திருத்தந்தை தேர்விற்கான தயாரிப்பு திருப்பலி
மெரினா ராஜ் - வத்திக்கான்
எல்லாருடைய இதயங்களையும் அறியும் இறைவன் திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலாக திருஅவையை வழிநடத்த இருக்கும் 267 -ஆவது திருத்தந்தையை தேர்ந்தெடுக்க தனது தூய ஆவியின் ஆற்றலை விண்ணகத்திலிருந்து பொழிந்துகொண்டிருப்பது போல வத்திக்கான் நகரமானது காலை முதல் கருமேகங்களுடன் கூடிய வானத்துடன் காட்சியளித்து மழைத்தூரல்களால் நனைந்திருந்தது. இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்ட ஒருவராக, இறைவேண்டல் செய்பவராக, உண்மையின் ஊழியராக, கனிவும் துணிவும் இரக்கமும் உள்ளவராக, இறை அன்பில் ஆழமாக வேரூன்றியவராக இருக்கும் ஒருவரை புதியத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்க திருஅவையானது மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் மே 7 புதன்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான தயாரிப்புத் திருப்பலியானது நடைபெற்றது.
இத்தாலிய நேரம் காலை 10 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணிக்கு புதிய திருத்தந்தையைத் தேர்வு செய்யும் தேர்தலுக்கான தயாரிப்பு திருப்பலியில் பங்கேற்பதற்காக ஏறாக்குறைய 5000 மக்கள் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் கூடியிருந்தனர். கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வருகைப்பாடலுடன் திருப்பலியானது ஆரம்பமானதும் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் சிலுவை அடையாளம் வரைந்து திருப்பலியினை இலத்தீன் மொழியில் துவக்கினார். இறைவாக்கினர் எசாயாவின் நூலிலிருந்து விடுதலை பற்றிய நற்செய்தி என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் முதல் வாசகமாக ஆங்கில மொழியில் வாசிக்கப்பட்டது. திருப்பாடல் எண் 88 இத்தாலிய மொழியில் பதிலுரைப்பாடலாகப் பாடப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் வாசகமானது திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமடலில் உள்ள கிறிஸ்தவப் புதுவாழ்வு என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் இஸ்பானிய மொழியில் வாசிக்கப்பட்டன. “இயேசுவே உண்மையான திராட்சைச் செடி” என்ற யோவான் நற்செய்தியின் இறைவார்த்தைகள் இலத்தீன் மொழியில் அருள்பணியாளர் ஒருவரால் வாசித்தளிக்கப்பட்டது. அதன்பின் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள், தனது மறையுரையினை எடுத்துரைத்தார்.
கர்தினால் ரே அவர்களின் மறையுரைக் கருத்துக்கள்
அன்பான கர்தினால்களே இறைமக்களே,
இயேசு விண்ணேற்றம் அடைந்த பிறகு பெந்தக்கோஸ்து என்னும் நாளுக்காக இயேசுவின் தாய் மரியாவுடன் சீடர்கள் அனைவரும் விடாமுயற்சியுடன் செபத்தில் ஒருமனப்பட்டு ஒன்று கூடி இருந்தார்கள். இதனை நாம் திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கின்றோம்.
புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை தொடங்க சில மணி நேரங்களே இருக்கின்ற நிலையில் திருத்தூதர் பேதுருவின் கல்லறை இருக்கும் இப்பெருங்கோவிலில் பீடத்தின் அருகில் வைக்கப்பட்டிருக்கும் அன்னை மரியின் திருவுருவத்துடன் திருத்தூதர்கள் கொண்டிருந்த அதே மனநிலையில் நாமும் இப்போது ஒன்று கூடியிருக்கின்றோம்.
மறைந்த திருத்தந்தை மீது கொண்டிருக்கும் அன்பு, நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்பு, ஆகியவற்றுடன் அனைத்து இறைமக்களின் நம்பிக்கையையும் ஒன்றிணைத்து மக்களோடு நாம் ஒன்றித்திருக்கின்றோம்.
