்கள் அனைவரும் சிற்றாலயத்தின் நடுவில் வைக்கப்பட்டிருந்த நற்செய்தியின் மேல் தங்களது வலது கரங்களை வைத்து உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.
“அடுத்தத் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டால் திருஅவையின் இவ்வுலகத் தலைவருக்குரிய கடமைகளை விசுவாசமுடன் நிறைவேற்றுவேன், தேர்தல் தொடர்புடைய விவரங்களையும் அங்கு நடந்தவைகளையும் மிகவும் இரகசியமாக வைத்திருப்பேன், தேர்தலில் வெளிப்புற தலையீட்டை அனுமதிக்க மாட்டேன் என ஒவ்வொரு கர்தினாலும் உறுதிமொழி எடுத்தனர்.
திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கான தலைவர் பேராயர் ஜொவான்னி தியேகோ ரவெல்லி அவர்கள், “EXTRA OMNES” என்று கூறியதும் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்களிக்கும் உரிமை இல்லாத கர்தினால்கள், திருவழிபாட்டு உதவியாளர்கள் பாடகர்கள் பணியாளர்கள் அனைவரும் சிஸ்டைன் சிற்றாலயத்திலிருந்து வெளியேறினர். திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்க்கான தலைவர் சிஸ்டைன் சிற்றாலயத்தின் கதவுகளை மூடினார்.
அதன்பின், புதிய திருத்தந்தையைத் தேர்வு செய்ய வாக்களிக்க இருப்பவர்களுக்கு திருஅவையின் நலன் குறித்தவைகளில் பொறுப்புணர்வு பற்றிய ஆன்மிகச் சிந்தனையினை 90 வயது கர்தினால் Raniero Cantalamessa அவர்கள் வழங்கினார். இவரே திருத்தந்தை மற்றும் திருஅவை அதிகாரிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் தியானச் சிந்தனைகளை வழங்கி வருபவர்.
தேர்தலில் வாக்கெடுப்பில் பங்குபெறுபவர்களுக்கான தியானச் சிந்தனைகளுக்குப்பின் கர்தினால் Raniero Cantalamessa அவர்கள், திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கான திருப்பீட துறைத் தலைவர், வாக்கெடுப்பில் பங்கேற்காத உறுப்பினர்கள் அனைவரும் சிஸ்டைன் சிற்றாலயத்தினை விட்டு வெளியேறினர். கர்தினால் திருத்தொண்டர்களில் இளையவரான இந்தியாவைச் சார்ந்த கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு அவர்கள் சிஸ்டைன் சிற்றாலயத்தின் கதவுகளை இறுதியாக மூடினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்