இறைமக்களின் தந்தையாகத் திகழ்ந்த திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இறைமக்கள் அனைவரின் தந்தையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மக்கள் உணர்ந்ததால், அவரது இறப்பின் செய்தியை அறிந்து பல இலட்சக் கணக்கான மக்கள் தந்தையை இழந்த அனாதைகளாக தங்களைக் கருதினார்கள் என்றும் ஆசிரியர் பக்கத்தில் எடுத்துரைத்துள்ளார் முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி.
மே 7 புதனனன்று புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க தயாராக இருக்கும் இந்நேரம் நமது மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் திருத்தூதர் பேதுருவின் வழிவந்தவர்கள் அனைவரையும் நாம் நினைவுகூர வேண்டும் என்று தனது கருத்துக்களை ஆரம்பித்து இருக்கின்றார் திருப்பீட செய்திப்பிரிவு இயக்குனர் முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி.
1964- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு மேற்கொண்ட தனது திருத்தூதுப் பயணத்தை முடித்து திரும்பிய திருத்தந்தை ஆறாம் பவுல் தனது நண்பரும், தத்துவவியலாளருமான Jean Guitton அவர்களுடன் செய்த உரையாடலை நினைவுகூர்ந்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் முனைவர் தொர்னியெல்லி.
தெருக்களில் நின்று கொண்டிருந்த இலட்சக் கணக்கான மக்களை இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக ஆசீர்வதித்தும், அன்னை தெரசாவை சந்தித்து பரிசுகள் வழங்கியதையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், திருத்தந்தையின் அனைத்து மாண்புகளையும் விட மிக உயர்ந்தது, தந்தைத்துவம் என்று தான் நம்புவதாக எடுத்துரைத்ததாகவும் பகிர்ந்துகொண்டுள்ளார் முனைவர் தொர்னியெல்லி.
தந்தைத்துவம் என்பது ஆற்றல், இதயத்தை ஆக்கிரமிக்கும் ஓர் உணர்வு, அது நாளின் ஒவ்வொரு மணி நேரத்திலும் நம்முடன் வருகிறது, குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அந்த தந்தைத்துவமும் குறையாது வளர்கிறது என்றும், முழு மனிதகுலத்திற்கும் ஒரு தந்தையாகத் தன்னை உணர்வதாக திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள் கூறினார் என்றும் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார் முனைவர் தொர்னியெல்லி.
முழு மனிதகுலத்திற்கும் தந்தை என்ற உணர்வு, எப்போதும் புதியது, புத்துணர்ச்சி தருவது, வளர்வது, சுதந்திரமானது படைப்பாற்றல் மிக்கது என்று திருத்தந்தை புனித ஆறாம் பவுல் வலியுறுத்தினார் என்றும், இறைமக்களை ஆசீர்வதிப்பதற்கு தான் ஒருபோதும் சோர்வடைந்தது கிடையாது என்றும் கூறியதாக எடுத்துரைத்துள்ளார் தொர்னியெல்லி.
திருத்தூதர் பேதுருவின் வழிவருபவர் உடன்பிறந்தவராக, அனைவரிலும் தாழ்ந்தவராக தன்னைக் கருதி, அனைவரின் சுமையை சுமப்பவராக இருக்க வேண்டும் என்றும், எருசலேம் புனித பூமிக்கு திருத்தூதுப்பயணம் மேற்கொண்டு திரும்பும் போது மக்கள் வெள்ளத்தில் தனது வாகனம் மிதந்தது போன்று திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், உணர்ந்ததாகவும், இருப்பினும் அவரது முகம் அன்பும் புன்னகையும் நிறைந்ததாக இருந்தது என்றும் விளக்கியுள்ளார் தொர்னியெல்லி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்