MAP

கர்தினால் விக்டர் மானுவேல் பெர்னாண்டஸ் நிறைவேற்றிய திருப்பலி கர்தினால் விக்டர் மானுவேல் பெர்னாண்டஸ் நிறைவேற்றிய திருப்பலி  (@Vatican Media)

திருஅவைக்காக சோர்வின்றி உழைத்த திருத்தந்தை பிரான்சிஸ்

கர்தினால் பெர்னாண்டஸ் : ஒருவரின் தொழில் என்பது மனித குலத்தின் மாண்பை வெளிப்படுத்தி அதற்கு ஊக்கமூட்டுவது என்பதாகவே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நோக்கப்பட்டது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவைக்காக சோர்வின்றி உழைத்தவர் என, திருத்தந்தைக்கான ஒன்பது நாள் செபக்காலத்தின் ஆறாம் நாள் திருப்பலியை நிறைவேற்றி மறையுரை வழங்கிய கர்தினால் விக்டர் மானுவேல் பெர்னாண்டஸ் அவர்கள் கூறினார்.

மே மாதம் முதல் தேதி, தொழிலாளர் தினமன்று இந்த 6வது நாள் திருப்பலியை நிறைவேற்றிய கர்தினால் பெர்னாண்டஸ் அவர்கள், தொழிலின் மேன்மையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எப்போதும் வலியுறுத்தி வந்ததை எடுத்தியம்பினார்.

மே மாதம் முதல் தேதி வத்திக்கானுக்கும் விடுமுறை என்பதால், தேர்தலுக்கான கர்தினால்களின் தயாரிப்பு அவைக் கூட்டம் இந்நாளில் இடம்பெறாத நிலையில், பெருமளவான கர்தினால்கள் இந்த திருப்பலியில் கலந்துகொண்டனர்.

ஒருவரின் தொழில் என்பது மனித குலத்தின் மாண்பை வெளிப்படுத்தி அதற்கு ஊக்கமூட்டுவது என்பதாகவே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நோக்கப்பட்டது என்ற கர்தினால் பெர்னாண்டஸ் அவர்கள், நம் திறமைகளை வளர்க்கவும், நம் உறவுகளில் வளரவும், இவ்வுலகின் மீது அக்கறை காட்டி மேம்படுத்துவதற்கும் தொழில் உதவுகிறது என்பதை எடுத்துரைத்தார்.

வாழ்வில் வெற்றிபெறுபவர்கள் மட்டுமே மதிப்புக்குரியவர்கள் என்ற எண்ணப்போக்கை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து கண்டித்தார் என்பதையும் சுட்டிக்காட்டினார் கர்தினால்.

தன் பணியிலிருந்து ஒரு முழு நாளை ஓய்வுக்கென திருத்தந்தை எடுத்து தான் அறிந்ததில்லை என்ற கர்தினால் பெர்னாண்டஸ் அவர்கள், அர்ஜெண்டினாவில் பணியாற்றியபோதும் ஓய்வின்றியே உழைத்த திருத்தந்தையைப் பொறுத்தவரையில் கடவுளின் அன்புக்கு பதில்மொழி வழங்குவதே அவரின் தினசரி பணியாக நோக்கப்பட்டது என்றார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 மே 2025, 16:17