திருத்தந்தை பதினான்காம் லியோ வாழ்க்கை வரலாறு
மெரினா ராஜ் - வத்திக்கான்
புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள (ஏறக்குறைய 70) 69 வயதுடைய கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரவோஸ்ட் அவர்கள் திருஅவையின் 267 ஆவது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அகுஸ்தீன் சபையைச் சார்ந்த முதல் திருத்தந்தை என்னும் புகழ் பெற்ற திருத்தந்தை அவர்கள் பதினான்காம் லியோ என்னும் பெயரினை தனது பெயராக ஏற்றுள்ளார். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பின் திருஅவை பொறுப்பேற்கும் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த இரண்டாவது திருத்தந்தையாவார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வடக்குப் பகுதியில் பிறந்து தெற்கில் பணியாற்றிய பெருமைக்குரியவர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கல்லோ மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், திருப்பீட ஆயர்பேரவைக்கான தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டவர்.
புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், 1955 -ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று சிகாகோவில் உள்ள இல்லினோய்ஸ் என்னுமிடத்தில் பிறந்தவர். இவரது தந்தை Louis Marius Prevost பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழி பேசும் வம்சாவளியைச் சார்ந்தவர். தாயார் Mildred Martínez இஸ்பானிய மொழி பேசும் வம்சாவளியைச் சார்ந்தவர். இவருக்கு Louis Martín மற்றும் John Joseph என்னும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
தனது குழந்தைப் பருவத்தையும், இளமைப் பருவத்தையும் அமெரிக்காவில் கழித்த திருத்தந்தை அவர்கள், முதலில் புனித அகுஸ்தீன் சபையின் இளங்குருமடத்தில் கல்வி கற்றார். அதன்பின்னர், பென்சில்வேனியாவில் உள்ள வில்லானோவா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். 1977 -ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தில் கணிதத்திலும் தத்துவ இயலிலும் பட்டம் பெற்றார். அதே ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள் சிகாகோவில் உள்ள செயிண்ட் லூயிஸில் உள்ள அகுஸ்தீன் (OSA) துறவற இல்லத்தில் இணைந்து துறவறப் பயிற்சி பெற்றார். 1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 2, அன்று தனது முதல் வார்த்தைப்பாட்டினையும், 1981- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29, அன்று அவர் தனது நிரந்தர வார்த்தைப்பாட்டினையும் அளித்தார்.
சிகாகோவில் உள்ள கத்தோலிக்க இறையியல் ஒன்றியத்தில் இறையியலில் பட்டம் பெற்ற திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், தனது 27 ஆவது வயதில் உரோமில் உள்ள ஆஞ்சலிக்கம் திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் திருஅவைச் சட்டம் பயில்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின் 1982 -ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் நாள், சாந்தா மோனிகாவின் அகுஸ்தினியானோ கல்லூரியில் பேராயர் Jean Jadot அவர்களால் குருத்துவ அருள்பொழிவு செய்யப்பட்டார்.
1984 - ஆம் ஆண்டு முதுகலைக் கல்வியைப் பெற்ற திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், அடுத்த ஆண்டு (1985) தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையைத் தயாரிக்கும்போது, பெருவின் பியூராவில் உள்ள சுலுகானாஸிற்கு அகுஸ்தீன் சபை மறைப்பணிக்காக (1985-1986) அனுப்பப்பட்டார். 1987 -ஆம் ஆண்டில், தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்த திருத்தந்தை அவர்கள், இல்லினோய்ஸின் ஒலிம்பியா ஃபீல்ட்ஸில் உள்ள "நல் ஆலோசனை அன்னை" என்ற அகஸ்டினியன் மறைமாநிலத்தின் இறைஅழைத்தல் இயக்குநராகவும், மறைப்பணி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.
1999 -ஆம் ஆண்டில் சிகாகோவின் அகுஸ்தீன் சபை மறைமாநிலத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் அகுஸ்தீன் சபைத்தலைவராக முதன்முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் 2007- ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2013-ஆம் ஆண்டு தனது சிகாகோ மறைமாநிலத்திற்குத் திரும்பிய திருத்தந்தை அவர்கள், சபையின் முதல் ஆலோசகர், இறைஅழைத்தல் இயக்குநர் என பல பொறுப்புக்களை ஏற்றார். 2014 -ஆம் ஆண்டு நவம்பர் 3 -ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பெருவின் சிக்லாயோ மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், அதே நேரத்தில் சுஃபார் மறைமாவட்டத்தின் பட்டம்சார் ஆயராகவும் நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டு டிசம்பர் 12 ஆம் நாள் குவாதலூப்பே அன்னை மரியா விழாவனறு அன்னை மரியா பேராலயத்தில் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
2015 செப்டம்பர் 26, அன்று, சிக்லாயோ மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு, 2018 மார்ச் மாதம் பெரு மறைமாவட்ட ஆயர் மாநாட்டின் இரண்டாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதில் அவர் பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராகவும் கலாச்சாரம் மற்றும் கல்வி ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
2019 ஆம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் இவரை அருள்பணியாளர்களுக்கான அவையின் உறுப்பினராகவும், அடுத்த ஆண்டு (2020) ஆயர்களுக்கான அவையின் உறுப்பினராகவும் இணைத்தார். அதே ஆண்டு, ஏப்ரல் 15 அன்று, பெருவின் கல்லோ மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
2023 -ஆம் ஆண்டு சனவரி 30, அன்று, ஆயர்களுக்கான திருப்பீடத்துறையின் தலைமைத் தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீடச்சங்கத்தின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு உரோமிற்கு வந்த திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களைப் பேராயராக நியமித்தார் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற கர்தினால்கள் அவையில் அவரைத் கர்தினாலாக அறிவித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களது கடைசி திருத்தூதுப் பயணங்களிலும் பங்கேற்றவர். 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 4 முதல் 29 வரை மற்றும் 2024 -ஆம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 27 வரை உரோமில் நடைபெற்ற 16ஆவது உலக ஆயர்கள் முதல் மற்றும் இரண்டாவது மாமன்றத்தில் பங்கேற்றவர். அகுஸ்தீன் சபை தலைவராகவும், அனைத்து துறவற சபைத்தலைவர்கள் ஒன்றியத்தின் (USG) பிரதிநிதியாகவும் அனுபவம் பெற்றவர்.
2023 -ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நற்செய்தி அறிவிப்புப் பணிகளுக்கான திருப்பீடத்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
மூன்று நாள்களுக்குப் பின் அதாவது பிப்ரவரி 9 அன்று வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்ட காவல் மற்றும் ஆயுதப்படை வீரர்களுக்கான யூபிலி திருப்பலியினை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து சிறப்பித்தவர்.
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உடல் நலத்திற்காக 2025- ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று வத்திக்கான் வளாகத்தில் சிறப்பு செபமாலையை வழிநடத்தியவர்.
திருஅவையின் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் பணி சிறக்க தொடர்ந்து செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்