MAP

கரும்புகை கரும்புகை  (ANSA)

புதிய திருத்தந்தை தேர்விற்கான முதல் வாக்குப்பதிவு நிறைவுற்றது

புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் கரும்புகையானது வெளியிடப்பட்டது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மே 7, புதன்கிழமை கூடிய கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் கரும்புகையானது வெளியிடப்பட்டது.

வத்திக்கான் வளாகத்தில் ஏறக்குறைய 45,000 மக்கள் புதிய திருத்தந்தை தேற்விற்கான முடிவுகளை அறிய ஆவலுடன் காத்திருக்கும் வேளையில் இரவு 9 மணியளவில் வெளியிடப்பட்ட கரும்புகையானது திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை எடுத்துரைத்தது.

வத்திக்கான் வளாகத்தில் மாலை முதலே மக்கள் கூட்டம் கடலலையெனப் பெருகி புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டாரா என்பதை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்தது. உலகளாவிய கத்தோலிக்க திருஅவையின் தலைவர் யார் என்பதை இந்த உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியை மிக ஆர்வத்துடன் பத்திரிக்கையாளர்கள் மற்றும் செய்தியாளர்களும் செய்துவந்தனர்.

சிஸ்டைன் சிற்றாலய புகைப்போக்கி அருகே கடல்புறாக்களானது மாறி மாறி நின்று கொண்டு தாங்களும் அகில உலக திருஅவையின் தலைவர் யார் என்று அறியும் ஆர்வத்துடன் காத்திருப்பது போல தென்பட்டது. ஏறக்குறைய 45000 மக்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்து ஆவலுடன் புகை போக்கியைப் பார்த்த வண்ணம் காத்திருந்த காட்சி மிக அருமையான காட்சியாக அழகாக இருந்தது. 

ஏறக்குறைய 3 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் வத்திக்கான் வளாகத்தில் காத்திருந்தனர். உரோம் உள்ளூர் நேரம் இரவு 9.00 மணிக்கு புகை வெளிவர ஆரம்பித்ததும் அது வெண்புகையாக இருக்கும் என்ற ஆர்வத்தில் மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கரங்களைத் தட்டி தங்களது மகிழ்வினை வெளிப்படுத்தினர். ஆனால் கரும்புகை வெளிவந்து மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றம் அளித்தது. கூடியிருந்த மக்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்துடனும், நாளை நமக்கு புதிய திருத்தந்தை நிச்சயம் கிடைப்பார் என்ற நம்பிக்கையுடனும் வத்திக்கான் வளாகத்தை விட்டு வெளியேறினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 மே 2025, 21:14