வரலாற்றின் கடினமான மற்றும் சிக்கலான இக்காலகட்டத்தில் திருஅவைக்கும் மனிதகுலத்திற்கும் தேவைப்படும் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக, தூயஆவியாரின் உதவியையும், அவருடைய ஒளியையும் ஆற்றலையும் வேண்டிக்கொள்ள நாம் இங்கே ஒன்றாகக் கூடி இருக்கிறோம். இவ்வேளையில், செபிப்பதும், தூய ஆவியாரின் துணையை வேண்டிக்கொள்வதும் மட்டுமே சரியான அணுகுமுறையும் நமது கடமையுமாகும். வாக்களிக்கும் உரிமை கொண்ட கர்தினால்கள், மனிதாபிமான மற்றும் திருஅவையின் மிகவும் பொறுப்பான செயலுக்கும், மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலுக்கும் தங்களையேத் தயாரித்து வருகிறார்கள். தங்களது அனைத்து தனிப்பட்ட கருத்துக்களையும் கைவிட்டு, கடவுளாம் இயேசு கிறிஸ்துவை மட்டுமே தங்களது இதயத்தில் வைத்து, திருச்சபை மற்றும் மனிதகுலத்தின் நன்மையை மட்டும் மனதில் இருத்தி செயல்பட அழைக்கப்படுகின்றார்கள்.
யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்படும் பகுதிகளான, இயேசு தான் கைது செய்யப்படுவதற்கு முன்பு மேல் அறையில் தனது சீடர்களுடன் உணவருந்தி அவர்களுக்கு வழங்கிய இறுதி இராவுணவு உரையில் அறிவிக்கப்பட்ட கருத்துக்களை மனதில் இருத்துவோம். “நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை” என்று கூறுகின்றார் இயேசு. அதாவது “நான் உங்களை அன்பு செய்தது போல என்ற வார்த்தைகள் நமது அன்பு எவ்வளவு உயர்ந்ததாக இருக்க வேண்டும் யாரைப்போல இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றன. மேலும் “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” (யோவான் 15:13) என்ற இறைவார்த்தைகள் வழியாக நாம் எத்தகைய அன்பைப் பிறரிடத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.
இயேசுவின் இவ்வரிகள் அன்பின் செய்தியாக விளங்குகின்றன. இதையே இயேசு "புதிய" கட்டளை என்றும் அழைக்கிறார். புதியது, ஏனெனில் இது பழைய ஏற்பாட்டு அறிவுரையான “பிறர் உங்களுக்கு செய்யக்கூடாது என்று நீங்கள் நினைப்பவற்றை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்” என்பதை நேர்மறையாக மாற்றுகின்றது. விரிவுபடுத்துகிறது இயேசுவின் புதிய கட்டளை.
இயேசு வெளிப்படுத்தும் எல்லையற்ற அன்பு அவருடைய அனைத்து சீடர்களின் எண்ணங்களையும் செயல்களையும் வகைப்படுத்த வேண்டும், சீடர்கள் எப்போதும் உண்மையான அன்பை வெளிப்படுத்துபவர்களாக, ஒரு புதிய நாகரிகத்தைக் கட்டியெழுப்ப தங்களையே அர்ப்பணிப்பவர்களாக மாற வேண்டும், இதையே திருத்தந்தை தூய ஆறாம் பவுல் "அன்பின் நாகரிகம்" என்று அழைத்தார். உலகை மாற்றும் ஆற்றல் கொண்டது அன்பு ஒன்று மட்டுமே.
இயேசு இத்தகைய அன்பின் எடுத்துக்காட்டைத் தனது இறுதி இராவுணவின்போது தனது சீடர்களுக்கு ஓர் அடையாள செய்கையின் வழியாக வழங்கினார். தனது இடையை வரிந்து கட்டிக்கொண்டு சீடர்களின் பாதங்களைக் கழுவி பணிவிடை பெற அன்று பணிவிடை புரியவே தான் வந்துள்ளதை அறிவித்துள்ளார். தன்னை காட்டிக்கொடுக்க இருக்கும் யூதாஸ் உட்பட அனைத்து சீடர்களின் பாதங்களையும் பாகுபாடின்றிக் கழுவினார்.
