உலக மக்களுக்கு அமைதி தேவை – திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு அமைதி தேவை என்றும், ஆயுதங்களுக்குச் செலவிடுவதில் அதிக கவனம் செலுத்துவதால் தேவைப்படும் நிலையிலிருக்கின்ற மற்றும் மிகவும் பலவீனமானவர்களுக்கான ஆதரவை இழக்கும் அபாயம் உள்ளது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 23, வெள்ளிக்கிழமை COMECE எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் எடுத்துரைத்த கருத்துக்களை வத்திக்கான் செய்திகளிடத்தில் பகிர்ந்துள்ளனர் அக்கூட்டமைப்பின் ஆயர் பிரதிநிதிகள்.
இக்கூட்டத்தின்போது உலக அமைதி அதிகமாக திருத்தந்தை அவர்களால் வலியுறுத்தப்பட்டது என்றும், உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு, விரைவில் ஒரு நிலையான, நியாயமான அமைதியை அடைவது அவசியம் என்று எடுத்துரைக்கப்பட்டதாகவும் ஆயர்கள் கூறினர்.
மேலும் இடம்பெயர்வு, இளைஞர்களோடு உடன்நடத்தல், நம்பிக்கை பரிமாற்றம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை குறித்தக் கருத்துக்கள் பகிரப்பட்டதாக எடுத்துரைத்த ஐரோப்பிய ஆயர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், கூட்டமைப்பின் ஆயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்துக்களுக்குத் திருத்தந்தை அவர்கள் கவனமாக செவிசாய்த்ததாகவும் தெரிவித்தனர்.
உக்ரைன் நாட்டில் ஏற்பட்டு வரும் போர் மற்றும் மோதலினால் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதார மற்றும் சமூக விளைவுகள் குறித்து திருத்தந்தை அவர்கள் அதிகமாக எடுத்துரைத்ததாகவும், தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக கொடுக்கப்படும் அதிக நிதி என்பது துன்பப்படுபவர்கள் அல்லது சிரமத்தில் வாழ்பவர்களுக்கான உதவி என்று கூறியதாகவும் சுட்டிக்காட்டினர் ஆயர்கள்.
போர் நிறுத்தத்திற்கான உறுதியான தீர்வுகளைக் காணவில்லை என்றாலும், அனைத்து ஐரோப்பிய நாடுகளும் போரை விரைவில் நிறுத்தும் இலக்கில் ஈடுபட்டுள்ளதாக உணர வேண்டும் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியதாக எடுத்துரைத்த ஆயர்கள், இடம்பெயரும் மக்களை வரவேற்றல், ஒருங்கிணைத்தல், சமநிலைப்படுத்துதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவித்தனர்.
இளைஞர்களோடு உடன்நடத்தல், குடும்பங்களில் நம்பிக்கையைப் பகிர்தல் போன்றவை வலியுறுத்தப்பட்டதாகவும், செயற்கை நுண்ணறிவு குறித்தக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியதாகவும் ஆயர்கள் திருத்தந்தையுடனான தங்களது சந்திப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்