திருத்தந்தை 14-ஆம் லியோ பணியேற்புத் திருப்பலி நிகழ்வுகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாக கர்தினால்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்டு 14-ஆம் லியோ என்ற பெயரை ஏற்றிருக்கும் புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் பணியேற்பு விழாவானது மே 18, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஆரம்பமானது.
மே 18, ஞாயிறு உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாக இருக்கும் இத்திருப்பலியில் பங்கேற்பதற்காக உலகின் பல பகுதிகளிலிருந்து இலட்சக் கணக்கான மக்கள் அதிகாலை முதலே வத்திக்கான் வளாகத்தில் கூட ஆரம்பித்தனர். ஏறக்குறைய காலை 9 மணியளவில் திருத்தந்தையர் வாகனத்தில் மக்கள் நடுவே வலம் வந்து திருப்பயணிகளை வாழ்த்தி மகிழ்ந்தார் திருத்தந்தை 14ஆம் லியோ. மக்கள் கூடியிருந்த எல்லா பகுதிகளின் எல்லை வரை வாகனத்தில் வந்து திருப்பயணிகளை வாழ்த்தினார். இன்றைய நிகழ்வின் முக்கியமான நபராக விழா நாயகராக இருக்கும் புதிய திருத்தந்தையைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்து தங்களது மகிழ்வினை வெளிப்படுத்தினர். மக்கள் சந்திப்பு நிறைவுற்றதும் திருவழிபாட்டுச் சடங்குகளை ஆரம்பிப்பதற்காக வத்திக்கான் பெருக்கோவிலுக்குள் சென்றார் திருத்தந்தை. திருப்பலிக்கு முன்னதாக இறைமக்களால் செபமாலையானது செபிக்கப்பட்டது. திருத்தந்தையின் பணியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஏறக்குறைய 150 நாடுகளின் பிரதிநிதிகள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்