இயேசுவின் இந்த அடையாளச் செயல், திருப்பலியின் முதல் வாசகத்தில் நாம் செவிசாய்த்த இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளுடன் தொடர்புடையது. மேய்ப்பர்களின் அடிப்படைத் தரம் முழுமையான சுய கையளிப்பிற்கான அன்பு என்பதை அவர் நமக்கு நினைவூட்டினார். எனவே இந்த நற்கருணைக் கொண்டாட்டத்தின் இறைவார்த்தைகள் சகோதர அன்பு, இணக்கமான உதவி, திருஅவை ஒற்றுமை மற்றும் உலகளாவிய மனித உடன்பிறந்த உணர்வின் அர்ப்பணிப்புக்கான அழைப்பினை நமக்கு கொடுக்கின்றது.
திருத்தூதர் பேதுருவின் வழிவருபவராக அவரது ஒவ்வொரு பணிகளிலும் ஒன்றிப்பை வளர்க்க அழைப்பு விடுக்கின்றது, கிறிஸ்தவர்களிடத்தில், ஆயர்களிடத்தில், நபர்கள், மக்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையில் ஒன்றிப்பிற்காகப் பாடுபடுபவராக இருக்க வேண்டும். திருஅவை எப்போதும் "ஒன்றிப்பின் இல்லமாகவும் பள்ளியாகவும்" இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
திருத்தூதர் பேதுருவையும் அவரது பணியைத் தொடர்ந்து உருவகப்படுத்துவதன் வழியாக, பூமியில் கிறிஸ்துவை அடையாளப்படுத்துகின்றார். பேதுரு நீ பாறை இந்தப் பாறையின் மேல் திருஅவையைக் கட்டியெழுப்புவேன் என்ற இயேசுவே எடுத்துரைத்தார்.
ஒரு புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பது என்பது வெறுமனே மக்களின் வாரிசு அல்ல, மாறாக திருத்தூதர் பேதுருவே திரும்பி வருவது போன்றதாகும். கடந்த நூறு ஆண்டுகளில் தூய்மையான புனிதமான பெரிய திருத்தந்தையர்களை நமக்கு வழங்கிய தூய ஆவியானவர், திருஅவை மற்றும் மனிதகுலத்தின் நன்மைக்காக கடவுளின் இதயத்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஒரு புதிய போப்பை நமக்கு வழங்குவார் என்று நம்பிக்கையுடன் ஜெபிப்போம்.
தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வகைப்படுத்தப்பட்ட, கடவுளை மறக்க முனைகின்ற இன்றைய சமூகத்தில் அனைவரின் மனசாட்சியையும் ஆன்மிக ஆற்றல்களையும் எவ்வாறு எழுப்புவது என்பதை நன்கு அறிந்த திருத்தந்தையைக் கடவுள் திருஅவைக்கு வழங்குவார் என்று நம்பிக்கையுடன் செபிப்போம். இன்றைய உலகம் அடிப்படை மனித மற்றும் ஆன்மிக விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக திருஅவையிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறது. ஏனெனில், அவை இல்லாமல் மனித சகவாழ்வு எதிர்கால சந்ததியினருக்கு சிறந்ததாகவோ அல்லது நன்மையைத் தருவதாகவோ இருக்காது.
திருஅவையின் தாயான தூய கன்னி மரியா, தனது பரிந்துரையில் கர்தினால்களின் மனதையும் இதயத்தையும் தூய ஆவியார் ஒளிரச் செய்து இக்காலத்திற்கு ஏற்ற திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதில் உதவி புரிவாராக.
இவ்வாறு கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் தனது மறையுரையினை நிறைவு செய்ததும், நம்பிக்கையாளர் அறிக்கையானது பாடலாக இலத்தீன் மொழியில் பாடப்பட்டது. அதன்பின் உலகளாவிய திருஅவை, உரோமைத் திருப்பீடம், பூமியில் வாழும் மக்கள், தேவையில் இருக்கும் மனித குல மக்கள், மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோருக்காக நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் பிரெஞ்சு, சுவாஹிலி, போர்த்துக்கீசியம், மலையாளம், சீனம் ஆகிய மொழிகளில் எடுத்துரைக்கப்பட்டன. காணிக்கைப்பவனியினைத் தொடர்ந்து நற்கருணை வழிபாட்டினை கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா அவர்கள் வழிநடத்தினார்.
அன்னை மரியின் பாடலுடன் திருப்பலியானது நிறைவுக்கு வந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்